ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

அதிகாரமற்ற நிலையை நோக்கி பமாகு

பல்கலைக்கழக மானியக் குழுவை இல்லாமலாக்க இந்த அரசாங்கம் திட்டமிட்டு வேலை செய்கிறது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

அறுபதாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் உயர் கல்வி அமைப்பிற்கு பல்கலைக்கழக மானியக் குழு (பமாகு) பணியாற்றியிருக்கிறது. தன்னையொத்த பல்வேறு நிறுவனங்களைப் போலவே இதுவும் தனது பல்வேறு பொறுப்புகளை ஆற்றுவதில் தடுமாறிக்கொண்டிருந்தது. அதன் மூலாதாரங்கள் கணிசமான அளவிற்கு வற்றிப்போனதுடன் ஒட்டுமொத்த அமைப்பின் சூழல்கள் மாறிப்போனதும் இதற்குக் காரணம். பமாகு-வின் செயல்திறனில் பெரும் அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாகத்தான் இது உருவாவதற்கும், நிதி அதிகாரம் பெறுவதற்கும் வழிவகுத்த சட்டத்தை மத்திய அரசாங்கம் நீக்குகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பமாகு-விற்கு மாற்றாக கொண்டுவரப்படவுள்ள நிறுவனம் குறித்த தொலைநோக்குப் பார்வையால் இது செய்யப்படுவதாகவும் தெரியவில்லை.

உயர் கல்வி ஆணையம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாற்று நிறுவனம் பமாகு அதிகாரத்தின் கீழிருந்துவந்த பலவற்றை தொடரும். பமாக-வின் பெயரிலேயே இருக்கும் மானியம் அதாவது நிதி தொடர்பான அதிகாரம் மட்டுமே இதில் விதிவிலக்கு. இந்த அதிகாரம் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் வசமளிக்கப்படும். உயர் கல்வித் துறையில் இருக்கும் கொஞ்சநஞ்ச தன்னாட்சியையும் இது பறித்துவிடும் (அதாவது அரசியல் தலைமையும், அதற்கு சேவகம் செய்யும் அதிகாரவர்க்கமும் என்ற நிலைமை உருவாகிவிடும்) என்று பல்கலைக்கழக அறிவுத்துறையினர் அஞ்சுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

அரசாங்கமோ பல்வேறு நிபுணர் குழுக்களின் பரிந்துரைகளை சுட்டிக்காட்டியிருக்கிறது. இங்குதான் விஷயமே இருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்னர் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மறைந்த யஷ் பால் தலைமையில் ஒரு பெரிய குழுவை அமைத்தது. தேசிய அறிவு குழு (நேஷனல் நாலெட்ஜ் கமிஷன்) செய்ததைப் போலவே யஷ்பால் குழுவும் பமாகு பற்றி ஆராய்ந்தது. இந்த இரண்டு குழுக்களுமே பமாகு-வை மூடிவிட வேண்டும் என்ற ஒருமித்த கருத்தையே பரிந்துரைத்திருப்பதாக பெரும்பாலும் சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களது பகுப்பாய்வும், அதனடிப்படையில் அவர்கள் அளித்த ஆலோசனையும் மிகவும் வேறுபட்டது. பெருகிவரும் தனியார்மய கல்வியை கட்டுப்பாடின்றி அனுமதிப்பது என்பது தேசிய அறிவுக் குழுவின் அக்கறைக்குரிய விஷயமாக இருக்கையில் யஷ் பால் குழுவோ பமாகு-வின் அதிகாரங்களும் பொறுப்புகளும் தொழிற்நுட்ப கல்வியை கட்டுப்படுத்தும் பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரங்களும் பொறுப்புகளும் ஒன்றாக இருப்பது குறித்து ஆராய்ந்தது. சரியாகச் சொன்னால், பமாகு ‘’மூடப்பட வேண்டும்’’ என யஷ் பால் குழு ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை. பல்வேறு கல்வித் துறைகள் மற்றும் தொழில்நுட்ப உயர் கல்வியின் பல்வேறு பிரிவுகளையும் இணைக்கும் பணியை, வெகுகாலமாக புறக்கணிக்கப்பட்டுவரும் பணி இது, கவனிக்கும், ஊக்குவிக்கும் ஒரு பெரிய அமைப்பின் ‘’பகுதியாக’’ பமாகு இருக்க வேண்டும் என்றுதான் அது கூறியது.

இப்போது செய்யக் கருதுவது என்னவெனில் பமாகு-வின் நிதி அதிகாரத்தை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திற்கு மாற்றுவதுதான். தொழில் சார்ந்த கல்வியின் (புரஃபஷனல் எஜுகேஷன்) சில குறிப்பிட்ட பிரிவுகளை இப்போது முன்மொழியப்பட்டுள்ள உயர் கல்வி ஆணையத்தின் கீழ் கொண்டுவருவது என்ற திட்டம் யஷ் பால் குழுவின் அறிக்கையை பகுதியளவு பிரதிபலித்தபோதிலும் பமாகு-வை மூடுவது என்பது அந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு மாறானது. நிதி அதிகாரத்தையும் ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தையும் பிரித்து நிதி அதிகாரத்தை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகதிடம் ஒப்படைப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பது அரசாங்கத்திற்குத் தெரியும். இணையவழியின் மூலம் நேர்மையாக  மூலாதாரங்கள் விநியோகிப்படும் என்று சந்தேகங்களை போக்குவதற்காக சமாதானம் சொல்லியிருப்பது கல்வி நிறுவனங்களை மதிப்பிடும் முறைகளின் (சமீப காலமாக பின்பற்றப்பட்டுவரும் முறை) நம்பகத்தன்மை குறைந்திருப்பதை மறைமுகமாக அங்கீகரிக்கிறது. இது வரை பமாகு-விற்கு நிதி மேலாண்மை அதிகாரத்தை அளித்துவந்த மசோதாவை நீக்க நாடாளுமன்றத்தில் இந்த அரசாங்கம் காட்டும் வேகம் கவலைக்குரியது, முரண்நகையானது. தொடர்ச்சியாக வந்த மத்திய அரசின் பட்ஜெட்டுகளில் உயர் கல்விக்கான நிதி தொடர்ந்து குறைக்கப்பட்டுவருகிறது என்பதால் இது மிகவும் கவலைக்குரியது. உயர் கல்வித் துறையில் நிதி விஷயங்களில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள தனியார் துறையானது எதிர்காலத்தில் இத்துறை எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பப்படுகிறது என்பதற்கான சமிக்ஞையாகும்.

முன்மொழியப்பட்டுள்ள திட்டம் மற்றும் அரசாங்கத்தின் அவசரத்தின் முரண்நகை இங்குதான் இருக்கிறது. 1986ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையை மாற்ற கடந்த நான்கு ஆண்டுகளாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வேலை செய்துகொண்டிருக்கிறது. புதிய கொள்கையை வகுப்பதற்கான முயற்சி பல வேக மாறுதல்களை அடைந்திருக்கிறது. இதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தீவிர நம்பிக்கையாளர்களையும் சோர்வடையச் செய்திருக்கிறது. சமீபத்தில் அறிவிக்கப்பட்டபடி கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவால் தயாரிக்கப்படும் வரைவு சமர்பிக்கப்படுவதற்கான கெடு 2018 செப்டம்பர்.  உயர் கல்வியின் நிதி தொடர்பான விஷயங்கள் மற்றும் அதில் பமாகு-வின் பங்கு ஆகியவற்றைப் பற்றி இந்த வரைவு திட்டம் விவாதிக்கும். இந்த வரைவு திட்டம் சமர்பிக்கப்பட மூன்று மாதங்களே இருக்கையில் பமாகு-வின் பங்கு மற்றும் செயற்பாடுகளை மாற்றக் கோரும் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவது என்பது சமர்பிக்கப்படவுள்ள அறிக்கையின் முக்கியத்துவத்தை நிச்சயம் குறைக்கிறது. தேசிய கல்விக் கொள்கை ஒன்று உருவாகிக்கொண்டிருக்கும் சூழலில் அது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த புதிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாது என்றுதான் ஒருவர் எதிர்பார்த்திருக்க முடியும்.

பமாகு சட்டத்தை நீக்க எடுக்கப்பட்டிருக்கும் முடிவானது பமாகு-விடமிருந்து நிதி அதிகாரங்களை நீக்கிவிடுவது என்பதற்கு எதிராக சமர்பிக்கப்படவுள்ள அறிக்கையில் கருத்துக்கள் ஏதும் இருந்துவிடும் பிரச்னையை எதிர்கொள்ள அரசாங்கம் விரும்பவில்லை என்பதை காட்டுகிறது. அல்லது, முடிவுகளை எடுப்பதில், அதிலும் குறிப்பாக நிதி தொடர்பான முடிவுகளை எடுப்பதில் புதிய கொள்கை அறிக்கையில் அரசாங்கம் எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதும் இதன் பொருளாக இருக்கலாம். 1990களிலிருந்து பொதுப் பொருளாதாரக் கொள்கையானது சமூகத்துறை சார்ந்த கொள்கைகளில் எடுக்கப்படும் முடிவின் மீதும் பெற்றுள்ள வலிமையை இது காட்டுகிறது. உயர் கல்வி தொடர்பாக முடிவெடுப்பதில் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையை அனுமதிப்பது பற்றி எந்த மத்திய அரசாங்கமும் அல்லது மாநில அரசாங்கமும் கவலைப்படவில்லை. இந்தப் பொதுப் போக்குடன்  இப்போதைய நடவடிக்கையும் ஒத்துப்போகிறது. அரசாங்க நிறுவனங்களின் பங்கு மேலும் குறைந்து, நிதிக் கட்டுப்பாடு இறுகுகிறது. இதன் விளைவாக நாட்டின் அறிவுசார் வாழ்க்கையை மற்றும் அறிவு உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கு தனியார் முதலீட்டிற்கான இடம் அதிகரிக்கிறது.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top