ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

இம்ரான் கானும் அவரது புதிய பாகிஸ்தானும்

ராணுவமும், அதிகாரவர்க்கமும் எந்த அளவு சுதந்திரத்தை அனுமதிக்கும் என்பதைப் பொறுத்தது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

பாகிஸ்தானின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் இம்ரான் கான் ரெஜிப் தையீப் எர்டோன், ரோட்ரிகோ டுடேர்தே ஆகிய வலதுவாரி பரப்பியவாதத் தலைவர்களுடன் ஒப்பிடப்படுகிறார். இது மிகவும் எளிமைபடுத்தப்பட்ட, மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு தேய்வழக்காகிப்போன ஓர் ஒப்பீடு. தேர்தலில் வெற்றி பெற்ற பெரும்பாலான வலதுசாரி பரப்பியவாதத் தலைவர்களிடையே பல அம்சங்களில் ஒற்றுமையை காண முடியும். ஆனால் குறிப்பிட்ட பின்னணிச் சூழல்கள், வரலாறுகள் இத்தகைய இணைகளை, ஒப்பீடுகளை பலவீனமானதாகவும் பொருளற்றதாகவும் ஆக்குகிறது. ஆகவே கானை ‘’மோடி’’ என்றும் அல்லது ‘’டிரம்ப்’’ என்று கூறுவது தவறு மட்டுமல்ல, அது ஒவ்வொரு அரசியல் தலைவரையும் வகைப்படுத்தும் குறிப்பான பல அம்சங்களை பலவீனப்படுத்துகிறது. கான் யாராக அல்லது எத்தகையவராக இருப்பார் என்பது அவரை விட வலிமையான நிறுவனங்கள், குறிப்பாக கான் நன்றிக்கடனபட்டிருக்கும் ராணுவம் அவரை என்னவாக அனுமதிக்கிறது என்பதைப் பொறுத்தது.

பாகிஸ்தானின் 11ஆவது பொதுத் தேர்தல் சுதந்திரமாகவோ நேர்மையாகவோ நடக்கவில்லை என்பது முதல் விஷயம். விரிவான ஆவணப்படுத்தல், ஆதாரங்கள் மற்றும் ஆங்காங்கு சொல்லப்படும் கதைகள், குற்றச்சாட்டுகளின்படி தேர்தலுக்கு முன்னமே, அதிலும் பல மாதங்களுக்கு முன்னமே முறைகேடுகள் நடந்திருப்பதை காட்டுகின்றன. மேலும், தேர்தல் நாளான ஜூலை 25ஆம் தேதி அன்று கூட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் வெளிப்படைத்தன்மை என்பது இல்லை. கடுமையான போட்டியிருந்த தேர்தல் இது என்பதால் பல தொகுதிகளில் வென்றவருக்கும் தோற்றவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகச் சிறியது. இந்த வித்தியாசத்தை விட அதிக எண்ணிக்கையிலான வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். பல தொகுதிகளில் மறு வாக்கு எண்ணிக்கைக்கான கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் தகுதிநீக்கம் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டது உட்பட தேர்தலுக்கு முன்னமே நடந்த முறைகேடுகளுகளைத் தவிர்த்து, ஊடகங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது, வெளிப்படையாகத் தெரியுமளவிற்கு நீதித்துறை கட்சிச் சார்புடன் நடந்துகொண்டது, செரீபின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் (பிஎம்எல்-என்) பெறக்கூடிய வாக்குகளை குறைக்க பல புதிய அரசியல் கட்சிகளை உருவாக்கப்பட்டது என பல முறைகேடுகள் நடந்தன. தெரீக்=இ-லப்பைக் பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய கட்சியை ராணுவ ஆதரவுடன் உருவாக்கியது இதற்கு முக்கியமான உதாரணமாகும். இது பி.எம்.எல்.-என் கட்சியின் வாக்குகளை குறைத்து 13 தொகுதிகளில் அக்கட்சி தோல்வியடைய வழிவகுத்தது. பி.எம்.எல்.-என் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை இம்ரானின் கட்சியில் சேரும்படி அல்லது சுயேட்சையாக போட்டியிடும்படி செய்தது மற்றொரு உதாரணம். இவர்கள் இப்போது ‘’தேர்ந்தெடுக்கப்படும் வல்லமை பெற்றவர்கள்’’ என்று தரக்குறைவாக அழைக்கப்படுகின்றனர்.

இந்தத் தேர்தல் நியாயமாகவோ நேர்மையாகவோ நடக்கவில்லை என்பதை, எந்த வகையிலும் செரீப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை உறுதிபடுத்துவதே இந்தத் தேர்தலில் நோக்கம் என்பதை ஒருவர் அங்கீகரிப்பார் எனில், மக்கள் அளித்த வாக்குகள் தெரிவிப்பது என்ன என்பது பற்றிய சமூக அறிவியலாளர்களின் பகுப்பாய்வு குறைபாடானது, அநேகமாகத் தவறானது என்பதை உணர்வார். தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் பி.எம்.எல்.-என் வெற்றி பெறும், பஞ்சாபிலும், மத்தியிலும் அதிகபட்ச இடங்களைப் பெறும் கட்சியாக இருக்கும் என்று கூறின. அப்படி நடந்திருந்தால் முடிவுகளைப் பற்றிய அலசல்கள் மிகவும் வேறுமாதிரியாக இருந்திருக்கும். இம்ரானுக்கு ஆதரவாக தேர்தல்கள் கைப்பற்றப்பட்ட பின்னர் இந்தத் தேர்தல் ‘’ஊழல் பற்றியது’’ என்றும் இம்ரானின் வெற்றி பாகிஸ்தானின் புதிய நடுத்தர வர்க்கத்தின் வெற்றி என்றும் சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுதான் உண்மை என்று கூறுவது சரியல்ல. சமூக அறிவியல் அளவுகோல்களை பயன்படுத்தி இந்த முடிவுகளை விளக்க முற்படுபவர்கள் தங்களது பகுப்பாய்வு குறித்து கவனத்துடன் இருக்க வேண்டும். இதற்கு நேர்மாறான பகுப்பாய்வை முன்வைப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.

எப்படியிருந்தபோதிலும் இம்ரான் அடுத்த வாரம் பாகிஸ்தானின் 19ஆவது பிரதமராக ஆகியிருப்பார். பாகிஸ்தானும், அதன் அண்டை நாடுகளும், உலகமும் இந்த யதார்த்தத்துடன்தான் வாழ்ந்தாக வேண்டும். எந்த தளத்திலும் ஆட்சி செய்த அனுபவம் ஏதுமில்லாமல், ஆட்சியில் எந்த அனுபவமுமற்ற குழுவுடன், அனைவரும் முதல் முறை அமைச்சர்கள், வருவது இம்ரானின் புதிய பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கப்போகும் அரசியலுக்கு புதிய, தூய்மையான அணுகுமுறையை கொண்டுவரும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனாலும், 1988ல் பெனாசீர் பூட்டோ பாகிஸ்தான் அரசியலில் புதுமுகமாக இருந்ததற்குப் பிறகு, இம்ரான் நாடாளுமன்றத்தில் மிக வலிமையான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த முறை அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் அரசாங்கத்தை அமைப்பவர்களை விட பாகிஸ்தான் அரசியல் மிகுந்த அனுபவம் கொண்டவர்கள். பஞ்சாபில் கூட இம்ரானின் வேட்பாளர் பகைமையான சூழலையே எதிர்கொள்வார்.

சர்வாதிகாரமானவர், பிடிவாதமானவர், அகங்காரம் கொண்டவர், நிதானமற்றவர் என்று கருதப்படும் இம்ரான் தனது இந்தக் குணங்களை எப்படி வெற்றிகொள்கிறார் என்பது அவரது முன்னேற்றத்திற்கும் அவரது அரசாங்கத்தின் முன்னேற்றத்திற்கும் முக்கியமான விஷயம். ஆனால் பாகிஸ்தானிற்கும் உலகத்திற்கும் ஆற்றிய அவரது வெற்றியுரையில் இந்தக் குணங்கள் எதுவும் வெளிப்படவில்லை. நிதானமான நிலையில் அவர் ஆற்றிய நிதானமான உரையில் சமூக நீதி, அனைவரையும் அரவணைத்து செல்லுதல், மன்னித்தல், நட்பு, தூய்மையான மற்றும் சிக்கனமான அரசாங்கம், அண்டை நாடுகளுடன் சுமுகமான மேம்பட்ட உறவு ஆகியவற்றைப் பற்றி குறிப்பிட்டதுடன் 8ஆம் நூற்றாண்டில் மெதினாவில் தீர்க்கதரிசி முகமது நிறுவிய அரசை ‘’ஊக்கத்தை தரும் ஒன்றாக’’ சுட்டிக்காட்டி இஸ்லாமிய கொள்கைகளில் சமீபத்தில் அவருக்கு ஏற்பட்டுள்ள தனிப்பட்ட நம்பிக்கை பற்றியும் குறிப்பிட்டார்.

இம்ரானின் நோக்கமும், உள்ளவுறுதியும் உண்மையானதாக இருக்கலாம். அவரது தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கையை பல முரண்பாடுகள் சூழ்ந்துள்ளன. நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையைப் பெறவே அவர் தான் முன்னர் கடுமையாக குறைகூறியவர்களுடன் சமரசம் செய்துகொள்ள நேர்ந்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் அரசியல் பொருளாதாரம் கடுமையான சவால்களைக் கொண்டது. பாகிஸ்தான் தனது அண்டை நாடுகளுடன் எத்தகைய உறவு வைத்திருக்க வேண்டும் என்பதை ராணுவம் கட்டுப்படுத்தும் நிலையில், இம்ரானை தேர்ந்தெடுத்ததற்கான விலையை அது நிச்சயம் அவரிடம் கேட்கும், பொருளாதாரத்தில் பெரிதும் பிறரை சார்ந்துள்ள நிலையில், பகைமையான, அனுபவம் மிக்க எதிர்க்கட்சிகள் உள்ள நிலையில் புதிய பாகிஸ்தான் இம்ரான் மாற்ற விரும்பும் பழைய பாகிஸ்தானின் பெரும் பகுதியை தன்னுடன் கொண்டுவருகிறது.

எஸ் அக்பர் சைதி (sakbarzaidi@gmail.com) கராச்சியில் வாழும் அரசியல் பொருளாதார நிபுணர்.

Back to Top