ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

டிரம்ப் – கிம் ‘’வரலாற்றுச்’’ சந்திப்பு

பியாங்யாங்குடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வாஷிங்டன்னை கொண்டுவந்ததில் ’’பரஸ்பர அச்சுறுத்தல்’’ உத்திக்கு முக்கியமான பங்கிருக்கிறது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

2018 ஜூன் 12 அன்று தங்களது சிங்கப்பூர் உச்சிமாநாட்டில் அமெரிக்க குடியரசுத்தலைவர் டொனால்ட் டிரம்ப்பும் வட கொரிய அதிபர் கின் ஜாங்-உன்னும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தங்களது சந்திப்பை ‘’வரலாற்றுச் சிறப்பு’’ வாய்ந்தது என்று அழைத்தனர். ஊடகங்களும் மீண்டும் மீண்டும் அப்படியே அந்த சந்திப்பு குறித்து வர்ணித்திருந்தன. அமெரிக்க குடியரசுத்தலைவருக்கும் வட கொரிய அதிபருக்கும் நேருக்குநேர் நடக்கும் முதல் சந்திப்பு இது என்பதை கருத்தில்கொள்கிறபோது உச்சிமாநாட்டின் இறுதியில் கூட்டாக வெளியிடப்பட்ட மிகச் சுருக்கமான அறிக்கை பல கேள்விகளுக்கு விடையளிக்கவில்லை. வட கொரியாவிற்கு ‘’பாதுகாப்பு உறுதியை’’ அளிக்க டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார் என்பதும் ‘’கொரிய தீபகற்பத்தை முற்றிலுமாகவே அணு ஆயுதமற்றதாக”” ஆக்குவதாக கிம் ‘’மீண்டும் உறுதியளித்துள்ளார்”” என்பதும்தான் இந்த அறிக்கையின் சாரம்.

ஆம், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்றதாக்குவதாக ஏப்ரல் 2018ல் தென் கொரிய அதிபர் மூன் ஜெ-இன் உடன் நடந்த மாநாட்டில் உறுதியளித்த கிம் இப்போது ‘’மீண்டும் உறுதியளித்துள்ளார்’’. 2018 ஏப்ரல் 27 அன்று இண்டு கொரிய நாடுகளின் தலைவர்களும் வெளியிட்ட பான்முன்ஜோம் அறிக்கையின் மூன்றாவது பிரிவின் கடைசி விதி ‘’அணு ஆயுதங்களை முழுமையாக அகற்றி அணு ஆயுதமற்ற கொரிய தீபகற்பத்தை உருவாக்கும் பொது இலக்கை யதார்த்தமாக்குவது உறுதி செய்யப்பட்டது’’ என்றும் இதற்காக இரண்டு கொரிய நாடுகளும் ‘’சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் செயலூக்கத்துடன் கோருவதென ஒப்புக்கொண்டன’’ என்றும் குறிப்பிடுகிறது. இதைத்தான் சிங்கப்பூரிலும் கிம் தொடர்ந்து செய்திருக்கிறார். அதற்காக அவருக்கு ஓர் உறுதியும் அளிக்கப்பட்டிருக்கிறது.

போரைப் பற்றிய அச்சத்தை மீண்டும் மீண்டும் வட கொரியாவிடம் உருவாக்கிய அமெரிக்க-தென்கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிகளை நிறுத்துவதாக கிம் உடனான சந்திப்பிற்கு பிறகு டிரம்ப் அறிவித்தார். மேலும், தென் கொரியாவில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் 32,000 அமெரிக்க துருப்புகளை அமெரிக்காவிற்கு மீண்டும் அழைத்துக்கொள்ளவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஏதோ இந்த ஒரு மாநாட்டிலேயே எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்பதைப் போல அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பேம்பியோ ‘’முழுமையான, சரிபார்க்கத்தக்க, மாற்ற முடியாத அணு ஆயுத ஒழிப்பு’’ என்று பெரிய பெரிய வார்த்தைகளை மீண்டும் கூறவில்லை. வட கொரியா தனது பாதுகாப்பு பற்றி கொண்டுள்ள கவலை உண்மையானதே என்பதை முதன் முறையாக ’’ஏகாதிபத்தியத்தின் தலைமை’’ ஒப்புக்கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களின் வழியே வட கொரியா மீது தான் விதித்துள்ள மிகக் கடுமையான தடைகளின் காரணமாக அம் மக்களின் வாழ்விற்கு ஏற்படுத்தியுள்ள நிலைமை பற்றி அமெரிக்கா இது வரை எதுவும் பேசவில்லை.

வட கொரிய மக்களுக்கு உணவு கிடைப்பதை தடுப்பதை ஓர் ஆயுதமாகவே வாஷிங்டன் பயன்படுத்தியிருக்கிறது. வட கொரியாவில் விளைநிலம் குறைவு என்பதால் (அதன் பெரும் பகுதி மலைகளால் நிரம்பியது) உணவுத் தேவைக்காக அது இறக்குமதியை நம்பியிருக்கிறது. ஆனால் தடைகளின் காரணமாக ஏற்றுமதி மூலம் கிடைக்க் கூடிய 90% வருவாய் தடுக்கப்பட்டுவிட்டதால் மிக அவசியமானவற்றை கூட இறக்குமதி செய்ய முடியவில்லை. இதற்கும் அந்த நாட்டின் அணு ஆயுத திட்டத்திற்கும் என்ன தொடர்பு என்று ஒருவர் கேட்கக்கூடும்? அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பழிவாங்கும் குணத்திற்கு எந்த எல்லைகளும் கிடையாது என்பதுதான் பதில்.

1945 ஆகஸ்டில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகியில் இரண்டு அணுகுண்டுகளை போட்டு பேரழிவை உண்டாக்கிய பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து 1950 நவம்பர் 30 அன்று கொரியாவில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வாஷிங்டன் தயாராகவே இருப்பதாக அமெரிக்க குடியரசுத்தலைவர் ஹாரி எஸ் ட்ரூமன் கூறியதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அன்றையலிருந்து வட கொரியாவிற்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்படக்கூடிய அச்சத்தை வாஷிங்டன் தொடர்ந்து ஊட்டிவருகிறது. 1958ல் கொரிய தீபகற்பத்தில் ‘’அணு ஆயுதங்களை நிறுத்திய’’ பிறகு அச்சுறுத்தல் உத்தியை அது தொடர்ந்து செய்துவருகிறது. இத்தகைய ஏகாபத்திய உத்திகள்தான் இறுதியா வட கொரியாவை 2006, 2009, 2013 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் அணு சோதனைகளை நடத்தி அணு ஆயுதங்களை தயாரிக்கவைத்தது. இதன் விளைவாக ‘’பரஸ்பர அச்சுறுத்தல்’’ உத்தி நடைமுறைக்கு வந்தது. ஈரான் மீது போர்தொடுப்பதற்காக பொதுமக்களின் ஆதரவை திரட்டியபோது அமெரிக்க குடியரசுத்தலைவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் வட கொரியாவையும் ஈரானையும் ‘’தீமையின் அச்சு’’ என்று வர்ணித்தார். அப்படியெனில் அடுத்து எப்போது அமெரிக்கா நம் மீது குண்டுமாரி பொழியும் என இரண்டு நாடுகளுமே அச்சத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தன. வாஷிங்டன் தன்னுடன் நன்னம்பிக்கையுடன் அமைதிக்காக பேச்சுவார்த்தை நடத்துமெனில், பாதுகாப்பிற்கான உறுதிகளை அளிக்குமெனில் அமைதியின் பொருட்டு அணு ஆயுதங்களை கைவிட்டுவிட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் மக்களின் நலன்களிலும் கவனத்தை குவிக்கத் தயார் என அணு ஆயுத சக்தி பெற்ற பிறகும் வட கொரியா தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தது.

ஆனால் அமெரிக்க ஏகதிபத்தியமோ வட கொரியாவை தொடர்ந்து ராட்சஸனாகவே சித்தரித்துவந்ததுடன் அது தனது பாதையை மாற்றிக்கொள்வதை மேலும் கடினமாக்கியது. ஆனால், ‘’பரஸ்பர அச்சுறுத்தல்” உத்தியானது இறுதியாக ஏகாதிபத்தியத்தை, குறைந்தபட்சம் இப்போது வெள்ளை மாளிகையில் அதிகாரத்தில் இருப்பவரையாவது, தனது கொரியா கொள்கையை மாற்றிக்கொள்ள வற்புறுத்தியிருக்கிறது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் தென் கொரிய அதிபர் மூன் ஆற்றியுள்ள சிறப்பான பங்கையும் ஒருவர் அங்கீகரித்தாக வேண்டும். இனி பியாங்யாங்குடனான தனது உறவை வாஷிங்டன் ராணுவமயமற்றதாக்கி இயல்புநிலைக்கு கொண்டுவர வேண்டும். வட கொரியா உடனான உறவை மாற்றும் டிரம்பின் முயற்சிக்கு எதிர்ப்பு ஜனநாயக கட்சியின் வலதுசாரி பிரிவினரிடமிருந்தும் அமெரிக்க நிர்வாகத்தின் ஒரு பிரிவினரிடமிருந்தும் வருகிறது. சிங்கப்பூரில் டிரம்ப் ‘’தந்திரமாக ஏய்க்கப்பட்டுவிட்டார்” என்று நியூ யார்க் டைம்ஸில் வெளியான வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கட்டுரை குறிப்பிட்டது. வட கொரியாவை அமெரிக்காவிற்கு சமமாக நடத்தினார் என்றும் இப்போது கொரிய தீபகற்பத்தில் நிலவும் அதிகார சமன்பாட்டிற்கு துணைபோய்விட்டார் என்றும் அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் ‘’சிறுபான்மைத் தலைவர்” நான்சி பெலோசி குறைபட்டுக்கொண்டுள்ளார்.

சிங்கப்பூர் உச்சிமாநாடு நடந்துள்ளபோதிலும் கொரியா விஷயத்தில் 1950லிருந்தே அமெரிக்கா கடந்துவந்துள்ள பாதையை பார்க்கிறபோது அடுத்துவரும் பேச்சுவார்த்தைகளில் வாஷிங்டன்னிடம் பியாங்யாங் கவனமாக இருக்கவேண்டும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top