ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

ஏனிந்த பழிதீர்க்கும் வெறி?

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளிப்பதில் அரசாங்கம் தீவிரமாக இருக்கையில் மாருதி சுசூகி தொழிலாளர்கள் பெரும் இன்னலை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

ஜோடிக்கப்பட்ட கொலை வழக்கில் மாருதி சுசூகி தொழிலாளார்கள் 13 பேருக்கு, இவர்களில் 12 பேர் மாருதி சுசூகி தொழிலாளர் சங்கத்தின் பொறுப்புகளில் இருப்பவர்கள், ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதற்கு எதிராக ஜூலை 18ஆம் தேதி குருகிராமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘’ஜோடிக்கப்பட்டது’’ என்று நாம் கூறுவதற்குக் காரணம் காவல்துறையும் மாருதி சுசூகி நிறுவனமும் வஞ்சகமாக கூட்டு சேர்ந்து ஆதாரங்களை புனைந்தனர் என்பதை உண்மையான தகவல்கள் காட்டுவதாலேயே. குற்றம்சாட்டப்பட்ட 148 தொழிலாளர்களில் 117 பேர் விஷயத்தில் இதை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஆர் பி கோயலே ஒப்புக்கொண்டார். அரசுத் தரப்பின் ஒரு சாட்சி கூட இவர்களை அடையாளம் காட்ட முடியவில்லை என்பதால் இவர்கள் விடுவிக்கப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட 148 தொழிலாளர்களும் ‘’சந்தேகத்திற்குரியவர்கள்”” என்று காவல்துறையிடம் நிறுவனம் அளித்த பட்டியலில் இருந்த பெயர்களே தவிர காவல்துறையினரின் சுதந்திரமான புலனாய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. ’’குற்றம்’’ நடந்த இடமான தொழிற்சாலை வளாகத்தில் குற்றம் நடந்ததாக சொல்லப்படும் நேரத்தில் இருந்த குற்றச்சாட்டிற்கு ஆளாகாத தொழிலாளர்களின் வாக்குமூலங்களை நீதிபதி கோயல் அனுமதிக்கவில்லை என்ற உண்மை ஆச்சர்யமளிக்கிறது.

தங்களது சங்கத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப் போராடிய தொழிலாளர்களிடம் பரிவுடனிருந்த பணியாளர்களுக்கான மேலாளரான அவனிஷ் தேவ் கொல்லப்பட்டு இந்த ஆண்டு ஜூலை 18ஆம் தேதியுடன் ஆறு ஆண்டுகள் ஆகின்றன. 2012ஆம் ஆண்டு இதே நாளில் நிறுவனத்தால் தூண்டப்பட்ட தகராறில் இறந்தது தேவ் மட்டுமே. எங்கிருந்து உருவானது என்று தெரியாத தீயின் காரணமாக உருவான புகையில் மூச்சுத்திணறி தேவ் இறந்தார். தொழிலாளர்கள் மீது மாருதி சுசூகி நிர்வாகமும் ஹரியானா அரசாங்கமும் கொண்டுள்ள பழிதீர்க்கும் உணர்வு கொடூரமானது. ஆகவே, இப்போது பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடக்கும் ஹரியானா மாநில அரசாங்கம் ஆயுள் தண்டனையளிக்கப்பட்ட 13 தொழிலாளர்களுக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டுமென பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. தனக்கு முன்பிருந்த காங்கிரஸ் அரசாங்கத்தைப் போலவே பாஜக அரசாங்கமும் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கக்கூடிய வகையிலான தண்டனையை அளிக்க தீவிரமாய் இருப்பது ஏன்?

13 தொழிலாளர்களுக்கு தூக்கு தண்டனையளிக்க வலியுறுத்துவது ஏன் என அரசுத்தரப்பின் சிறப்பு வழக்கறிஞரான அனுராக் ஹூடாவை கேட்டபோது அதற்கு அவர், ‘’நமது (இந்தியாவின்) தொழிற்துறை வளர்ச்சி வீழ்ச்சியடைந்துவிட்டது. நேரடி அந்நிய முதலீடு வற்றிவிட்டது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்று மோடி அழைப்பு விடுத்திருக்கிறார், ஆனால் இத்தகைய நிகழ்வுகள் நமது (நாட்டின்) பிம்பத்தின் மீதான கறையாகும்,” என்று கூறினார். ஆக, முறையான வேலை வேண்டும், தொடர்ந்து இருக்கும் வேலைக்கு ஒப்பந்தப் தொழிலாளர்கள் கூடாது, தொழிலாளர்களின் பிரச்னைகள் தீர குரல்கொடுத்ததற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்ட தொழிற்சங்க உறுப்பினர் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவது போன்ற தங்களது உரிமைகளை வென்றெடுக்க சுதந்திரமான தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை தொழிலாளர்கள் இழக்க வேண்டும். தொழிற்துறை வளர, அந்நிய முதலீடு அதிகரிக்க நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்க உரிமை இருக்க வேண்டும். சுதந்திரமான தொழிற்சங்கங்களின் செயல்பாட்டை முடக்குவதற்காக தொழிற்சங்கத்தில் செயல்படும் தொழிலாளர்களை நிர்வாகம் தன் விருப்பத்திற்கேற்ப இடமாற்றமோ, தாற்காலிக நீக்கமோ, வேலைநீக்கமோ செய்யலாம். மாருதி நிறுவனத்தின் ஆதரவு பெற்ற கைக்கூலி தொழிற்சங்கத்திற்கு எதிராக தங்களது சுதந்திரமான தொழிற்சங்கத்தை பதிவு செய்ய, அதற்கு அங்கீகரம் பெற வேறு வழியின்றி மாருதி சுசூகி தொழிலாளர்கள் இரண்டு ஆண்டு காலம் இடைவிடாத போராட்டத்தை நடத்தி 2012 ஜனவரி இறுதியில், அதாவது 2012 ஜூலை 18ஆம் தேதி நிகழ்விற்க்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர், தங்களது கோரிக்கையில் வென்றனர்.

நிரந்தரப் பணியாளர்கள் செய்யும் அதே வேலையை மிகக் குறைந்த கூலிக்கு செய்ய தன் விருப்பம் போல ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கும் உரிமையும், மிகக் கொடூரமான வேலை சூழலை திணிப்பதற்கான உரிமையும் நிர்வாகத்திற்கு இல்லாது போய்விடுமோ என்பதுதான் உண்மையான பிரச்னை. இந்த நிலைமையை உறுதிபடுத்தவே பாஜகவும், காங்கிரஸ் கட்சியும், அரசு எந்திரமும் நிறுவனத்தின் நிர்வாகத்துடன் சேர்ந்து செயல்படுகின்றன. காங்கிரஸ் கட்சி ஹரியானாவில் ஆட்சியிலிருந்தபோதும், இப்போது பாஜக இருக்கிறபோதும் இரண்டுமே மொத்த இந்திய தொழிலாளர் வர்க்கத்தையே அச்சுறுத்துவதற்காக அரசு எந்திரத்தை, காவல்துறை உட்பட அனைத்தையும், பயன்படுத்தி மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீது வழக்கு ஜோடிக்க சதி செய்ததன. மேலே குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை தொழிலாளர்கள் எதிர்த்தால் மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு நேர்ந்த அதே கதிதான் அனைவருக்கும் என்ற அபாயகர எச்சரிக்கையை அவர்கள் விடுத்துள்ளனர். தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்குவதில் பாஜக மேலும் அதிக ஈவிரக்கமற்று நடந்துகொள்ளக் காரணம் ‘’இந்தியாவில் தயாரிப்போம்’’ என்ற மோடியின் கொள்கையை எப்படியாவது வெற்றிகரமாக்குவது என்ற தீர்மானத்துடன் அது இருப்பதே. அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் லாபத்திற்கு உறுதியளிக்க இதை விட நல்ல வழி என்ன இருக்கிறது!

நிறுவனத்தின் உள்ளக்கிடக்கைகள் தெளிவாகத் தெரிவது என்பது ஏற்கனவே ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள 13 தொழிலாளர்களுக்கு மரண தண்டனை அளிக்கக் கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டிருப்பதிலிருந்து மட்டுமல்ல. 2012 ஜூலை 18 நிகழ்விற்குப் பிறகு உடனடியாக 2012 ஆகஸ்டிலேயே சுமார் 2300 தொழிலாளர்களை எந்தவிதமான விசாரணையுமின்றி, அவர்கள் செய்ததாக சொல்லப்படும் ‘’குற்றங்கள்” தொடர்பாக அவர்கள் வழக்கு தொடுக்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டு  இடமாற்றமும், வேலைநீக்கமும் செய்யப்பட்டனர். மேலும் நீதிமன்றத்தால் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட 117 தொழிலாளர்களுக்கு எதிராக ஹரியானா அரசாங்கம் இப்போது மேல் முறையீடு செய்துள்ளது.

எப்படியாவது மரண தண்டனை வாங்கித்தந்துவிட வேண்டுமென்று அரசாங்கம் முயலும் இந்த 13 தொழிலாளர்கள் விஷயத்தில் இன்னமும் நம்பிக்கைக்கு கொஞ்சம் இடமிருக்கிறது. இந்தத் தொழிலாளர்களுக்காக மூத்த வழக்கறிஞர்களான வீரேந்திர குரோவர், ரிபாக்கா ஜான் மற்றும் ஆர் எஸ் சீமா வாதாடிவருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மேலாளர் தேவ் காயமுறும்படி செய்தார்கள், அவர் மூச்சுத்திணறி இறந்துபோகக் காரணமான புகையை உருவாக்கிய தீயை மூட்டினார்கள் என்பதற்கான ஆதாரங்களை உற்பத்தி செய்வது என்பது அரசுத் தரப்பிற்கு நிச்சயமாக கடினமாகவே இருக்கும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top