ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

பாலஸ்தீனத்தின் இருப்பை மறுத்தல்

உலக அளவில் வளர்ந்துவரும் தேசியவாதச் சொல்லாடலின் பிரதிபலிப்பே யூதரைத் தவிர்த்து பிறரை விலக்கும் இஸ்ரேலின் தேசியச் சட்டம்.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

பாலஸ்தீன மக்களை அவர்களது மண்ணிலிருந்து என்றென்றைக்குமாக வெளியேற்றும் திட்டத்துடன் ‘’இஸ்ரேல், யூத மக்களின் தேச அரசு’’ என்ற கடுமையான சட்டத்தை இயற்றி பெரும் சீற்றத்தை உருவாக்கியிருக்கிறது இஸ்ரேல். உலக நாடுகள் இதை கண்டனம் செய்த பிறகு அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. நீதிக்கு சார்பாக நிற்பதில் புவியரசியல் யதார்த்தம் முன்னுக்கு வருகிறபோது நீதியை கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவதுதான் உலக நாடுகளின் முன்னுள்ள ஒரே வழி. உலகின் ஒரே வல்லரசின் நிபந்தனையற்ற ஆதரவை இஸ்ரேல் பெற்றுள்ளது என்ற உண்மைக்கு உலக நாடுகள் பழகிப்போய் வெகு காலமாகிறது. அதன் படை பலத்திற்கு அதன் எதிரி நாடுகள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் சமமாக முடியாது, அதை போர்க்களத்தில் எதிர்கொள்ளவும் முடியாது. இஸ்ரேலின் ஒட்டுமொத்த வரலாறே எல்லா குற்றங்களுக்குமான தண்டனைகளிலிருந்து விலக்கு பெற்ற ஒன்றாக இருப்பதாலும், குடிமக்களை நடத்துவதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து மனிதாபிமான முறைகளையும் மீறுகிற அரசாக அது இருப்பதாலும்  தார்மீக தளத்திலும் அதை கேள்வி கேட்பதில் பொருளில்லை.

உலகின் இந்த அலட்சியத்திற்கு இன்றைய சூழலில் ஆழமான காரணம் இருக்கக் கூடும். இதற்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட விழுமியங்களை கைவிட்டுவிட்டு காலம்கடந்த கருத்தாக்கங்களான இனம், நிறம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்குதில் உலகிற்கு இஸ்ரேல் வழிகாட்டியாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். எல்லா விதமான சமத்துவமின்மைக்கும் தீர்வாக கருத்தப்பட்ட உலகளாவிய குடியரசு விழுமியங்கள் குறித்து அறிவொளிக் காலத்திலிருந்து அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் வெறும் வெற்றுமொழிகள் என்பதற்கு சாட்சியாக இஸ்ரேல் நிற்கிறது.

ஜூலை 19ஆம் தேதி இஸ்ரேலிய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்தப் புதிய யூத தேசிய அரசுச் சட்டமானது தீவிர ஜியோனிஸ்ட் (யூத அரசை நிறுவுவதில் தீவிரமாக இருப்பவர்கள்) வட்டாரங்களில் பெரும் உற்சாக வரவேற்பை பெற்றுள்ளது. ஜியோனிஸ தலைவர்களின் செயல்களில் வெளிப்படும் அவர்களது உள்ளக்கிடக்கைகளை கவனத்தில் கொள்வதை விடுத்து அவர்களது வார்த்தை ஜாலங்களில் நம்பிக்கை வைத்தவர்கள் இஸ்ரேலிய அரசு எந்த விழுமியங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டதோ அவற்றிற்கு துரோகம் இழைக்கப்பட்டுவிட்டது என முனகிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த தேசிய அரசு சட்டத்தைப் பற்றி பேசும்போது அது இஸ்ரேலில் சுதந்திர பிரகடனத்தில் பொறிக்கப்பெற்ற விழுமியங்களுக்கு துரோகம் செய்துவிட்டது என்று புகழ்பெற்ற இஸ்ரேலிய இசையமைப்பாளரும் பியானோ கலைஞருமான டேனியல் பேரென்போயிம் வேதனைப்பட்டுள்ளார். 1948ல் இஸ்ரேல் சுதந்திர பிரகடனம் செய்த அந்தக் கணம் ஐரோப்பாவிலிருந்து குடியேறிய யூதர்களை இஸ்ரேலியர்களாக்கியது, ‘’எல்லா அண்டை அரசுகளுடனும் மக்களுடனும் நல்ல உறவையும் சமாதானத்தையும்’’, அனைவருக்கும் சமத்துவத்தையும் உறுதியளித்த தேசத்தில் குடிமக்களாக அவர்களை ஆக்கியது.

பேரென்போயிமின் உணர்வுகள் உண்மையானவை என்றாலும் அவரின் அப்பாவித்தனம் பேராச்சரியம் அளிக்கிறது. வரலாற்றின் இத்தகைய கணங்களைப் பற்றி சுருக்கமாகச் சொல்வதென்றால் அத்தகைய வாக்குறுதிகள் தரப்படுவதே ஏமாற்றப்படுவதற்காகத்தான். இதற்கு முன்னுதாரணங்களாக அமெரிக்கா பிரகடனப்படுத்திய உரிமைகளின் சட்டவரைவையும் பிரெஞ்சுப் புரட்சியின் மனிதன் மற்றும் குடிமக்கள் உரிமைகளின் பிரகடனத்தையும் கூறலாம். இரண்டுமே அடிமைமுறை, நிறவெறி, ராணுவ வெற்றிகள், காலனியாதிக்கம் ஆகியவற்றினால் தொடக்கத்திலேயே துரோகமிழைக்கப்பட்டன.

ஆனாலும் துரோகமிழைக்கப்பட்ட இலட்சியவாதம் என்ற பண்பை இஸ்ரேலின் தோற்றத்திற்கோ, தொடர்ச்சியான அதன் இருப்பிற்கோ பொருத்த முடியாது. ஏனெனில் தனது தொடக்கத்திலேயே ஜியோனிஸ திட்டமானது பாலஸ்தீன மக்களை வெற்றிகொண்டாக வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது, ஏகாதிபத்திய சக்தியின் உதவியுடன் அதை சாதித்தது. தனக்கான இடமான பாலஸ்தீனத்தில் தனது கவனத்தை குவித்தபோது ஜியோனிஸம் தான் உருவாக்கிய முழக்கத்தின் வழியே பாலஸ்தீனர்களின் இருப்பையே மறுதலித்தது: ‘’நிலம் இல்லாத மக்களுக்கு, மக்கள் இல்லாத நிலம்.’’

இன அழித்தொழிப்பின் மூலமே இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. ஆனாலும் இன்றும் யூத அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பாலஸ்தீனர்கள் சிறுபான்மையினராக இருக்கவே செய்கிறார்கள். 1967 ராணுவ வெற்றி தந்த உற்சாகத்தில் கொஞ்ச காலத்திற்கு மறந்திருந்தாலும் இன்று இஸ்ரேல் ஆட்சியின் கீழுள்ள மக்கள்தொகையில் யூதர்கள் சிறுபான்மை என்ற ஏற்றுக்கொள்ள முடியாத யதார்த்தத்தின் காரணமாக ஜனநாயக விழுமியங்களுக்கும் யூத முன்னுரிமைகளுக்கும் இடையே மோதல் எழுந்தது.

உலகின் கடினமாக ஒரு பகுதியிலிருந்த ஒரே ஜனநாயக நாடு இஸ்ரேல்தான் என்று பல ஆண்டுகளாக காட்டிக்கொண்டு இப்போது வெளிப்படையாக இன அடிப்படையில் மக்களை பாகுபடுத்துவதை அது ஆரத்தழுவிக்கொண்டிருப்பது ஆச்சர்யமளிக்கவில்லை. மேற்குலகில் உள்ள இஸ்ரேலின் புரவலர்கள், குறிப்பாக அமெரிக்கா பண்பாட்டு பன்மைத்துவத்தை ஓர் அடிப்படையாக விழுமியமாக கருதுவதை நிறுத்திக்கொண்ட நேரத்தில், ஜனநாயகத்தை மக்களின் உரிமையாக அல்லாமல் அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகையாக கருதும் நேரத்தில் இந்தப் புதிய சட்ட இயற்றப்பட்டிருப்பதால் பெரும் சீற்றம் எதையும் இது ஏற்படுத்தவில்லை.

இஸ்ரேல் உருவானபோதே அது காலத்திற்கு ஒவ்வாத ஒன்றாகவே இருந்தது. காலனிய சலுகைகளை இழந்த பிறகு மேற்கத்திய முதலாளித்துவம் தன்னை மறுகட்டமைப்பு செய்துகொண்டது. மக்கள் நல அரசாக தன்னை வடிவமத்துக்கொண்ட மேற்கத்திய முதலாளித்துவம் தனது பொருளாதாரம் தொடர்ந்து இயங்க முன்னாள் காலனி நாடுகளிலிருந்து குடியேற்றக்காரர்களை தருவித்தது. 1980களின் வாக்கில் மக்கள் நலம் மற்றும் வளர்ச்சி கருத்தியல் பார்வைகள் பெரும் நெருக்கடியில் சிக்கின. இதற்கான தீர்வை நவீன-தாராளவாதத்தில் தேடின. அனைத்து மக்களும், நிற, இன, பால், மத பாகுபாடின்றி சமமாக நடத்தப்படுவர் போன்ற வாக்குறுதிகள் அதிகாரப்பூர்வகாக அப்படியே நீடித்தாலும் நாட்டிற்குள்ளும், நாடுகளுக்கு மத்தியிலும் சமத்துவமின்மை அதிகரித்த நிலையில் யதார்த்தத்தில் அவற்றை பேணுவது கடினமாகிவிட்டது.

அடித்தட்டு மக்களின் அதிருப்தி அதிகரித்தது உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தில் பாதுகாப்பின்மையை உருவாக்கியதுடன் சலுகைகள் குறித்த அவர்களின் உரிமை கோரலை புதுப்பித்தது. செல்வச்செழிப்பான காலங்களிலிருந்தே இனப் பாகுபாடு மிக மெல்லிய மேற்பூச்சால் மறைக்கப்பட்டிருந்தது, இப்போது புதிய தேசிய சொல்லாடல்களில் அது இனக்குழு வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

யூத மக்களின் தேச அரசின் நிரந்தரத் தன்மையை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்த அநாகரீகமான, நுண்ணுணர்வு ஏதுமற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் ஆட்சிக்கு வரும்வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. இரு தேச அரசு நிலைபாட்டை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு நிராகரித்துவிட்டார். ஆனால், இன்னும் வெகு காலத்திற்கு மொத்த பாலஸ்தீன நிலப்பரப்பிலும் யூதக் கட்டுப்பாட்டை இஸ்ரேல் தொடரும் என அவர் கூறியுள்ளார்.

இவ்வளவு மோசமான தனிமைப்படலிலும் நிலைமையை பாலஸ்தீன மக்கள் உறுதியாக எதிர்கொள்கிறார்கள். இரு அரசு தீர்வு (two-state solution) என்ற பொய்யான வாக்குறுதியால் உற்சாகமற்றிருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இப்போது உருவாகிவரும் எண்ணம் இதுவே: நாட்டின் எதிர்காலம் என்பது இரு தேசங்களைக் (binational) கொண்டது. அதாவது ஒருவரது மத நம்பிக்கை என்னவாக இருந்தபோதிலும் அனைவரும் சமமானவர்களாக வாழும் ஓர் அரசு. இஸ்ரேல் தொடர்ந்து சாவையும் பேரழிவையும் பரப்பி வருகையில் இந்த நிலைபாட்டின் மதிநுட்பம் மேலும் மேலும் வெளிப்படையாகத் தெரியும். இதற்கு மாற்றாக இருப்பது இந்தப் பகுதியையும் உலகையும் சூழக்கூடிய பேரழிவை உண்டாக்கும் பெருந்தீ மட்டுமே.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top