ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

வரமா, சாபமா?

இணையமும் சமூக ஊடக மேடைகளும் அரசாங்கத்திற்கும் குடிமைச் சமூகத்திற்கும் தீர்க்க முடியாத சவாலை உருவாக்கியிருக்கின்றன.

 

சமீபத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது சொந்த கட்சியினரான பாரதீய ஜனதா கட்சியினராலேயே டிவிட்டரில் பெரும் தொல்லைக்கு ஆளானது சமூக ஊடகங்களின் எதிர்மறையான அம்சங்களுக்கு அரசாங்கமோ அல்லது குடிமைச் சமூகமோ எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பற்றிய குழப்பத்தை காட்டக்கூடிய விஷயமாக இருக்கிறது. இதற்கு சுஷ்மாவின் கட்சி ஆற்றிய மழுப்பலான எதிர்வினை பாஜகவிற்குள் நடக்கும் உட்கட்சி போரை அம்பலப்படுத்துகிறது. அதை விட முக்கியமாக பகுதியளவு தாராளவாதமும், முழுமையாக தொடர்பில் இணைக்கப்பட்ட கொண்ட ஒரு உலகில் அதிகாரத்திலிருக்கும் எந்தவொருவருக்கும் தகவல் மற்றும் அபிப்ராயத்துடன் (கருத்துடன்) கொண்டுள்ள பிரச்னையை இது எடுத்துக்காட்டுகிறது.

தகவலும், கருத்தும் பரவ அல்லது பரப்பப்பட ஊடகமும் மேடையும் தேவை. இணையம் ஓர் ஊடகம்; முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் ஆகியவை மேடைகள். ஆனால் நமக்கு முன்னால் உள்ள சவால் என்னவெனில், இந்த மேடைகளின் வழியே சட்டபூர்வமான உள்ளடக்கம், தகவல் என்று கருதப்படுவனவற்றை எவ்வாறு அனுமதிப்பது, ஏராளமான போலித் தகவல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவதூறுகளை எப்படி அனுமதியாதிருப்பது என்பதுதான். நீங்கள் ஊடகத்தையா, மேடையையா அல்லது உள்ளடக்கத்தையை, எதை தடை செய்வீர்கள்?

உள்ளடகத்தை தடை அல்லது தணிக்கை செய்ய சட்டமியற்றுவது எளிது, ஆனால் அதை அமலாக்குவது என்பது ஏறக்குறைய நடவாத செயல். உதாரணமாக, ரஷ்யாவில் ஸ்டாலினின் ஆட்சிக்காலத்தில் தகவல்களை அரசு கடுமையாக கட்டுப்படுத்தியபோதிலும் கவிதைகளும் கையெழுத்துப்படிவங்களும் எழுதி நகலெடுக்கப்பட்டு சுற்றில் விடப்பட்டன. தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சியின்போது நெலசன் மண்டேலாவின் நாட்குறிப்புகள் கழிவறைக் காகிதங்களில் எழுதப்பட்டு சுற்றுக்கு விடப்பட்டன. இந்தியாவில் நெருக்கடிநிலை காலத்தின்போது காலியான பத்திகளையும் அதிகாரத்தை தூக்கியெறியும் வகையிலான மரணக் குறிப்புகளையும் பத்திரிகைகள் வெளியிட்டன. மக்கள் எப்படியோ ஒரு வழியை கண்டுபிடித்தனர், சர்வாதிகார அரசுகள் மெல்ல ஆற்றலிழந்தன. ஆனால் நடமாடும் இணையம் இருக்கும் காலத்தில், அதிலும் எல்லையற்ற அலைத்தொகுப்பும் (பேண்ட்வித்), பயன்படுத்துவதற்கு எளிதான செல்பேசிகளும் உள்ள காலகட்டத்தில் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவதா, இல்லையா, அப்படி கட்டுப்படுத்தும்பட்சத்தில் எப்படி கட்டுப்படுத்துவது என்பது பற்றிய விவாதம் முற்றிலும் வேறுபட்ட விஷயம். பழைய ஊடக மேடைகளைப் போலல்லாமல் இணைய மேடையானது இரு வழிப் பாதையாகும்: ஒவ்வொரு வாசகரும் ஒரு செய்தியாளர், ஆசிரியர் மற்றும் கருத்தை உருவாக்குபவர். தங்களது செய்திகளை பரப்ப பிரதி, புகைப்படங்கள், கேலிச்சித்திரங்கள், சிறு மின்பிம்பங்கள், ஒலி வடிவம் என கலவையாக பயன்படுத்தும் கோடிக்கணக்கான பேர்களை எப்படி நீங்கள் தணிக்கை செய்வீர்கள்?

இன்று இந்த மேடைகளின் வழியே தனிநபர்கள் கருத்துக்கள் தெரிவிப்பது என்பது (எழுத்தறிவும் மிகவும் பரவலாகிவருகிறது) எளிதாகவும் வசதியாகவும் இருக்கையில் இவற்றை தடை செய்வது என்பது அரசாங்கத்தால் இயலாத செயல். எல்லா உள்ளடகத்தையும் தணிக்கை செய்ய வேண்டுமெனில் அது செயற்கை அறிதிறன் படிமுறை (ஆர்ட்டிபீஸியல் இன்ட்டலிஜென்ஸ் அல்காரிதம்) போன்றவற்றின் மூலம் ஓரளவு சாத்தியம். ஆனால் இந்த அறிவியல் முறை இன்னும் வளர்ச்சியின் தொடக்க நிலையிலேயே இருக்கிறது. அரசாங்கம் தான் விரும்பும் அனைத்தையும் நீக்க இத்தகைய அறிவியல் முறையை பயன்படுத்த இன்னும் குறைந்தது பத்தாண்டுகளாவது காத்திருக்க வேண்டும். ஒரு கேலிச்சித்திரத்திலிருந்தோ அல்லது படத்திலிருந்தே அது உணர்வுரீதியாக வெளிப்படுத்தும் பொருளை புரிந்துகொள்ள ஒரு நிரலுக்கு (புரோகிராமிற்கு) நீங்கள் பயிற்சியளிக்க முடியுமா? இவையனைத்தும் இன்னும் அறிவியல் புனைகதைகள் அளவில்தான் நிற்கின்றன. இத்தகைய நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மறைபொருளாக எழுதப்படும் விஷயங்களை, அதிலும் அவை பகிர்ந்துகொள்ளப்பட்டும் மேடையாலேயே அவற்றை அணுக முடியாதிருக்கும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஊடகத்தையே தடை செய்வது என்பது அரசாங்கத்திற்கு எளிதாக செயல். கடந்த சில ஆண்டுகளில் பல மாநில அரசாங்கங்கள் கைமீறிப்போகும் நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கமே விதித்திருக்கும் விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் இணைய சேவையை, செல்பேசி சேவையை ஒரு வாரத்திற்கோ அல்லது அதற்கும் மேலாகவோ நிறுத்தியிருக்கின்றன. அதனால் உடனடியாக பாதிக்கப்படுவது அதே ஊடகத்தை பயன்படுத்தும் ‘’சட்டபூர்வமான’’ செய்திகள் மற்றும் வர்த்தக பரிமாற்றங்கள். தனது மக்கள் மீது ‘’டிஜிட்டல்’’ தொழில்நுட்பத்தை திணிக்கும் ஓர் அரசாங்கத்தால் அதே மக்கள் ஊடகத்தை பயன்படுத்துவதை தடுப்பது என்பது முடியாது. மின்னஞ்சல், மின் வர்த்தகம், மின் வணிகம், ஆதார், பீம் (BHIM) போன்ற அனைத்தும் செயல்பட வேகமான, தொடர்ச்சியான இணைய வசதி தேவை. மிகப் பெரும் வர்த்தக நிறுவனங்கள் இந்த கட்டமைப்பு வசதிகளுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவிடுகின்றன. முறைப்படி உரிமம் பெற்ற வர்த்தகம் பாதிக்கப்படுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? நமது நாட்டில் ஒட்டுமொத்த பொருளாதார, சமூக செயல்பாடுமே நின்றுபோய்விடும். சர்வதேச பொருளாதார உறவுகள் பற்றி இந்திய கவுன்சில் ஃபார் ரிசர்ச் அளித்த அறிக்கையில் 2012 - 2017 காலகட்டத்தில்  இணைய சேவை அவ்வப்போது முடக்கப்பட்டதன் காரணமாக 20,000 கோடி நட்டம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் தனக்கு வசதியான நேரங்களில் இணையத்தை அனுமதிப்பது, சங்கடமான நேரங்களில் முடக்குவது என்பது முடியாத காரியம். சட்டங்களை நியாயமான முறையில் அமல்படுத்த முடியாதது அல்லது சிலரின் நடத்தையை மாற்ற முடியாதது என்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கான நியாயமாக முடியாது.

கருத்துக்களை மற்றும் செய்திகளை மட்டுமே, அவை போலியோ உண்மையோ, பகிர்ந்துகொள்வதற்காக இருக்கும் மேடைகளை, அதாவது வர்த்தகத்தின் மீது நேரடியான தாக்கம் ஏதுமில்லாத மேடைகளை, தடை செய்வது என்பதே கடைசியாக உள்ள வாய்ப்பு. எல்லா அரசியல் கட்சிகளும், அதிகாரவர்க்கமும், நீதித்துறையினரும், கோடிக்கணக்கான மக்களும் பயன்படுத்தும் முகநூலை எப்படி தடை செய்வீர்கள்? வாட்ஸப் மூலம் அரசாங்கத்தின் கொள்கைகள் அறிவிக்கப்படுகிறபோது அதை எப்படி தடை செய்வீர்கள்? அமைச்சர்கள் தங்களது அதிகாரப்புர்வமான தொடர்புக்காக டிவிட்டரை பயன்படுத்துகிறபோது அதை எப்படி தடைசெய்வீர்கள்? வெளியுலகம் தன்னைப்ப் பற்றி என்ன நினைக்கிறது என்பது பற்றி சீனா போன்று நீங்களும் கவலைப்படவில்லை என்றால் மேற்கத்திய நாடுகளின் மேடைகள் அனைத்தையும் தடைசெய்துவிட்டு அதற்கு சமமான உங்களது சொந்த மேடைகளை உருவாக்கி அவற்றை எளிதாக கட்டுப்படுத்தலாம். ஆனால் தனது ஜனநாயகத்தின் தரம் பற்றி மேற்குலகம் என்ன நினைக்கிறது என்பது பற்றி இந்திய அரசு கவலைகொள்கிறது; ஆகவே வெளிப்படையாகவும் தாராளமாகவும் நடைமுறையில் இல்லாமலேயே அப்படியிருப்பதாக தோன்ற விரும்புகிறது.

ஆகவே இது இந்திய அரசு எதிர்கொண்டுள்ள தீர்க்கப்பட முடியாத இருதலைகொள்ளி எறும்பு நிலையாகும். நீங்கள் விஷம் தோய்ந்த உரையாடலை, விவாதத்தை ஊக்குவிப்பீர்கள், அனுமதிப்பீர்கள் என்றால் அது தன்னை பரப்பிக்கொள்ள மிக வசதியான வாகனத்தை, அதாவது இணையம் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்திக்கொள்ளும் என்பதை அரசங்கம் உணர வேண்டும். பிரச்னை வெறுப்பு மற்றும் பிளவுவாத அரசியல் செழித்து வளர்வதே என்ற நிலையில் வாகனங்களை முடக்குவது என்பது எதையும் தீர்த்துவைக்காது.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top