ஆர்.எஸ்.எஸ்-ம் அதன் ‘’தாரளவாதமும்

பிரணாப் முகர்ஜியை அழைப்பதன் மூல ராஷ்டீரிய சுயம்சேவக் சங்கம் எதை நிரூபிக்க முயல்கிறது?

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

சுயம்சேவக்குகள் மத்தியில் உரையாற்ற முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ராஷ்டீரிய சுயம்சேவக் சங்கம் விடுத்த அழைப்பும், அதை அவர் ஏற்றுக்கொண்டதும் குறித்து ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் அனைத்து விதமான ஊகங்களையும் எழுப்பியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்.ஸா அல்லது முகர்ஜியா, இந்த அழைப்பால் பலனடையப்போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. யார் பலனடையப்போவது என்பதல்ல இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம், மாறாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் செய்தித்தொடர்பாளர்கள் தந்திருக்கும் தாராளவாத நியாயமே நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.

ஆர்.எஸ்.எஸ். தன்னை தாராளவாத அமைப்பாக சொல்லிக்கொள்வதை தாராளவாதத்தின் பரந்துபட்ட சட்டகத்திற்குள் வைத்து நாம் பார்க்க வேண்டும். தாராளவாதத்தின் அடிப்படையில் இந்த அழைப்பை நியாயப்படுத்த ஆர்.எஸ்.எஸ். செய்யும் முயற்சிகளை மதிப்பிடுவதற்கு ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு அம்சங்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். உரையாடல், ஜனநாயக நடைமுறைகள், இத்தகைய நடைமுறைகள் மூலம் நேர்மறையான முடிவை வந்தடைவது போன்றவை தாராளவாத சட்டகத்தின் முதல் அம்சமாகும். பொதுவெளிக்கான ஆளுமைக்கும் தாராளவாத கொள்கைகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்பயக்கும் உறவை நீடித்திருக்கச் செய்வது இரண்டாவது அம்சமாகும்.

ஆகவே ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் கேட்க இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, தனது அழைப்பை நியாயப்படுத்த தாராளவாத சட்டகத்தின் முதல் அம்சத்தை அது பயன்படுத்துவதாக சொல்லிக்கொண்டாலும் அத்தகைய உரையாடலிலிருந்து பெறப்படும் ஒருமித்தகருத்தை அல்லது முடிவை மக்கள் அனைவரின் நலனுக்காக ஏற்றுக்கொள்கிறதா? வேறு வார்த்தைகளில் சொன்னால், ஜனநாயக நடைமுறையின்பாலான ஆர்.எஸ்.எஸ்.ஸின் நேசமானது மனித மதிப்பின் சமமான தார்மீக பகிர்மானம் போன்ற நெறிசார்ந்த கொள்கைகள் பற்றிய ஒருமித்தகருத்திற்கு தர்க்கரீதியாக இட்டுச்செல்கிறதா? இரண்டு, ஒரு பொதுவெளி ஆளுமையை (பஃப்ளிக் பர்சனாலிட்டி) உரையாடலுக்கு அழைப்பது நியாயம் என்று அது நம்புகிறதாயின், முன்னாள் குடியரசுத்தலைவருடனான உரையாடலுக்கான அடிப்படையாக நெறிசார்ந்த கொள்கைகளை வகுப்பதை அது தானாக முன்வந்து செய்யுமா? இந்தக் கேள்விகளில் சந்தேகம் இருக்கிறது. அது தாராளவாத நடைமுறைகளுக்கும் அதன் கொள்கைகளுக்குமான ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேச்சளவிலான வாக்குறுதியில் அந்த சந்தேகத்தின் தோற்றுவாய் இருக்கிறது.

இத்தகைய ஓர் அழைப்பை முன்னாள் குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என்று கூறி இந்த அழைப்பை சந்தேகமாக பார்ப்பவர்களை அல்லது நேரடியாக எதிர்ப்பவர்களை அச்சுறுத்த ஜனநாயக நடைமுறைகளை, அதிகாரப்பூர்வமான நடைமுறைகளை ஆர்.எஸ்.எஸ்.ஸின் செய்தித்தொடர்பாளர்கள் பயன்படுத்துவதாகத் தோன்றுகிறது. ஜனநாயக நடைமுறைகளை மதிக்கும்படி தனது எதிர்ப்பாளர்களை கேட்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். தாராளவாத அமைப்பைப்போல் தோன்றலாம். ஆனால் நடைமுறைகளைப் பற்றிய வார்த்தைஜாலங்களே இலக்காக இருக்க முடியாது. எல்லா மனிதர்கள் மீதும் சமமான அக்கறைகொள்வது போன்ற உலகளாவிய விழுமியங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக சம்பந்தப்பட்டவர்கள் வந்தடையும் முடிவுகள் இருக்கும்படி நடைமுறைகள் வகைசெய்யும்போதுதான் அந்த நடைமுறைகள் பொருளுடையவையாக இருக்கும். மனித கண்ணியம், நட்பு, சுதந்திரம், சமத்துவம், நீதி போன்றவையே இந்த விழுமியங்கள். ஒரு மனிதனின் தார்மீக மதிப்பை ஒரு புனித விலங்கிற்கும் கீழானதாக பார்க்காதபடியான சூழலை நாம் உருவாக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். உட்பட சில அமைப்புகள் ஏற்கனவே ஒரு முடிவிற்கு வந்துவிட்ட நிலையில் உரையாடலின் மூலம் முடிவை வந்தடைவதற்கு அழுத்தம் தருவது என்பது குறிப்பிட்ட முக்கியத்துவத்தை பெறுகிறது. உதாரணமாக, “தங்களை தீவிரமான மதச்சார்பின்மைவாதிகள் என்று கூறிக்கொள்ளுபவர்கள் உண்மையில் போலி மதச்சார்பின்மைவாதிகள்” என்று ஆர்.எஸ்.எஸ். மீண்டும் மீண்டும் கூறுகிறது.

இத்தகைய முடிவுகள் ஒருவரது விருப்பத்திற்கேற்றாபோன்று செய்யப்படும் மதிப்பீடுகளின் அடிப்படையிலானவை என்பதால் அவை உலகளாவிய அளவில் சரியாக இருக்க முடியாதவை என்பதால் இந்த முடிவுகளை தாண்டி நாம் சென்றாக வேண்டும். இந்த முடிவுகள் ஒரு பக்கச் சார்பானவை என்பதாலேயே பொதுவெளியில் திறந்த மனதுடனான உரையாடலில் ஈடுபட விரும்பும் மக்களால் ஆராயப்படுவதிலிருந்து இவை தப்பித்துவிடுகின்றன. ஒரு தனிப்பட்ட நபர் மீது அல்லாது அனைவரின் மீதும் சமமான அக்கறை கொள்வது போன்ற உயர்ந்த விழுமியங்களை தெரிவு செய்வதற்கான மக்களின் ஆற்றல் மீது நாம் கவனத்தை குவிக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக, இரண்டு தனிநபர்களுக்கு இடையில் இணக்கமான உறவு நிலவும் வகையில் ஒருவர் மற்றொருவரது உரிமைகளின் குறுக்கிடாதிருப்பதற்கான சட்ட உறுதிகளை இந்திய அரசமைப்பானது நமக்கு வழங்கியிருக்கிறது.

கொள்கைகளை நடைமுறையில் பின்பற்றுவது கடினமாகிறபோது தனிமனிதர்களையும் கொள்கைகளையும் பிரிப்பது என்பது எந்தவொரு அமைப்பிற்கு உத்தி ரீதியாக அவசியமாகிறது. இதன் மூலம் அங்கீகாரத்தை பெறுவதற்கு தனிமனிதர்களே போதும் என்ற சூழல் உருவாக்கப்படுகிறது. சாதிகளை ஒழித்து சமத்துவத்தை கொண்டுவருவது, ஆணாதிக்கத்தை வலுவிழக்கச்செய்வது, சமத்துவமின்மையை ஒழிப்பது, எல்லா மனிதர்களுக்கும் கண்ணியத்தை உறுதிபடுத்துவது போன்ற கொள்கைகளை பின்பற்றுவது என்பது கடினமானது. இந்த கொள்கைகளுக்கு ஓர் அமைப்பு உண்மையாக இருக்கவேண்டும் என்பது படிநிலை அமைப்பை கொண்ட சமூகத்தில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை கொண்டுவரும் திட்டத்திற்கு அவசியம். இதன் காரணமாகவே இந்தக் கொள்கைகள் கடினமானவையாகின்றன. எரிதழலான கொள்கைகளின் ஸ்தூல வடிவமாக விளங்கிய பி.ஆர். அம்பேத்கர் சமூகத்தில் நிலவிய தளைகளை, அவை எந்த வடிவத்தில் இருந்தபோதிலும், எரித்தழிப்பதற்கு தன்னால் என்னவெல்லாம் முடியுமோ அனைத்தையும் செய்தார். இத்தகைய தளைகளை உருவாக்கும் சமூகச் சூழல்களை ஒழிப்பதற்கு அவசியமான சூழல்களை சாத்தியப்படுத்துவது பற்றி ரவீந்திரநாத் தாகூரும், மகாத்மா காந்தியும், அம்பேத்கரும் சிந்தித்தனர். இந்த சிந்தனையாளர்கள் மாற்றத்திற்கான கருத்துக்களின் ஸ்தூல வடிவமாக இருந்தனர். இதன் காரணமாகவே இத்தகைய தீவிரமான கொள்கைகளிலிருந்து தனிநபர்களை பிரிப்பது என்பது எந்தவொரு அமைப்பிற்கும் கடினமானதாகிறது.

பிரித்தெடுக்கப்பட தனிநபர்களை விடுத்து கொள்கைகளை பின்பற்றும் தீவிர மாற்றத்திற்கு ஆர்.எஸ்.எஸ். உட்பட வேண்டுமா? விளிம்புநிலைகளிலிருக்கும் நபர்களுக்கு அடையாளபூர்வமாக தனது அமைப்பில் இடமளிப்பதன் மூலம் இத்தகைய அமைப்புகள் தப்பித்துக்கொள்கின்றன. சாதி மற்றும் ஆணாதிக்க தளைகளை அகற்றக் கோரும் சமூக மாற்றத்தை சாதிப்பதற்கான அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். மாறுமா என்பதை நாம் உறுதியாக சொல்ல முடியாது. இன்றைய நாள் வரை அது செய்வது என்னவெனில் ஆதிவாசிகள், சிறுபான்மையினர், தலித்துகள் ஆகியோர்களில் சிலருக்கு தனது அமைப்பில் இடமளிக்கும் அடையாளபூர்வமான விஷயத்தையே. ஒரு மனிதனிடம் தார்மீக/அறிவார்ந்த தீயை உருவாக்குவது கொள்கைகள் என்பதால் தார்மீகத் தீ அணைந்துபோன நபர்களையே அமைப்புகள் விரும்புகின்றன. சரியான கொள்கைகள் சில சமயங்களில் தவறான நபர்களை தெரிவு செய்கின்றன என்பதையும் நாம் அங்கீகரித்தாக வேண்டும். உதாரணமாக, வலதுசாரி சித்தாந்தத்திற்கு ஆட்படக்கூடியவர்களை அம்பேத்காரிசம் தெரிவு செய்கிறது. தார்மீகரீதியாக ஒன்றுமில்லாது ஆகிவிட்ட அல்லது குறுங்குழுவாத கொள்கைகளைக் கொண்ட ஆளுமைகளை உள்ளிழுத்துக்கொள்வது என்பது சுயநல அரசியலையே உற்பத்தி செய்யும்.

இந்திய அரசியலானது ஆளுமையையும் அந்த ஆளுமைகள் அவ்வப்போது செய்யும் அரசியல் காய்நகர்த்தல்களையும் விவாதிப்பதால் உந்தப்படுகிறது. இந்த விதிக்கு ஆர்.எஸ்.எஸ். விதிவிலக்கா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Biden’s policy of the “return to the normal” would be inadequate to decisively defeat Trumpism.