ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

முக்கியமான விஷயத்தை தவறவிடுதல்

ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு குற்றச்சாட்டிற்கு ஆளானவர்களை கொல்வதற்கு சாதகமாகவுள்ள அடிப்படை சட்டகத்தைப் பற்றி உச்ச நீதிமன்றம் பேசத் தவறிவிட்டது. 

தெஹ்சீன் எஸ் பூனாவாலா என்பவர் தொடுத்த வழக்கில் ஜூலை 17ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றச்சாட்டிற்கு ஆளான ஒருவரை சந்தேகத்தின் பெயரால் ஒரு சிலர் அடித்துக்கொல்லப்படுவது பரவிவருவதை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களைக் கொண்ட இந்தத் தீர்ப்பில் ‘’மாட்டிறைச்சி,’’ ‘’இந்து,’’ ‘’முஸ்லிம்,’’ ‘’தலித்,’’ அல்லது ‘’ஸவர்ணா,’’ போன்ற வார்த்தைகள் எதுவுமே பயன்படுத்தப்படவில்லை. இந்தத் தீர்ப்புடன் தொடர்புடைய பின்னணி எதையும் கருத்தில் கொள்ளாது இதில் மீண்டும் மீண்டும் ‘’பொதுமக்களே சட்டத்தை கையிலெடுத்துக்கொள்வது’’ (விஜிலெண்டிஸம்) (இந்த வார்த்தை 11 முறை வருகிறது), ‘’சட்டம் ஒழுங்கு’’ (இது ஐந்து முறை) போன்ற வார்த்தைகளே சொல்லப்படுவதை படிக்கிற போது 21ஆம் நூற்றாண்டு இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றியல்ல, ஏதோ கோதம் (அமெரிக்காவிலுள்ள ஒரு கற்பனை நகரம்) நகரத்தில் வொவ்வால்மனிதனின் (ஒரு கற்பனை கதாபாத்திரம்) செயல்களை ஒடுக்குவது பற்றி உச்ச நீதிமன்றம் அக்கறை கொண்டுள்ளது என்றே ஒருவர் கருதுவார்.

இந்தியாவின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவால் எழுதப்பட்ட இந்தத் தீர்ப்பு பிரச்னையின் உண்மையான இயல்பைப் பற்றி எந்தப் புரிதலையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. சந்தேகத்தின் பெயரால் ஒருவரை அடித்துக்கொல்வது என்பது ஏதோ கண நேர வெறியின் காரணமாக நடக்கிற செயலோ அல்லது சட்டம்-ஒழுங்கை குலைக்கிற மற்றொரு நிகழ்வோ அல்ல. மாறாக, இது சமூக ஒழுங்கை, அதிகாரத்தை பேணுவதற்கான முதன்மையான கருவியாகும். அதாவது, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்தால் அதற்கு அவர்கள் தர வேண்டியிருக்கும் விலையை அவர்களுக்கு நினைவூட்டுவதாகும். இந்த ஒட்டுமொத்த குற்றத்தில் நிகழ்த்துக் கூறு ஒன்றிருக்கிறது, அதற்கு அரசு எந்திரத்தின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவும் இருக்கிறது.

இத்தகைய கொலைகள் பற்றி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள ஏராளமான ஆய்வு இலக்கியங்களைப் பற்றி இந்தத் தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சமீபத்தில் நடந்த இத்தகைய ஒரேயொரு நிகழ்வு கூட நீதிமன்றத்தால் விளக்கமாக விவாதிக்கப்படவோ, விவரிக்கப்படவோ இல்லை. இந்தியா முழுவதிலும் நடக்கும் இத்தகைய கொலைகளை தீவிரமான பகுப்பாய்விற்கு உட்படுத்துவதற்கு பதிலாக வழக்கமான மழுப்பலான கருத்துக்களும் சொற்களுமே தீர்ப்பில் இருக்கின்றன. இந்தக் கொலைகள் நிகழ்வதற்கு என்ன காரணம் என்பதை புரிந்துகொள்ள எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. தனது கடமையைச் செய்யத்தவறிய பலவீனமான காவல்துறையே இதற்குக் காரணம் என்பதுபோல் காட்டப்பட்டு, இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் வகையில் சில நடவடிக்கைகள் எடுப்பதே என்று கூறப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாலே எல்லாம் சரியாகிவிடும் என்பதாக கருதப்படுகிறது. ஜார்கண்டில் அலிமுதீன் அன்சாரி என்பவர் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தான் சொன்ன ஆலோசனைகளே பின்பற்றப்பட்டன என்பது உச்ச நீதிமன்றம் அறிந்திருக்கவில்லை. வழக்கு மிகவும் அலட்சியமாக நடத்தப்பட்டதன் காரணமாக குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட எட்டு பேருக்கு ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது.

முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் ‘’மாட்டிறைச்சி” விவகாரத்தின் காரணமாக அடித்துக்கொல்லப்படுவது என்பது நாடெங்கிலும் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) பெற்ற தேர்தல் வெற்றிகளால் ஊக்குவிக்கப்படுகிறது, அதிகரிக்கிறது. இதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. பாஜக ஆட்சியிலில்லாத மாநிலங்களில் கூட ‘’மாட்டிறைச்சி’’ வதந்திகளால் முஸ்லிம்களையும் தலித்துகளையும் தாக்குபவர்கள், கொல்பவர்கள் சங் பரிவாரத்துடன் தொடர்புடையவர்களாவே இருக்கிறார்கள். 2014ல் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கு கொண்டுவந்த  ‘’அச்சே தீன்’’ (நல்ல காலம் அல்லது நல்ல நாட்கள்) பிரச்சாரத்திற்கு மத்தியில், முஸ்லிம் சமூகத்திற்கு பலன் கொடுத்த ‘’இளஞ்சிவப்பு புரட்சி’’, அதாவது மாட்டிறைச்சி தொழிற்துறை அடைந்த வளர்ச்சி குறித்து இந்துக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் குறித்த செய்தியும் மிகுந்த கவனத்துடன் சேர்க்கப்பட்டிருந்தது.

பிரச்னையின் அரசியல்தன்மையை அங்கீகரிக்க மறுப்பதன் மூலம் பிரச்னையை சரிசெய்வதற்கான தனது சொந்த முயற்சிகளையே உச்ச நீதிமன்றம் பலவீனப்படுத்துகிறது. இத்தகைய கொலையை செய்தவர்களுக்கு பொறுப்பிலிருக்கும் மத்திய அமைச்சர் ஒருவர் எல்லோரும் பார்க்க மாலையிட்டு மரியாதை செய்துவிட்டு அவர்களுக்கு பிணை அளிக்கப்பட்டிருக்கிறது (முன்னர் குறிப்பிட்ட ஜார்கன்ட் வழக்கு) என்பதை காரணம் காட்டி தான் செய்த செயல் ‘’முறைப்படி சட்டம் பின்பற்றப்படுவதை மதிக்கும் செயலே’’ என்று நியாயப்படுத்தும் நிலையில் இத்தகைய கொலைகளுக்கு தண்டனையளிக்கவென்றே தனி சட்டம் கொண்டுவருவது எப்படி ‘’அச்சட்டம் பற்றிய அச்சத்தை மக்களிடையே உருவாக்கும்?’’ சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை செய்துள்ள ஏராளமான கொலைகளை தனது அரசாங்கத்தின் ‘’சாதனை’’யாக உத்திர பிரதேசத்தின் முதலமைச்சர் கருதுகிறபோது சட்டத்தின் ஆட்சி பற்றி உச்ச நீதிமன்றம் ஆற்றும் உதட்டளவிலான சொற்பொழிவிற்கும் காவல்துறைக்கு அது அளிக்கும் வழிகாட்டுதல்களுக்கும் என்ன பலனிருக்கும்?

தனிச் சட்டம் கொண்டுவருவது பற்றி பேசப்படுகிறது, ஆனால் அதே நேரத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றப்பட்ட ‘’மாட்டிறைச்சி தடை’’ சட்டத்திற்கு  (மாட்டிறைச்சியை வைத்திருப்பதையே குற்றம் என்கிறது இச்சட்டம்) எதிராக தொடுக்கப்பட்டு 2016லிருந்து நிலுவையிலிருக்கும் வழக்குகள் எதையும் இது வரை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதி கே. புட்டசுவாமி தொடுத்த வழக்கில் ஒருவருக்கு தான் விரும்பும் உணவை உண்ண உரிமை உண்டு என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மாட்டிறைச்சி தடைச் சட்டத்தை அங்கீகரித்த தீர்ப்புகள் தவறானவை என்று கூறவில்லை. தலித்துகள் மற்றும் முஸ்லிம்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கும் சட்டங்களை அப்படியே வைத்துக்கொண்டு இத்தகைய கொலைகளைப் பற்றி உச்ச நீதிமன்றம் மாபெரும் உரையாற்றுவதிலும் பெரும் அச்சத்தை, அதிர்ச்சியை தெரிவிப்பதிலும் எந்தப் பொருளுமில்லை.

தான் செய்ய வேண்டியதை செய்யத்தவறியது மட்டுமல்ல உச்ச நீதிமன்றத்தின் தவறு. செய்யக்கூடாததை செய்த தவறும் இருக்கிறது. சுபாஷ் கஷிஷ்நாத் மகாஜனுக்கும் மகாராஷ்டிராவுக்குமான வழக்கில் தன்னிடம் போதுமான தரவுகள் எதுவும் இல்லாத நிலையில் அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தை உச்ச நீதிமன்றம் முடமாக்கி தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிரான குற்றங்களில் வழக்குதொடுப்பதை கடினமாக்கிவிட்டது. மாட்டிறைச்சிக் கடைகள் வைத்திருக்கும் முஸ்லிம்களின் வாழ்வாதாரங்களை விட பசுக்கள் (மற்றும் பால் கொடுக்கும் மாடுகள்) மிக அதிக முக்கியத்துவம் கொண்டவை எனக் கூறி இறைச்சிக்காக பசுக்கள் வெட்டப்படுவதற்கு எதிரான குஜராத் மாநிலத்தின் மிகக் கடுமையான சட்டத்தை அங்கீகரித்தது உச்ச நீதிமன்றம்.

ஆகவே, பூனாவாலா வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு குறித்து ஒருவர் சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டும். இந்தியாவில் ஒரு சிலர் சட்டத்தை கையிலெடுத்துக்கொண்டு செய்யும் இத்தகைய கொலைகள் விவகாரத்தில் உண்மையில் எதையும் செய்யாமலேயே தான் எதையோ செய்திருப்பதைப்போல் காட்டிக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஆசைப்பட்டிருப்பதை அது பிரகடனப்படுத்திருயிருப்பதாகவே கருதுவதே அநேகமாக சரியாக இருக்கும். இந்தப் பிரச்னை பற்றிய அதன் பகுப்பாய்வு வேண்டுமென்றே தவறான தகவல்களை கொண்டிருக்கவில்லை என்று வைத்துக்கொண்டாலும் அது மிகவும் மேம்போக்கானது. அது தந்திருக்கும் தீர்வுகள் பரிதாபத்திற்குரிய வகையில் எளிமையானவை. உச்ச நீதிமன்றம் தனது நீதிச் செயல்பாடுகளை நேர்மையுடனும் திறனுடனும் ஆற்றாத பட்சத்தில் தார்மீக விழுமியங்கள் பற்றிய அதன் பேச்சுக்களால் அதன் நம்பகத்தன்மை ஒரு துளியும் உயராது.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top