ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

பிளாஸ்டிக் பேரழிவு

சட்ட அமலாக்கத்தை உறுதி செய்யாமல், நுகர்வோர் விழிப்புணர்வு இல்லாமல் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வது பலனற்றது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

உத்தரவுகளும் அறிவிப்புகளும் மாற்றத்தைக் கொண்டுவந்துவிடாது. அவை விரிவான, யதார்த்தமான நடைமுறைப்பூர்வமான திட்டங்களால் வலுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஒரு முறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக்குகளை 2022ல் இந்தியா முற்றிலுமான ஒழித்துவிடும் என்ற அதிரடியான அறிவிப்பை உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கும்போதிலும் இது சாத்தியமாவதற்கான திட்டங்களை கணக்கிலெடுத்துக்கொண்டு இந்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

பிளாஸ்டிக் என்று நாம் அழைக்கும் பாலிதீன் 1898ல் கண்டுபிடிக்கப்பட்டு 1939லிருந்து பெருமளவில் உற்பத்தி தொடங்கியது. அப்போதிலிருந்து இந்தப் பொருள், ஒரு முறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் பைகள் உட்பட, பல்வேறு பயன்பாடுகளின் மூலம் நமது வாழ்க்கையில் ஊடுருவிவிட்டது. இது விலை குறைவு, நெகிழ்வானது, எடை குறைவானது. இதற்கு பதில் வேறொன்றை கொண்டுவருவது அவ்வளவு எளிதானதல்ல. இது பொருளாதார வளர்ச்சி மாதிரியின் ஓர் அடையாளமும் கூட. இதை இந்தியா ஏற்கனவே தொழில்வளர்ச்சி அடைந்திருந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தது. பயன்படுத்தப்பட்டவுடன் தூக்கியெறிப்பட்டுவிட்டு அடுத்த பயன்பாட்டிற்கு புதியது வாங்கப்பட வேண்டும் என்பது இந்தப் பொருளின் அடிப்படை. எதுவும் நீடித்து நிலைத்திருக்கக் கூடாது. அப்போதுதான் தொழிற்துறை எந்திரங்கள் தொடர்ந்து வளர முடியும். இந்த பொருளாதார வளர்ச்சி மாதிரியை மாற்றுவது என்பது இப்போது நினைத்துப்பார்க்க முடியாததாக இருக்கிறது. இருந்தும் இதுதான் வீசியெறியும் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளும் நமது அணுகுமுறையின் மூலமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் இதை ‘’பிளாஸ்டிக் பேரழிவு’’ என்று அழைக்கிறது.

நமது கடல்களில் 15 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதாக ஆதாரங்களுடன் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள், தாவரங்கள் மூச்சுவிட முடியாது திணறுகின்றன என்று சொல்லுவது ஒரு பேச்சுக்காக சொல்லப்படும் கூற்றல்ல. மிகப் பெரும் நிலப்பரப்பு குப்பைக்குழிகளால் நிரப்பப்பட்டுள்ளது. இவை அழிக்க முடியாத பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியிருப்பதால் மக்கி அழிய வாய்ப்பில்லை. ஆனால் இப்போது அதிக கவலைதரும் விஷயம் என்னவெனில் இந்தக் கழிவுகளிலிருந்து பிளாஸ்டிக் நுண்துகள்கள் நீராதாரங்களிலும் உணவுச் சங்கிலித் தொடரிலும் கலக்கத் தொடங்கிவிட்டது என்பதுதான். பல நாடுகளில் குழாய்த் தண்ணீரை சோதித்துப் பார்த்ததில் தண்ணீரில் பிளாஸ்டிக் நுண்துகள் கலந்திருப்பதில் அமெரிக்கா, லெபனானுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இந்தியா இருப்பது தெரியவந்தது. சோதித்துப்பார்க்கப்பட்ட மாதிரிகளில் 82.4% மாதிரிகளில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருந்தன. தண்ணீர் மூலமோ அல்லது உணவு மூலமோ வயிற்றுக்குள் செல்லும் பிளாஸ்டிக் நுண்துகள்களால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள் பற்றி இன்னமும் ஆராயப்பட்டுவரும் நிலையில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் தண்ணீரில் கலக்கின்றன என்பதே மிகவும் கவலைதரக்கூடிய விஷயமாகும். 1950லிருந்து இது வரை 803 கோடி டன் பிளாஸ்டிக் உலகெங்கும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் 20% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படவோ அல்லது எரித்தழிக்கப்படவோ முடியும். மீதள்ளவை கடல், மலையடிவாரங்கள், ஆறுகள், ஊற்றுகள், கிணறுகள், குப்பைக்குழிகள் ஆகிய இடங்களில் கொட்டப்பட்டுள்ளன. இது குறிப்பாக இந்தியாவில் நகரங்களை பீடித்திருக்கும் நோயின் அடையாளமாக இருக்கிறது. இந்தப் பிரச்னையை சமாளிப்பது என்பது பிரம்மாண்டமான சவால். இதற்கு நமது உற்பத்தி மற்றும் நுகர்வு கலாச்சாரத்திலேயே அடிப்படை மாற்றத்தை கொண்டுவர வேண்டியிருக்கும்.

இந்தியாவில் இது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கும் கதையாகவே இருக்கின்றன. இதற்கு முன்னர் மோட்டார் வாகனங்களால் ஏற்படும் மாசை கட்டுப்படுத்த எரிபொருளின் தரம் குறித்து எதையும் செய்யாமல் வாகனங்களுக்கு மாசுக்கட்டுப்பாட்டு சோதனையை மட்டும் கட்டாயமாக்கப்பட்டது. இது வரை 18 மாநிலங்களில் குறிப்பிட்ட நகரங்களிலும் பகுதிகளிலும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. எங்குமே இது வெற்றிகரமாகவில்லை. ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை பெரிதும் வெற்றிகரமாக குறைத்தது சிக்கிம் மாநிலம் மட்டுமே. ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு 1998லிருந்து இங்கு தடை இருந்தபோதிலும் இன்று வரை அதை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. ஆனால் பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகள் பற்றி விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியதுடன் பிளாஸ்டிக்கிற்கு மாற்று ஏற்பாடுகளை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியது சிக்கிம். ஆனால் டெல்லியிலும், சண்டிகரிலும் பிளாஸ்டிக்கிற்கு விதிக்கப்பட்ட தடையானது நுகர்வோரிடம் அதன் பயன்பாட்டை குறைக்கவோ, அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவோ செய்யவில்லை என்பதை டாக்சிஸ் லிங்க் என்ற அமைப்பு நடத்திய ‘’நச்சுப்பொருட்களும் சுற்றுச்சூழலும்” பற்றிய 2014ஆம் ஆண்டு ஆய்வு காட்டுகிறது. மிகச் சிறிய மாநிலங்களான டெல்லியிலும் சண்டிகரிலும் அனுபவம் இப்படியெனில் சமீபத்தில் அதிரடித்தடையை விதித்திருக்கும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்தத் தடை எந்த அளவிற்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை.

பிரச்னை இரண்டு அம்சங்களை கொண்டது என டாக்சிக்ஸ் லிங்க் ஆய்வு வலியுறுத்துகிறது. ஒன்று, காய்கறிகள், இறைச்சி போன்ற எளிதில் அழுகும் பொருட்களை விற்கும் வியாபரிகளுக்கு பிளாஸ்டிக் பைகள் எளிதில் கிடைப்பவையாகவும் விலை மலிவாகவும் இருக்கின்றன. இரண்டு, பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகள் பற்றிய விழிப்புணர்வு நுகர்வோரிடம் மிகக் குறைவாக இருப்பது. மேலும் பல்வேறு வகைப்பட்ட சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளும் பொதுவாகவே மிக மோசமான முறையில்தான் இந்தியாவில் அமல்படுத்தப்படுகின்றன. ’’பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் தனிப்பட்ட நுகர்வோர்கள் பலனடைகிறார்கள் ஆனால் அதற்கான விலையை சமூகம் கூட்டாக தரவேண்டியிருக்கிறது’’ என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

ஒழுங்குமுறை, அச்சுறுத்தல், ஊக்குவிப்புகள் போன்றவை தீர்வுக்கான ஒரு பகுதி மட்டுமே. பெரிய சவால் என்னவெனில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியையே நிறுத்துவதுதான். இதியாவில் 85% முதல் 90% வரையிலான பிளாஸ்டிக் உற்பத்தி சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் நடக்கிறது. இவை பெரும்பாலும் எந்த ஒழுங்குமுறைக்குள்ளும் வருவதில்லை. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை நிறுத்துவது மட்டும் போதுமானதல்ல. மிகப் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட பல பெரும் நிறுவனங்களின்  உணவுப்பொருட்களின் பொட்டலங்களால் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகள் மொத்த பிளாஸ்டிக் கழிவுகளில் 48% என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆகவே நாம் உற்பத்தியாளர்களை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் அப்போதுதான் மறுசுழற்சி செய்யப்பட முடியாத பிளாஸ்டிக் பைகளை பொட்டலம் கட்ட பயன்படுத்துபவர்கள் அதற்குப் பொறுப்பேற்று அவற்றை அப்புறப்படுத்தவும் கட்டனம் செலுத்துவார்கள். மேலும், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மக்கி அழியக்கூடிய பொருளாலான அல்லது பேப்பர், துணி போன்றவற்றாலான விலை குறைவான பைகளை அறிமுகப்படுத்த வேண்டும். இறுதியாக, சொந்த வசதியா அல்லது சுற்றுச்சூழல் பேரழிவா? எது வேண்டும் என்பதை நுகர்வோர் தீர்மானித்தாக வேண்டும்.

Updated On : 27th Jun, 2018

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top