ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

எல்லைகளை கடந்ததற்காக தண்டிக்கப்பட்டவர்கள்

சில குறிப்பிட்ட குடியேற்றக்காரர்களை டிரம்ப் நிர்வாகத்தினர் நடத்தும் விதம் இனவெறி கொண்டதாகவும் அந்நிய நாட்டவர் மீது வெறுப்பைப் பொழிவதாகவும் இருக்கிறது.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள் மற்றும் அங்கு புகலிடம் கோரியவர்களை டிரம்ப் நிர்வாகம் பகைமையுடனும் அவமானப்படுத்தியும் நடத்தியதற்கு எதிராக அமெரிக்கா எங்கிலும் ஜூன் கடைசி வாரத்தில் நடந்த ஆர்பாட்டங்கள் ஊக்கமளிப்பவையாக இருக்கின்றன. குடியேறியவர்கள் மற்றும் புகலிடம் கோரியவர்களிடமிருந்து அவர்களது குழந்தைகள் பிரிக்கப்பட்டபோது அந்தக் குழந்தைகள் அழுத காட்சிகளைக் கொண்ட காணொளிகள், அந்தக் குழந்தைகள் கூண்டுகளில் இருக்கும் புகைப்படங்கள், இந்த மக்களை இகழ்ந்து இனவெறியுடன் அமெரிக்க குடியரசுத்தலைவர் டொனால்ட் டிரம்ப் பேசிய பேச்சுக்கள் ஆகியவற்றின் காரணமாக கோபமுற்றவர்கள் மனிதத்தன்மையற்ற இந்த செயல்களுக்கு எதிராகத் திரண்டனர். லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, நியூ யார்க் மாநகரம், வாஷிங்டன் டி.சி. ஆகிய இடங்களில் போராட்டங்கள் மிகப் பெரிய அளவில் நடைபெற்றன.

பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளை பிரிப்பது என்ற திட்டத்தை பொதுமக்கள் ஏற்கவில்லை என்பது தெரியவந்தவுடன் அதிலிருந்து டிரம்ப் பின்வாங்கினார். ஆகவே, இப்போது எல்லையை தாண்டிய ‘’குற்றத்திற்காக’’ பெற்றோர்களும் குழந்தைகளும் ஒன்றாக சிறைபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் ஏற்கனவே பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ள குழந்தைகளை மீண்டும் பெற்றொர்களுடன் சேர்ப்பதற்கு திட்டவட்டமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இப்படி பிரிப்பது குழந்தைகள் மீது ஏற்படுத்தக்கூடிய நீண்ட கால பாதிப்புகள் பற்றி டிரம்ப் நிர்வாகத்திற்கு எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக தான் விதித்த பயணத் தடையை உச்ச நீதிமன்றம் ஆதரித்ததில் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கும் டிரம்ப், நீதிபதி அந்தோணி கென்னடி ஓய்வுபெற்ற பிறகு உச்ச நீதிமன்றத்தை மேலும் அதிக அளவில் வலதுசாரி பாதைக்கு அழைத்துச்செல்ல முடியும் என்றும் அதன் மூலம் மேலும் அதிக சர்வாதிகார நடவடிக்கைகளை அமல்படுத்த முடியும் என்றும் எண்ணுகிறார். தக்க சட்ட வழிமுறைகளை பின்பற்றுவதை அவர் வெறுக்கிறார். உலகின் ஒரு சில பகுதிகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறிவர்களைப் பற்றி தனது டிவிட் ஒன்றில் குறிப்பிடுகிறபோது ‘’சிலர் வருகிற போது நீதிபதிகள், நீதிமன்றங்கள் என யாருடைய அனுமதிக்கும் காத்திராமல் உடனடியாக அவர்களை எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே அனுப்ப வேண்டும்’’ என்று எழுதினார். இத்தகைய கொள்கைகள் உழைக்கும் மக்களை திட்டமிட்ட வகையில் இன, தேச, நிற, மற்றும் மத அடிப்படியில் பிரிப்பதற்கானவையாகும்.

குடியேறிவர்கள் விஷயத்தில் டிரம்ப் நிர்வாகம் நடந்துகொள்ளும் விதம் குறித்து ஜனநாயக கட்சி கண்ணீர் வடிக்கிறது. ஆனால் குழந்தைகளை பிரித்துவைப்பதற்கான மையங்கள் உருவானது ஒபாமா நிர்வாகத்தின் கீழ்தான். பாராக் ஒபாவிற்கு இதனால் ‘’டிபோர்ட்டர்-இன்–சீஃப்’’ (நாடுகடத்தும் முதன்மைத் தலைவர்) என்ற அடைமொழிப்பெயரை சரியான காரணத்திற்காகவே ‘’வழங்கப்பெற்றார்’’. அவர் ஆட்சியிலிருந்தபோது 27 லட்சம் பேரை வெளியேற்றி சாதனை படைத்ததாக சொல்லப்படுகிறது. ‘’அரசாங்கம்-தனியார் கூட்டு’’ என்ற பெயரில் தனியார் கார்ப்போரேட் நிறுவனங்கள் சிறைகள், ஆட்களை பிடித்துவைப்பதற்கான மையங்கள், குடியேறிவர்களை நாடுகடத்துவது ஆகிய ‘’வியாபாரத்தில்’’ நல்ல லாபம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இது ஒபாமா நிர்வாகம் உருவாக்கிய நிலை.

மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து மக்கள் அமெரிக்காவிற்கு குடியேறுவதற்கான மூல காரணம் அந்நாடுகளில் அமெரிக்கா ஏகாதிபத்தியம் ஊடுருவி அவற்றின் சமூக, பொருளாதார கட்டமைப்பை சீரழித்து, சில நாடுகளில் நடந்த கலங்களை ஊக்குவித்து, அவற்றின் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவளித்து, ஒரு சிலர் பெரும் பகுதி நிலங்களை கைப்பற்றவும், தண்ணீர் மூலாதாரங்களை தனியார்மயமாக்கவும், நாட்டை ராணுவமயமாக்கவும், மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒட்டுமொத்தமாக மீறவும் துணைபோனதே. இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு எப்படியோ குடியேறிய இந்த மக்கள் பொருளாதார நிபுணர் கை ஸ்டேண்டிங் அழைப்பதுபோல் ‘’நிச்சயமான வருமானம் ஏதுமில்லாத ஏழைகள்.’’ இவர்கள் அமெரிக்காவில் பெரும்பாலும் மிகவும் அடித்தட்டு வேலைகளில் இருப்பவர்கள். கழிவறைகளை, உணவகங்களின் தரைகளை, வீடுகளை, வர்த்தக அடுக்குமாடி கட்டிடங்களை சுத்தம் செய்யும் வேலைகள் அல்லது வீட்டு வேலை, ஒட்டலில் பரிமாறும் வேலை, கட்டிட கட்டுமான வேலை போன்றவற்றை குறைந்த சம்பளத்தில் நீண்ட நேரத்திற்கு வேலை செய்து கொஞ்சம் பணத்தை தங்கள் வாழ்விற்கும்m கொஞ்ச பணத்தை சொந்த நாட்டிலுள்ள தங்கள் குடும்பத்திற்கும் அனுப்புபவர்கள். அமெரிக்காவில் குடியேற மத்திய அமெரிக்காவிலிருந்து வருபவர்களை மெக்சிகோ-அமெரிக்கா எல்லையில் தடுத்துநிறுத்தும் அமெரிக்காவின் காவல்படையாக மெக்சிகோவின் அரசாங்கங்கள் செயல்பட்டுவந்தன. ஆகவே, இவ்வாறு குடியேற முயல்பவர்களுக்கு மெக்சிகோ எல்லையிலும், இவர்களை பிடித்துவைக்க பயன்படுத்தப்படும் மையங்களிலும் என்ன நடக்கின்றன, எந்த மாதிரியான இழிவுகளை, கஷ்டங்களை இவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும். மேலும், ‘’போதைமருந்துகளுக்கு எதிரான போர்’’, ராணுமயமாக்கல், வட அமெரிக்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றின் எதிர்மறையான தாக்கம் மெக்சிகோ சமூகத்தின் மீது எப்படியிருக்கிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

குடியேறுபவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுவது என்பது ஒரு சர்வதேச புலப்பாடு என்பது உண்மையே. ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன் போன்ற நாடுகளைச் சேர்ந்த இவர்கள் தங்கள் நாடுகள் மீது அமெரிக்கா தொடுத்த போர்களின் காரணமாக சந்திக்க நேர்ந்த வன்முறை, பேரழிவு, இழிவு ஆகியவற்றிலிருந்து தப்பிக்க முயல்பவர்கள். மேற்காசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் குடியேறுபவர்கள், குறிப்பாக தீவிர வலதுசாரிகள் எழுச்சியடைந்துள்ள இத்தாலி, பிரான்ஸ், ஆஸ்திரியா, ஜெர்மனி, ஹங்கேரி, ஸ்லோவேனியா, போலந்து ஆகிய நாடுகளில், நிறவெறிக்கும் தேசியவெறிக்கும் பலியாகிறார்கள், மிக சமீபத்தில் ஜெர்மனியில் எல்லைப் பகுதியில் ‘’மாற்றும் மண்டலங்கள்” அமைக்கும் திட்டம் குறித்த விஷயத்தில் கிறித்துவ ஜனநாயக ஒன்றியம் மற்றும் கிறித்துவ சமூக ஒன்றியம் கட்சிகளுடன் சமூக ஜனநாயக கட்சி நெருங்கி வருவதாகத் தோன்றியது. ஏற்கனவே கிரேக்கம் மற்றும் இத்தாலியில் அகதிகளுக்காக ’’ஹாட்ஸ்பாட்ஸ்’’  எனப்படும் மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அகதிகள் முகாம் என்று மட்டுமே அழைக்கப்படக்கூடிய அமைப்பை உருவாக்க ஐரோப்பிய ஒன்றியம் கருத்தில்கொண்டுள்ளது. இவையனைத்தும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லைகள் முழுமையாக அடைக்கப்படும் நிலைக்கும், அகதிகள் போர் மண்டலங்களாக உள்ள மேற்காசிய, ஆப்ரிக்க நாடுகளுக்கே மீண்டும் திருப்பியனுப்பப்படும் நிலைக்கும் இட்டுச்செல்லுமா? இந்தியாவிலும் கூட ‘’வங்கதேசத்தினர்’’ மற்றும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மோசமாக நடத்தப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது.

குடியேறுபவர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஆர்பாட்டங்களில், குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் மிகப் பெரிய அளவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஆர்பாட்டம், கற்றுக்கொள்வதற்கு ஏதாவது ஒரு விஷயம் இருக்கிறது எனில் அது அங்கு ஆர்பாட்டக்காரர்கள் கைகளில் வைத்திருந்த தட்டிகளில் எழுதப்பட்டிருந்த முழக்கம்தான்: ‘’மனித உரிமைகளுக்கு எந்த எல்லைகளும் இல்லை.’’

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top