ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தீவிரவாதம், மற்றொரு பெயரில்

வளர்ச்சித் திட்டங்களை கேள்வி கேட்பதற்கான மக்களின் உரிமையை அரசாங்கங்கள் மறுக்கின்றன.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

‘’பொதுமக்களின் நன்மைக்காக’’ என்று பார்ப்பதற்குத் தோன்றும் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை எதிர்ப்பவர்களை வர்ணிக்க ‘’வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’’ என்று தொடங்கி ‘’தேசத்திற்கு எதிரானவர்கள்’’, ‘’நகர்ப்புற நக்சல்கள்’’, ‘’தீவிரவாதிகள்’’ என புதுப்புது வார்த்தைகளை அடுத்தடுத்து வரும் அரசாங்கங்கள் கண்டுபிடித்துவருகின்றன.  நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஜூலை 6ஆம் தேதி சென்னையில் பேசுகிறபோது அரசாங்கத்தின் திட்டங்களை விமர்சிக்கிறவர்களை அல்லது அவற்றிற்கு எதிராக மக்களை திரட்டுகிறவர்களை வர்ணிக்க தீவிரவாதி என்ற வார்த்தையைத் தவிர்த்து வேறொன்றை பயன்படுத்த மறுத்துவிட்டார். அத்தகைய ஆட்கள் தீவிரவாதிகள் என்றே அழைக்கப்பட வேண்டும், ஏனெனில் அவர்கள் ‘’மக்களுக்கும் வளர்ச்சிக்கும் எதிரானவர்கள்’’ என்றார்.

‘’தீவிரவாதி’’ என்ற வார்த்தைக்கு அகராதி என்ன பொருள் தருகிறது என்பது பற்றி அநேகமாக அமைச்சருக்கு தெரிந்திருக்காது. அகராதியின்படி ‘’அரசியல் இலக்குகளை அடைய சட்டப்படியற்ற வன்முறையை மற்றும் அச்சுறுத்தலை, அதிலும் குறிப்பாக சாதாரண குடிமக்களுக்கு எதிராக பயன்படுத்துபவர்’’ தீவிரவாதி என்று அகராதி கூறுகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த பல நிகழ்வுகளில் குடிமக்களுக்கு எதிராக ‘’சட்டப்படியற்ற வன்முறை மற்றும் அச்சுறுத்தலை” மேற்கொண்டது அரசுதான் என்பதை அமைச்சர் கவனிக்கத் தவறிவிட்டார். வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான, தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக மே 22ஆம் தேதி நடந்த அமைதியாக போராட்டத்தில் இது தெளிவாக வெளிப்பட்டது. இதில் நடந்த துப்பாக்கிசூட்டில் பதிமூன்று பேர் கொல்லப்பட்டனர். ஆனாலும் மாநில அரசாங்கம் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற கொடூரமான சட்டத்தின் கீழ் கைது செய்தது. தங்களது வாழ்வையே ஆபத்திற்குள்ளாக்கும் மாசுக்கு எதிராக போராடும் மக்களை எப்படி ‘’தீவிரவாதிகள்’’ என்று அழைக்க முடியும்?

ஓர் அரசு தனது திட்டங்களுக்கு எதிராக கேள்வியெழுப்பும் துணிவு கொண்டவர்களின் உள்ளங்களில் எப்படி அச்சத்தை ஏற்படுத்துவது என்பதற்கு தமிழ் நாடு முதன்மையான உதாரணமாக இருக்கிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் நடந்ததிலிருந்து கடந்த மாதம் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களை கைது செய்ததைத் தவிர்த்து, கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர், நன்கு அறியப்பட்ட சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஆகியோரையும் அரசாங்கம் கைது செய்தது. அத்துடன் ஆர்பாட்டத்தையும், பிற போராட்டங்களையும் பதிவு செய்த ஊடகவியலாளர்கள் சிலரையும் பிடித்துவைத்திருந்து பின்னர் விடுவித்தது. இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு முன்னர், கடந்த ஓராண்டில் தூத்துக்குடி போன்ற போராட்டங்களைப் பற்றி செய்திகளை ஒளிபரப்பிய 11 தொலைக்காட்சி சானல்களை அரசுக்கு சொந்தமான அரசு கேபிள் டிவி கார்ப்போரேஷனில் தடை செய்துவிட்டது. பெரும்பாலும் கிராமப்புறங்களைச் சேர்ந்த சுமார் 85 லட்சம் வீடுகளுக்கு கேபிள் டிவி இணைப்பை வழங்குகிறது இந்த அரசு நிறுவனம். சென்னை-சேலம் பசுமை வழி விரைவுச் சாலை அமைப்பதில் அரசாங்கம் காட்டும் வேகம் கவலையளிக்கிறது. மத்திய அரசின் நிதியில் அமைக்கப்படும் இந்த நெடுஞ்சாலை திட்டம் 159 கிராமங்களை, செழுமையான நிலங்களை, காடுகளை, காப்புக் காடுகள் உட்பட, பாதிக்கிறது. அத்துடன் ஆயிரக்கணக்கானவர்களின் வீடுகளை இடம்பெயரச் செய்கிறது.

தமிழ்நாட்டு அரசாங்கம் சகிப்பின்மையை உச்ச அளவிற்கு கொண்டுசென்றிருப்பது பல மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகளில் பிரதிபலிப்பதை காண முடியும். பிரதமர் நரேந்திர மோடியின் செல்லத்திற்குரிய திட்டமான மும்பை-ஆமதாபாத் ‘’புல்லட்’’ ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக எழும் போராட்டங்களுக்கு மகாராஷ்டிரா அரசாங்கம் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதை பார்ப்பது ஆர்வத்திற்குரிய விஷயமாக இருக்கும். இந்தத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படுவதற்கான கெடு 2018 டிசம்பர். ஆனால் நிலத்தை விட்டுக்கொடுப்பதற்கு எதிர்ப்பு வலுத்துவருவதன் காரணமாக இந்தக் காலக்கெடுவிற்குள் நிலம் கையகப்படுத்தப்படுவது நடக்காது.

எந்த மாதிரியான அரசியல் நிறத்தைக் கொண்ட கட்சியாக இருந்தாலும் சரி பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்று தான் கருதும் திட்டத்தை கேள்விக்குட்படுத்துபவர்களை, எதிர்ப்பவர்களை அரசாங்கம் சகித்துக்கொள்வதில்லை. ஆனாலும் ஒரு காலத்தில் நன்மைக்கே என்று கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்கள் 1980களிலிருந்து தீவிரமாக கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. நர்மதா நதிக்கு குறுக்கே சர்தார் சரோவர் திட்டம் மற்றும் பிற பெரும் அணைகள் கட்டப்படுவதற்கு எதிராக நர்மதா பச்சாவ் அந்தோலன் போராட்டம் நடத்திய போது இத்தகைய திட்டங்களுக்கு கடனுதவி அளித்த உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்கள் இவற்றிற்கான தங்களது ஆதரவை மறுபரிசீலனை செய்தன. 1992ல் முதல் முறையாக தான் நிதியளிக்கும் சர்தார் சரோவர் திட்டத்தை சார்பற்ற மதிப்பீடு செய்ய குழு அமைத்தது உலக வங்கி. இதன் விளைவாக இந்தத் திட்டத்திலிருந்து விலகிக்கொண்டதுடன் உலகெங்கும் நடக்கும் இத்தகைய திட்டங்களைப் பற்றி ஆராய அணைகள் பற்றிய உலகக் குழு ஒன்றையும் அமைத்தது. இதன் மூலம் இத்தகைய எதிர்கால திட்டங்களில் சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்னைகளை கணக்கிலெடுத்துக்கொள்ள முடிந்தது. சர்தார் சரோவர் திட்டம் மற்றும் பிற அணைகள் கட்டப்படுவதை நர்மதா பச்சாவ் அந்தோலனால் தடுத்துநிறுத்த முடியாவிட்டாலும் மிகப் பெரிய அளவில் மக்களை இடம்பெயர்க்கும், இயற்கைச் சூழலை அழிக்கும் திட்டங்கள் பற்றிய சந்தேகங்களை, பலன்களைப் பற்றிய கேள்விகளை அது எழுப்பியது.

பாதிக்கப்படும் சமூகங்களுக்கு தங்கள் பகுதிகளுக்கு வரும் திட்டங்களை ஏற்கவோ, நிராகரிக்கவோ உரிமை இருந்தது என்பது சமீபத்தில் 2013ல் கூட கண்கூடான உண்மை. ஒடிசாவின் நியாம்கிரி மலைகளில் பாக்சைட் தாதுப்பொருளை எடுப்பதற்காக வந்த வேதாந்த நிறுவனத்தை அப்பகுதியின் டோங்கிரியா கோண்ட் மக்கள் நிராகரிப்பதற்கான உரிமையை அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரிய காடு வாழ் மக்கள் (காட்டு உரிமை அங்கீகாரம்) சட்டம், 2006 அவர்களுக்கு வழங்கியிருந்தது. இந்த இயக்கம் உலக அளவில் இத்தகைய இயக்கங்களுக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. ஆனால், பாக்சைட் சுரங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்திய நியாம்கிரி சுரக்‌ஷா சமிதியானது மாவோயிஸ்டுகளுடன் தொடர்புகொண்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு கூறியது. சாதாரண மக்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி உணர்ந்திருக்கிறார்கள் என்பதை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியாததால் அடிப்படை கட்டமைப்பு மற்றும் பிற திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை மத்திய அரசாங்கமும் பல மாநில அரசாங்கங்களும் இப்படி ‘’தீவிரவாதம்’’ என்று கூறுவது கவலையளிக்கிறது.

இதற்கு சமமாக கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் சமீபத்தில் மும்பையில் தனது வருடாந்திர ஆளுனர்கள் கூட்டத்தை நடத்திய ஏசியன் இன்ஃப்ராஸ்டக்ஸர் இன்வெஸ்ட்மெண்ட் பேங்ஃக் போன்ற புதிய பன்முக நிதி அமைப்புகளுக்கு கடந்த காலத்தில் நடந்த மக்கள் போராட்டங்களில் எழுப்பப்பட்ட கவலைகளைப் பற்றி எதுவும் தெரியாமலிருப்பது. தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டங்களில் ஏற்கனவே இருக்கக்கூடிய கட்டுப்பாடுகளை நீர்த்துப்போகவைக்கவும், அடிப்படை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான திட்டங்களை முன்னெடுத்துச்செல்லவும் அரசாங்கத்தை இந்த நிதி அமைப்புகள் ஊக்குவிக்கின்றன. இந்தப் போக்கு எல்லா எதிர்ப்புகளையும் ‘’தீவிரவாதிகளின்’’ வேலை என்று ஒட்டுமொத்தமாக முத்திரை குத்துவதுடன் சேருகிற போது அரசின் ஒடுக்குமுறை மடை திறந்த வெள்ளமாகிறது.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top