ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

மக்களாட்சியிலிருந்து கும்பல் ஆட்சிக்கு

இன்றைய இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியை  அப்புறப்படுத்தி அந்த இடத்தை சட்டமின்மையும் கும்பல் கொலைகளும் பிடித்துகொண்டிருக்கின்றன.   

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

சந்தேகத்திடமானவர்கள் கேள்விமுறையின்றி கும்பலால் அடித்துக்கொல்லப்படுவது என்பது இந்தியாவில் ‘’சாதாரண’’ ஒன்றாகிவருவது ஒரு புதிய போக்கு. பெரும்பான்மையான சமூகம் எந்த நிபந்தனையுமின்றி இதை கண்டிப்பதும் இல்லை. அதற்கு மாறாக, இத்தகைய கும்பல் வன்முறை பெரும்பான்மை சமூகத்தின் ஒப்புதலை பெற்றிருப்பது போல் தோன்றுகிறது. அந்தந்த மாநில அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் சட்ட ஒழுங்கு எந்திரங்கள் இத்தகைய வன்முறையை தடுத்துநிறுத்த வேண்டும் எனக் கூறி முதன்மையான பொறுப்பு யாருடையது என்பதை நீதித்துறை சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளது,

இத்தகைய கொலைகளில் பாகுபாடுகள் இருக்கின்றன. குறிப்பாக, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளானவர் சமூகத்தின் ஆதிக்கப் பிரிவை அல்லது மத த்தை சேர்ந்தவராக இருக்கும்போது உடனடியாக தண்டனை, சட்டத்திற்கு வெளியே, அளிக்கப்படுகிறது. சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் மண்டாசூரில் எட்டு வயதான சிறுமி வன்புணர்ச்சிக்கு ஆளானதையடுத்து உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டுமென பெரும்பான்மை இந்து சமூகத்தினர் கோரியதை நாம் பார்த்தோம். இந்தக் குற்றத்தை செய்தது முஸ்லிம்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் இவர்களின் கோபத்தை மேலும் அதிகரித்தது.

குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் கொலை செய்யப்படும் விஷயத்தில், உதாரணமாக ஜூலை 1ஆம் தேதி மகாராஷ்டிராவின் தூலேயில் ஐந்து ஆண்கள் கொல்லப்பட்டது, அது திட்டமிட்டு செய்யப்பட்டதாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நான் உணர்ந்தாக வேண்டும். இவற்றை பொதுமக்களும் நியாயத்தின் அடிப்படையிலோ அல்லது புறவயமான உண்மைகளின் அடிப்படையிலோ மதிப்பிடுவதில்லை. இத்தகைய செயல்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளப்படும் இடுகைகளால் தூண்டிவிடப்படுகின்றன என்றாலும் அவை நியாயப்படுத்தப்பட முடியாதவை. உதாரணமாக, தூலே கொலைகள் நியாயப்படுத்தப்பட முடியாதவை. சட்டத்தை தனது கையில் எடுத்துக்கொண்ட கும்பல் கூறிய காரணம் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை மக்கள் ஏற்கும் வண்ணம் அரசின் சட்ட ஒழுங்கு அமைப்பு குறித்த காலத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்பதே. சட்டத்தை ஒருவர் தனது கைகளில் எடுத்துக்கொள்வது என்பது சட்ட/பகுத்தறிவு சிந்தனையானது வன்முறை செயலாக மாற வழிவகுத்துவிடுகிறது. 2018 மே மாதம் உத்ராகண்டில் ஒருவர் அடித்துக்கொல்லப்படுவதிலிருந்து காவலர் ஒருவர் காப்பாற்றியது மற்றும் மகாராஷ்டிரா மேலேகாவனில் பெண்கள் உட்பட ஐந்து பேர் ஒரு கும்பலால் அடித்துக்கொல்லப்படுவதிலிருந்து உள்ளூர்காரர்கள் காப்பாற்றியது போன்ற  எடுத்துக்காட்டாக கருதத்தக்க சில விதிவிலக்குகளும் உண்டு.

ஒருவரை கேள்விமுறையின்றி அடித்துக்கொல்வதற்கான கணநேர உந்துதல் இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது. ஒன்று, ஏற்கனவே வளர்த்தெடுக்கப்பட்டுள்ள வெறுப்புணர்வு, மற்றொன்று காவல்துறை மற்றும் நீதித்துறையின் திறனின்மையால் மக்களிடம் உருவாகியுள்ள கூட்டான பாதுகாப்பற்ற உணர்வு. உதாரணமாக, 2017 ஏப்ரலில் பசு பாதுகாவலர்களால் பேலு கான் அடித்துக்கொல்லப்பட்டது என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வளர்த்தெடுக்கப்பட்ட சந்தேகத்தால் தூண்டிவிடப்பட்ட ஒன்று.

பாலியல் வன்புணர்ச்சி தொடர்பான விவகாரங்களில் பொதுவெளியில் சாட்டையால் அடிப்பது, தூக்கில்தொங்க விடுவது போன்ற மிகக் கொடூரமான விருப்பங்கள் தனது சாதி மற்றும் சமூகத்திடம் ஒருவர் கொண்டிருக்கும் ஈடுபாட்டின் காரணமாக ஏற்படுவது. பாதிக்கப்பட்டவர் மற்றும் கொடூரமிழைத்தவரின் சமூகப் பின்னணி வெளியே தெரிந்தவுடன் சட்ட உணர்வை வடிவமைக்கும் செயல்பாட்டுடன் சாதி மற்றும் சமூகக் காரணிகள் சேர்ந்துகொள்கின்றன. கொடூரமிழைத்தவரின் சமூகப் பின்னணியும் பாதிக்கப்பட்டவரின் சமூகப் பின்னணி வேறுபட்ட து என்றால், அதாவது பாதிக்கப்பட்டவர் தலித்தாகவோ அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவராகவோ இருந்தால் பிரச்னை முற்றிலுமாக அலட்சியப்படுத்தப்படும் அல்லது சட்டத்தின் ஆட்சிக்கு பேச்சளவில் ஆதரவு தெரிவிக்கப்படும். 2006ல் மகாராஷ்டிரா கைர்லாஞ்சியில் நடந்த தலித் படுகொலையில் இது தெளிவாகத் தெரிந்தது. பாதிக்கப்பட்டவர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்றால், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வில் ஆதிக்க சமூகத்தின் உறுப்பினர்கள் மட்டுமல்ல, அதிர்ச்சிக்குரிய வகையில் ‘’சட்டத்தின் பாதுகாவலர்களே’’ சட்டத்தின் ஆட்சி மீது கடும் வெறுப்பு உமிழ்வது நடந்தது.

மறுபுறத்தில், பாதிக்கப்பட்டவர் தலித் அல்லாதவராகவோ, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவராகவோ இல்லாதபட்சத்தில் தலித் அல்லாதவர்களும் சிறுபான்மையினர் அல்லாதவர்களும் குற்றமிழைத்ததாக சந்தேகப்படும் நபரை உடனடியாக தண்டிக்க, அடித்துக்கொல்ல விரும்புகிறார்கள். 2016ல் மகாராஷ்டிராவில் கோபார்டி கிராமத்திலும், கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் மண்டாசூரிலும் நடந்த பாலியல் வன்புணர்ச்சி நிகழ்வுகளில் இத்தகைய பாகுபாடான போக்கு இருப்பது நன்கு தெரிகிறது. கோபர்டியில் பாதிக்கப்பட்டவரின் சமூகப் பின்னணியை கொண்ட பெண்கள் காட்டிய கோபம் ஓர் உதாரணம். பாலியல் வன்புணர்ச்சி செய்தவரின் பிறப்புறுப்பு நசுக்கப்பட வேண்டுமென இந்தப் பெண்கள் தொலைக்காட்சிகளில் கோரியதை பார்க்க முடிந்தது. மண்டாசூரிலும் இதே மாதிரியான எதிர்வினைதான். மண்டாசூரில் பெரும்பான்மை சமூகத்தினருக்கு வெற்றி-வெற்றி என்ற சூழல். நீதி குறித்த அவர்களது ஒருதலைபட்சமான கொள்கை இதுதான்: தலை விழுந்தால் நான் வென்றேன். பூ விழுந்தால் நீ தோற்றாய்.

கும்பலால் அடித்துக்கொல்லப்படுவதில் காட்டப்படும் பாகுபாடான எதிர்வினை மற்றும் உடல்ரீதியான தண்டனைக்கான கோரிக்கை விஷயங்களில் பாதிக்கப்பட்டவர்களின் சாதி அல்லது மத சித்தாந்தத்திற்கு எந்த அளவிற்கு ஒருவர் நெருக்கமாக இருக்கிறாரோ அந்த அளவிற்கு சட்டத்தின் ஆட்சியிலிருந்து அவர் விலகி இருக்கிறார். குற்றமிழைத்தவரின் சாதி அல்லது மதத்திற்கு நெருக்கமாக இருக்குமளவிற்கு சட்டத்தின் ஆட்சிக்கும் நெருக்கமாக இருக்கிறார். இந்தியச் சூழலில் சாதி மற்றும் மத உணர்வானது ஒரே சாரத்தையே கொண்டுள்ளது. சாதி மற்றும் மத உணர்வு எந்த அளவிற்கு வலிமையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு சட்ட உணர்வின் தாக்கமும், சட்டத்தின் மீதான நம்பிக்கையும் பலவீனமானதாக இருக்கிறது. இதற்கு மாறாக, இந்திய குடிமக்களிடையே சாதி உணர்வு எந்த அளவிற்கு குறைவாக இருக்கிறதோ அத அளவிற்கு சட்ட உணர்வு வலிமையானதாக இருக்கும்.

அடித்துக்கொல்வதற்கான ஆசை மற்றும் அதை நிறைவேற்றும் செயல்பாடு இரண்டுமே சட்டத்தின் ஆட்சி மதிக்கப்பட வேண்டுமென்பதை தீவிரமாக பலவீனப்படுத்துகிறது. இதன் விளைவாக ஜனநாயகத்தின் எதிர்காலமே ஆபத்திற்குள்ளாகியிருக்கிறது.

Back to Top