ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

பருப்பு விவசாயிகளின் முடிவற்ற துன்பங்கள்

பருப்புகளின் உற்பத்தியிலும் விலைகளிலும் ஏற்படும் ஏற்ற இறக்கங்களிலிருந்து விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாக்க நீடித்துநிலைக்கக்கூடிய திட்டங்கள் தேவை.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

இப்போது பருப்பு விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்குக் காரணம் பருப்பு சந்தையில் பருப்பின் வரத்து அதிகமானதே. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பருப்பின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பருப்பு விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால் 2014-15ல் நிலைமை மிகவும் வேறாக இருந்தது. உற்பத்திக் குறைவாக இருந்ததால் அப்போது விலையேற்றம் இருந்தது. அது வாங்குபவர்களை பாதித்தது, மக்கள் பருப்பு உணவு உட்கொள்ளப்படுவதை பாதித்தது. இதன் விளைவாக பருப்பு பயிரிடப்படும் நிலப்பரப்பு அதிகரித்து, சந்தையில் பருப்பு வரத்து அதிகரித்ததால் 2018ல் விலையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. பருப்பு உற்பத்தி மற்றும் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான கொள்கைத்திட்டம் எதையும் அரசாங்கம் வகுக்கவில்லை.

2015-15ல் பருப்பு உற்பத்தியானது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகிறபோது 9.7% குறைவு. தொடர்ச்சியாக ஏற்பட்ட வறட்சிகளும் வர்த்தகர்களின் பதுக்கல்களுமே இந்த பற்றாக்குறைக்கான காரணங்களாகும். 88% பருப்பு உற்பத்தி மழையை நம்பியுள்ள பகுதிகளில் நடப்பதால் வறட்சியினால் உற்பத்தி பாதிக்கப்படும் ஆபத்து அதிகம். 2015-16ல் உள்நாட்டு பருப்பு உற்பத்தி 1.635 கோடி டன்கள் ஆகும், இறக்குமதி செய்யப்பட்டது  57. 9 லட்சம் டன்கள். ஆக மொத்தத்தில்  உள்நாட்டு நுகர்வுக்கென்று இருந்தது 2.189 கோடி டன்கள் மட்டுமே. இந்த காலகட்டத்தில் விலையை நிலைப்படுத்த அரசாங்கம் சற்று தாமதமாக தலையிட்டு கொள்முதலை அதிகரிக்கவும், சுதந்திரமாக இறக்குமதி செய்துகொள்ள அனுமதிக்கவும் (துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு மற்றும் உளுந்து), ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் முடிவுசெய்தது. இன்றியமையாத பண்டங்கள் சட்டத்தின் கீழ் கையிருப்பு எவ்வளவு வைத்திருக்கலாம் என்பதற்கான அளவையும் அமல்படுத்த முடிவுசெய்தது. சந்தை விலையை நிலைப்படுத்த 20 லட்சம் டன்கள் கொள்முதல் செய்வது என அரசாங்கம் இலக்கு வைத்தது. பருப்பு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு ஊக்கம் தருவதற்காக குறைந்தபட்ச ஆதரவு விலையை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு உயர்த்தியது.

அப்போதிலிருந்து சந்தை நிலவரம் மாறியது. நல்ல பருவமழையினாலும் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டதாலும் பருப்பு பயிரிடப்படும் நிலப்பரப்பின் அளவு அதிகரித்ததுடன் உற்பத்தியின் அளவும் அதிகரித்தது. 2016-17ல் உள்நாட்டு உற்பத்தியானது 2.295 கோடி டன்களாக உயர்ந்தது, 66.1 லட்சம் டன்கள் இறக்குமதி செய்யப்பட்டது. ஆக மொத்தத்தில் உள்நாட்டு நுகர்விற்கான இருப்பு 2.942 கோடி டன்களாக உயர்ந்தது. முந்தைய ஆண்டுகளை விட இது மிக அதிகம்.

2017-28க்கான மதிப்பீட்ட்டின்படி உற்பத்தியானது வரலாறு காணாத அளவிற்கு 2.451 கோடி டன்னாக உயர்ந்தது. இது கடந்த ஆண்டை விட 13.7 லட்சம் டன் அதிகம், கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி உற்பத்தியை விட 56.6 லட்சம் டன் அதிகம். 2017 ஏப்ரல் – டிசம்பர் காலகட்டத்தில் இறக்குமதி 51 லட்சம் டன் அதிகம். இதன் விளைவாக தேவையை விட வரத்து அதிகமாகிவிட்டது. விலைகள் குறையத் தொடங்கின. பருப்பின் சராசரி மாத மொத்த விற்பனை விலைக் குறியீட்டெண் 26.7% குறைந்தது. மண்டிகளில் பெரும்பாலான பருப்புகளின் விலைகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகிறபோது 30% குறைந்தது. குறைந்தபட்ச ஆதரவு விலை பெயரளவில் உயர்த்தப்பட்டிருந்த நிலையில் பல மாநிலங்களில் மண்டிகளில் நிலவிய குறைந்தபட்ச ஆதரவு விலையாவது விவசாயிகளுக்கு கிடைத்திருக்க வேண்டும், ஆனால் அதை விட குறைவான விலையே அவர்களுக்கு கிடைத்தது. பயிரிடுவதற்கான செலவுகள் (சி2 என்றழைக்கப்படும் இது விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தால் அளவிடப்படுகிறது) உயர்ந்துகொண்டிருந்தன. பயிரிடுவதற்கான செலவுகள் அதிகரிப்பது என்பது 2015-16ல் 2.8%ஆக இருந்த து 2016-17ல் 3.7% ஆக அதிகரித்தது. ஓர் அலகு பருப்பு உற்பத்திக்கு விவசாயிக்கு கிடைக்கும் குறைந்தபட்சத் வருவாய் குறைந்துவிட்டது என்பதே இதன் பொருள். மேலும் கொள்முதல் குறித்த கொள்கை செயலூக்கத்துடன் அமல்படுத்தப்படாதது நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டது. ஆகவே, குறைந்தபட்ச ஆதரவு விலையானது விவசாயிகளுக்கு உறுதிசெய்யப்பட்ட விலையையோ அல்லது சந்தையையோ தரத் தவறிவிட்டது.

பருவத்திற்கு ஏற்ப விலைகளில் ஏற்ற இறக்கமானது பருப்புகள் விஷயத்தில் தொடர்ந்து நடக்கிறது என்பதை பருப்பு சந்தைகளில் நிலவும் பற்றாக்குறைகளும் உபரிகளும், விலையேற்றமும் வீழ்ச்சியும் காட்டுகின்றன. பற்றாக்குறை நிலவும் போது கைக்கொள்ளப்படும் அணுகுமுறையிலிருந்து வேறுபட்ட அணுகுமுறை இன்றைய நெருக்கடியான சூழலில் தேவைப்படுகிறது. தேவைக்கு அதிகமாக உள்ள வரத்தை உள்வாங்கிக்கொள்வதற்கான வழிகள் கண்டறியப்பட வேண்டும். பருப்பு சந்தையில் தேவைக்கு அதிகமான வரத்து இருப்பதன் விளைவாக நுகர்வோர் பலனடைவதும் விவசாயிகள் நட்டப்படுவதுமாக இருக்கக் கூடாது என்பதுடன் விவசாயிக மற்றும் நுகர்வோரின் பாதிப்பில் வர்த்தகர்கள் பலனடைவாதாகவும் இருக்கக் கூடாது.

பருப்பு உற்பத்தியிலும் நுகர்விலும் உலகின் ஆகப் பெரிய நாடாக இருக்கும் இந்தியாவில் எந்த மாதிரியான தலையீடுகள் செய்யப்பட வேண்டும்? இந்தியாவிற்கு வெளியில் பெரிய அளவில் பருப்புகளுக்கான தேவை இல்லாத நிலையில் விலையை நிலைப்படுத்துவதற்கான தீர்வுகள் உள்நாட்டில் வகுக்கப்படும் கொள்கைகளின் மூலம் மட்டுமே காணப்பட முடியும். பெரும் மகசூல் நடக்கும்போது விலைகள் வீழ்ச்சியடைவதை முன்கூட்டியே தடுக்க சரியான விலை கொடுத்து குறிப்பிட்ட அளவை கொள்முதல் தானே செய்வதாக அரசாங்கம் விவசாயிகளுக்கு உறுதியளிக்க வேண்டும். மேலும் இறக்குமதிக்கான அளவுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும் ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டியவை என்ற அதே நேரத்தில் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க செயலூக்கமான கொள்கைத் திட்டங்களும், நிறுவனங்களும் தேவை, குறிப்பாக, பற்றாக்குறையாலோ அல்லது தேவைக்கு அதிகமான உற்பத்தியாலோ பருவகாலத்திற்கேற்ப விலையில் ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் பயிர்களுக்கு இது அவசியம். உற்பத்தியாளர் அமைப்புகள் அல்லது கூட்டுறவு சங்கங்கள் போன்றவற்றை உருவாக்கி விவசாயிகள் அவர்களாகவே சந்தையை அணுகுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் இடைத்தரகர்கள் விலைகளை தங்களுக்கேற்றவாறு கையாள்வதை தடுக்க முடியும். நல்ல விதைகள், பாசன வசதி, குளிர்பதன வசதி கொண்ட சேமிப்புகிடங்குகள் ஆகியவையும் அவசியம். விவசாய நிறுவனங்களுடன் விவசாயிகள் நீண்ட கால ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வது சந்தையில் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களிலிருந்து விவசாயிகளை ஓரளவிற்கு பாதுகாக்கும்.

விரிவுபடுத்தப்பட்ட, செயலூக்கமான கொள்முதல் திட்டங்களை மாநிலங்கள் அமல்படுத்துவதும், ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உள்ள மாநிலங்களில் அரசு பொது விநியோகத்தின் மூலம் பெருமளவிலான பருப்புகளை ஏழைகளுக்கு கிடைக்கும் விதமாக செய்வதும் இப்போது உடனடியாக செய்யப்பட வேண்டியவையாகும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top