ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

அமர்வதற்கான உரிமை

சில்லறை வணிகத் துறையிலுள்ள பணியாளர்களின் அமர்வதற்தான உரிமையை கேரள அரசாங்கம் ஆதரித்திருப்பதை பிற மாநிலங்களும் பின்பற்றுமா?

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

கேரளாவிலுள்ள சில்லறை விற்பனை நிறுவன பணியாளர்களின்  ஐந்தாண்டு போராட்டத்திற்குப் பிறகு வேலை நேரத்தின் போது அமர்வதற்கான உரிமையை வென்றிருக்கிறார்கள். இந்தியாவெங்கிலும் உள்ள இதே போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், தொடர்ச்சியக 12 மணி நேர வேலையில் நின்றுகொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது ஏதோ போனால்போகட்டுமென்று ஒரு நாளைக்கு இரண்டு முறை இவர்களுக்கு  ‘’கழிவறை இடைவேளை’’ அளிக்கப்படுகிறது. முதலாளிகள் தங்களது விற்பனை பணியாளர்களுக்கு அமர இருக்கைகள் அளிக்க, பணியிடத்தில் பாலியல் தொல்லைகளை தடுக்க, போக்குவரத்து வசதிகளை செய்துதர மற்றும் இரவு நேர பெண் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரளா அங்காடிகள் மற்றும் வர்த்தக அமைப்புகள் சட்டத்தில் கேரள அமைச்சரவை திருத்தம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இந்தப் பெண்கள் நடத்திய போராட்டம் இரண்டு அம்சங்களை முக்கியமாக எடுத்துக்காட்டுகிறது: நாடு முழுவதிலும் சில்லறை அங்காடிகளில் பணியாளர்கள் எதிர்கொள்ளும் மனிதத்தன்மையற்ற பணிச் சூழல்கள் மற்றும் அமைப்புசாரா துறைகளில் அரசியல் கட்சிகளுடனோ அல்லது மையநீரோட்ட தொழிற்சங்கங்களுடனோ எந்தத் தொடர்பும் இல்லாத பெண் தொழிலாளர்களின் சங்கங்கள் வளர்ந்துவரும் போக்கு.

கோழிக்கோட்டிலுள்ள எஸ் எம் ஸ்ட்ரீட் (மிட்டாய் தெரு) பகுதியிலுள்ள சில்லறை அங்காடிகளில் பணிபுரியும் விற்பனைப்பெண்கள், துப்புரவு பெண் பணியாளர்கள் ஒன்றிணைந்து கழிவறை வசதி வேண்டும் என்ற கோரிக்கைக்காக 2010ஆம் ஆண்டு அசங்காதிதா மேகலா தொழிலாளி சங்கத்தை (அமைப்புசாரா பெண் தொழிலாளிகள் சங்கம்; எ.எம்.டி.யு.) உருவாக்கினார்கள். இந்தப் பெண்கள் அருகிலுள்ள உணவகங்களின் கழிவறைகளை பயன்படுத்த வேண்டிய நிலையிலிருந்தார்கள். இவ்வாறு பயன்படுத்த ஓரிரு முறைகள் மட்டுமே இவர்கள் அனுமதிக்கப்படுவதுடன் அந்த சமயங்களில் அங்குள்ள ஆண் வாடிக்கையாளர்களின் கீழ்த்தரமான பாலியல் கேலிப்பேச்சுகளுக்கு ஆளாக வேண்டியிருந்தது. 2014ல் திருசூரிலுள்ள கல்யாண் சாரீஸ் கடையின் பெண் பணியாளர்கள் அமர்வதற்கான உரிமை கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக தேசிய ஊடகங்களின் கவனத்தை கவர்ந்தனர். நீண்ட நேரமாக நின்றுகொண்டேயிருப்பது, கழிவறை வசதி இல்லாதது ஆகியவற்றின் காரணமாக இந்தப் பெண்கள் முதுகு வலி, மூட்டு வலி, கால் வீக்கம், சிறுநீரகம் தொடர்பான நோய்கள், வெரிகோவிஸ் வெயின்ஸ் ஆகிய பிரச்னைகளால் அவதிக்குள்ளாயினர்.

வேலை நேரத்தின்போது அமர்ந்திருக்க வேண்டும் என்று விரும்பினால் வீட்டிலேயே இருங்கள் என்று கூறி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இந்தப் பெண்களை முதலாளிகள் இடமாற்றம் செய்தனர். இவர்களது போராட்டத்தை ஆதரித்த எ.எம்.டி.யு. கேரள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு தாக்கல் செய்ததுடன் ஊடகங்களிடம் பேசியது. பிடிவாதத்துடன் இருந்த முதலாளிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது.

நாடு முழுவதிலுமுள்ள சில்லறை அங்காடிகள், பேன்ஸி ஸ்டோர்ஸ் மற்றும் அங்காடி வளாகங்களில் பணிபுரிபவர்கள் மிக மோசமான வேலைச்சூழலில் பணிபுரிய வேண்டியுள்ளது. இந்தியாவில் இணையத்தின் மூலம் விற்பனையாவது அதிகரித்தபோதிலும் சில்லறை வணிகமும் அதிகரித்தே வருகிறது. விரிவடைந்துவரும் நடுத்தர வர்க்கம், நகரமயமாவது அதிகரித்துவருவது, இதுவரையிலும் தங்களிடம் வராதிருந்த வாடிக்கையாளர்களை கவர்வதில் உள்ள போட்டி ஆகியவை ‘’சில்லறை விற்பனை புரட்சி’’யை நிகழ்த்தியிருக்கிறது.

சில்லறை விற்பனைத் துறையில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் அதிகம் படிக்காத, பெரிய திறன்கள் ஏதுமில்லாத இளம்பெண்கள். வேலை நேரத்தின்போது நின்றுகொண்டிருப்பது என்பது வாடிக்கையாளர்களுக்கு தரும் ‘’மரியாதை’’ என்பதாலேயே தாங்கள் அப்படிச் செய்வதாக சில்லறை அங்காடிகளின் முதலாளிகள் கூறுவதாக ஊடகங்கள் கூறின. வாடிக்கையாளர்களை கவர்வதற்கான போட்டி பல புதுமையான சந்தை மற்றும் விற்பனை உத்திகளுக்கு வழிவகுப்பதுடன் தொழிலாளர் உரிமைகளையும் மிக மோசமாக மீறுகிறது. சொல்லப்போனால் சில்லறை அங்காடிகளின் முதலாளிகள் ‘’நெகிழ்வான’’ தொழிலாளர் விதிமுறைகள் வேண்டும் என்று கோரிவருகின்றனர், பல மாநில அரசுகள் அதை ஏற்றுக்கொண்டுமுள்ளன. உதாரணமாக, வருடத்தில் 365 நாட்களும், 24 மணி நேரமும், மூன்று பணி சுழற்சிகளுடன் (மூன்று ஷிப்டுகளுடன்)  அங்காடிகள் திறந்திருக்க மகாராஷ்டிரா ஒப்புதல் அளித்துள்ளது. வேலையற்ற இளைஞர், இளைஞிகள் ஏராளமான எண்ணிக்கையிலிருக்கும் நிலையில் பேரம் பேசுவதற்கான ஆற்றலோ அல்லது சங்கங்களில் சேருவதற்கான துணிவோ, அல்லது நல்வாழ்வு சங்கங்கள் அமைப்பதற்கான துணிவோ கூட இல்லாதவர்களாக இந்தப் பணியாளர்கள் உள்ளனர்.

மையநீரோட்ட மற்றும் ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த தொழிற்சங்கங்களை சார்ந்திராமல் சிறு அளவில் தங்களைத்தாங்களே பெண் தொழிலாளர்கள் திரட்டத் தொடங்கியுள்ளனர். அதிகக் கூலி, மேலான பணிச் சூழல் ஆகியவற்றிற்காக மூணாறு தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம் சமீப காலங்களில் நமக்குத் தெரிந்த ஒரு நல்ல உதாரணம். வருங்கால வைப்புநிதியில் மத்திய அரசாங்கம் கொண்டுவந்த மாறுதலால் நேரடியாக பாதிக்கப்பட்ட ஆடைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள் பெங்களூருவில் வீதிக்கு வந்து போராடியது மற்றொரு நல்ல உதாரணம். பெண்கள் பெருமளவில் பணிபுரியும் அமைப்புசாரா துறைகளில் உள்ள இத்தகைய சங்கங்களை எ.எம்.டி.யு. ஒன்றிணைக்கிறது.

கேரள அமைச்சரவையால் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ள மசோதாவின் குழப்பமான மொழி முதலாளிகளுக்கு நன்மை பயப்பதாக இருக்கிறது என்று கேரளாவின் எ.எம்.டி.யு.வின் தலைமை தெரிவித்துள்ளது. இதற்கு முன்பிருந்த திருத்தப்படாத சட்டமும் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை ‘’இடைவேளை”யை அனுமதிக்கிறது. ஆனால் அது நடைமுறையில் ஒருபோதும் பின்பற்றப்படவில்லை. தன்னிடம் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாதபோது அமரலாமா அல்லது இடைவேளையின்போது அமரலாமா என்பது திருத்தப்பட்ட மசோதாவில் தெளிவாக இல்லை. எப்படியிருந்தபோதிலும் இதில் எதுவுமே ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதில்லை. அமர்வதற்கான உரிமை கோரி ஊக்கம் நிறைந்த போராட்டத்தை நடத்தியுள்ள இந்தத் தொழிலாளர்கள் அது அமலாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பொருளாதார தாராளமயமாக்கத்தின் பின்னணியில் அதிக வேலைகள் உருவாக்கப்பட்டிருந்தபோதிலும் தொழிற்சங்கங்கள் புதிய சவால்களை எதிர்கொண்டுள்ளன. இந்த வேலைகள் பெரும்பாலும் அமைப்புசாரா துறையில் இருப்பதால் சமூக பாதுகாப்பும் வேலை பாதுகாப்பும் அடைய முடியாத விஷயங்களாக இருக்கின்றன. மேலும் சில்லறை விற்பனை போன்ற சில துறைகளில் பெருமளவில் பெண் பணியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நீண்ட காலமாக உள்ள தொழிற்சங்கங்கள் தங்களது உத்திகள் பற்றி மறுசிந்தனை செய்ய வேண்டும். தொழிலாளர் அணிகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் ‘’சீர்திருத்தம்’’ கொண்டுவருதில் தனக்குள்ள முனைப்பின் காரணமாக குருடாய் போயிருப்பதாகத் தோன்றும் அரசாங்கத்தையும் இந்த தொழிற்சங்கங்கள் எதிர்கொண்டாக வேண்டும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top