ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

சிறு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு

காடைப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மோடி அரசாங்கம் உயர்த்திருப்பதால் விவசாயிகளின் வேதனை துளியும் குறையாது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

இந்தியாவில் விவசாய உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (குஆவி) என்பது தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. 2019ஆம் ஆண்டு காடைப் பருவ பயிருக்கான குஆவி-யை உயர்த்துவதென மத்திய அரசாங்கம் அறிவித்திருப்பதும் இதற்கு விதிவிலக்கல்ல. குஆவி-யை உற்பத்தி செலவை விட 1.5 மடங்கு அதிகம் நிர்ணயிப்பதாக தேர்தலில் வாக்குறுதியளித்த இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ‘’சந்தை உருக்குலைவு’’ மற்றும் ‘’எதிர்பார்க்கப்படுவதற்கு எதிர்மாறான விளைவு’’ ஆகிய காரணங்களைக் காட்டி வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிவிட்டது. இருந்தும் இப்போது வரும் பொதுத் தேர்தலை மனதில் வைத்து உடனே நேரெதிராக மாறி இந்த குஆவி ‘’வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த’’ உயர்வு எனக் கூறுகிறது.

இந்தக் குறிப்பிட்ட உயர்வில் ‘’வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த’’ விஷயம் எதுவுமில்லை. இதற்கு முன்னர் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் இருந்ததை விட எல்லா பயிர்களுக்குமே, கேழ்வரகைத் தவிர, நரேந்திர மோடியின் அரசாங்கத்தில் அளிக்கப்படும் குஆவி குறைவு. இந்த அறிவிப்பு வெளியிடப்படும் முன்னர், 2017-18ல் சில அரசாங்க கொள்முதல்களில் துவரம் பருப்பு, கம்பு, உளுந்து, நெல் போன்ற பல காடைப் பருவ பயிர்களுக்கு, பயிரிட ஆகும் செலவு மற்றும் குடும்பத்தினரின் உழைப்பு ஆகியவற்றின் கூட்டுத்தொகையை விட 50% அதிகமாக குஆவி இருந்தது.

இதில் மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில், அதிலும் குறிப்பாக சிறு மற்றும் குறுநில விவசாயிகள் விஷயத்தில் இந்த நிர்ணயிக்கப்பட்ட விலைகள் அமலாக்கப்படுவதில் உள்ள பிரச்னைதான். நாடெங்கிலிமிருந்து கிடைக்கும் தகவல்களின்படி 2017-18ல் காடைப் பருவ பயிர்களுக்கான சந்தை விலையானது குஆவி-வை விட மிகவும் குறைவு. மகாராஷ்டிராவில் துவரம் பருப்பின் சந்தை விலையானது குஆவி-யை விட 20% முதல் 25% வரை குறைவு. துவரம் பருப்பின் குஆவி ஒரு குவிண்டாலுக்கு 5,450. சோயாபீன்ஸ் மற்றும் உளுந்தின் குஆவி ஒரு குவிண்டாலுக்கு முறையே 3600 மற்றும் 5400. ஆனால் மத்திய பிரதேசத்தில் இவற்றின் விலை முறையே 15% மற்றும் 52% வீழ்ச்சியடைந்திருந்தது. குஆவி-யை அமல்படுத்த முடியாது என்றால் அதை உயர்த்துவதால் என்ன பயன்?

சந்தை விலைகளுக்கும் குஆவி-க்கும் இடையேன வித்தியாசம் அதிகரித்துவருவது உற்பதி அதிகரிப்பிற்கும் விவசாய-சந்தை கொள்கைகளுக்கும் இடையேயுள்ள பொருத்தமின்மையை காட்டுகிறது. பண்டங்களுக்கான தேவை எப்படியிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளாமல் பயிரிட ஆகும் செலவு மற்றும் விலை ஆகியவற்றின் கூட்டுத்தொகையின் அடிப்படையில் குஆவி-யை நிர்ணயிப்பதன் காரணமாக இந்தப் பிரச்னை உருவாகிறது. சந்தை விலைகளை விட குஆவி அதிகமாக இருப்பது முன்னெப்போதும் இல்லாத வகையில் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. ஆனால் உற்பத்திக்கு இணையாக அப் பண்டத்திற்கான  தேவை இல்லாத சூழலில் சந்தையில் பண்டம் மிதமிஞ்சிய அளவில் குவிந்து விலையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு அது குஆவி-யை விட கீழே சென்றுவிடுகிறது.

இந்தியாவில் அரசாங்கம் கொள்முதல் செய்வது மிகக் குறைவு என்றபோதிலும் இதன் மூலமாகவே குஆவி-யானது உறுதிபடுத்தப்படுகிறது. நெல் மற்றும் பருத்தியைத் தவிர்த்து, குஆவி-யின் கீழ் வரும் பிற காடைப் பருவ பயிர்கள் கொள்முதல் செய்யப்படுவதற்கான அமைப்பே பலவீனமாக இருக்கிறது. 2017-18ஆம் ஆண்டில் 11 மாநிலங்களில் குஆவி-யின் கீழ் கொள்முதல் செய்யப்படும் பட்டியலிலுள்ள பருப்பு மற்றும் எண்ணைவித்து வகைகளில், மொத்தம் 45 பயிர்ப்பொருட்களில், 60% பண்டங்கள் 10%க்கும் குறைவாகவே கொள்முதல் செய்யப்பட்டன. இன்று நிலவும் சூழலில் விவசாய உற்பத்திப் பொருட்களை கொள்முதல் செய்வதில், சந்தை விற்பனையில் பொருத்தமான மாற்றங்களை கொண்டுவராமல் குஆவி-யை மட்டும் உயர்த்துவது விவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்காது.

இந்தியாவில் விவசாய உற்பத்தி பண்டங்களின் விலைகளில் ஏற்படும் இந்த ஏற்ற இறக்கத்தை உற்பத்தியில் ஏற்படும் எதிர்பாராத ஏற்ற இறக்கத்தை வைத்து மட்டும் முழுமையாக விளக்கிவிட முடியாது. பாதி அல்லது பாதிக்கும் மேலாகவே இந்தப் பண்டங்களின் விலை நிர்ணயமாவது என்பது அறுவடைக்குப் பின்னரே நடக்கிறது. விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கான மற்றொரு விளக்கம் இங்குதான் இருக்கிறது. அறுவடைக்குப் பிந்தைய மதிப்புச் சங்கிலியானது வழக்கமாக பல இடைத்தரகர்களிடையே பிளவுண்டிருக்கிறது. இத்தகைய பிளவுண்ட சந்தைச் சங்கிலியில் சமச்சீரற்ற விலைப் பரிமாற்றம் என்பது பரவலாக காணப்படும் விஷயம். மிகை உற்பத்தியையும் பற்றாக்குறையையும் தங்களது லாபத்தை அதிகரிப்பதற்காக இடைத்தரகர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் விவசாயிகளோ உற்பத்தி மிகையானாலும் குறையானாலும் குறைந்த விலைக்கே விற்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக, இந்திய அரிசிச் சந்தையில் வர்த்தகர்களின் லாபம் விலையில் ஐந்தில் நான்கு பாகமாக இருக்கிறது. குஆவி அதிகரிக்கப்படும்போது அரசாங்கத்தின் கொள்முதலுடன் போட்டியிடுவதற்காக தங்களது லாப அளவை வர்த்தகர்கள் மேலும் அதிகரிக்கின்றனர்.

குஆவி விவசாயிகளுக்கா அல்லது வர்த்தகர்களுக்கா, யாருக்கு பலனுடையதாக இருக்கிறது என்பது சம்பந்தப்பட்ட விவசாய சந்தைகளின் வரத்து மற்றும் தேவைக்கு இடையிலான இயங்கியலை பொறுத்து அமைகிறது. பொதுவாக இந்தியாவில் விவசாயிகள் அறுவடை முடிந்தவுடனேயே தங்களது பயிர்களை விற்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள். ஆனால் வர்த்தகர்களால் சரியான நேரத்திற்காக காத்திருந்து வாங்க முடியும். மேலும், பல்வேறு வகைப்பட்ட சந்தை முறைகள் நடப்பில் இல்லாத நிலையில் குஆவி அடிப்படையில் அரசாங்கம் செய்யும் கொள்முதலின் நேரம் மற்றும் கையிருப்பின் நிலையற்றதன்மைகள் சந்தை விலையை மேலும் சரியவைக்கின்றன. இதை வர்த்தகர்கள் தங்களுக்கு முழுமையாக சாதகமாக்கிக் கொள்கின்றனர். ஆகவே, ஆதரவு விலைகளின் திரிபு மிகுந்த விளைவுகள் விவசாயிகளுக்கு, குறிப்பாக அறுவடை செய்த நிலத்திலிருந்தே நேரடியாக விற்கப்படும் விலைக்கு விற்றுவிடும் சிறு விவசாயிகளுக்கு பெரும் அழிவை ஏற்படுத்துகிறது. குறைந்த சந்தை விலையின் காரணமாக ஆக மோசமாக பாதிக்கப்படுவது குஆவி போன்ற திட்டங்கள் ஏதும் இத்தகைய சிறு விவசாயிகளே.

சந்தை விற்பனையின் அடிப்படை கட்டமைப்பு, சேமிப்பு கிடங்கு, உணவை பக்குவப்படுத்துதல் ஆகியவற்றில் பெரும் முதலீடுகள் செய்யாமல், பழைய மண்டி முறையை தவிர்த்துவிட்டு விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளிடமிருந்து நேரடியாக வாங்குவதற்கு வழிசெய்யும் வகையில் 2003-ஆம் ஆண்டின் விவசாய உற்பத்தி சந்தைக் குழு சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவராமல் குஆவி-யை மட்டும் உயர்த்துவதால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையிலிருக்கும் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. 

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top