ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

விற்கப்பட்டுவிட்டன

இந்திய ஊடகங்களைப் பற்றி ஏற்கனவே தெரிந்த விஷயங்களையே கோப்ராபோஸ்டின் ஸ்டிங் புலனாய்வு உறுதிபடுத்துகிறது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

இந்தியாவின் மையநீரோட்ட ஊடகங்கள் நெருக்கடியில் இருக்கின்றன. அதை ஏற்றுகொள்ளத்தான் அவை மறுக்கின்றன. சமீபத்தில் கோப்ராபோஸ்ட் வெளியிட்டதைப் போன்ற அம்பலமாக்கல்களை தன்னைத்தானே பரிசோதித்துக் கொள்ள பயன்படுத்திக்கொள்வதற்கு மாறாக பெரும் ஊடக நிறுவனங்கள் தங்கள் தலைகளை மேலும் ஆழமாக மணலில் புதைத்துக்கொள்கின்றன.

புலனாய்வு இணைய இதழான கோப்ராபோஸ்ட் மே 25ஆம் தேதி ஆப்ரேஷன் 136 என்று பெயரிடப்பட்ட புலனாய்வின் இரண்டாம் பாகத்தை பொது வெளியில் வெளியிட்டது. இதில் 136 என்ற எண் உலகத் தரப்பட்டியலில் இந்திய ஊடகங்களின் வரிசை எண்ணை (200 நாடுகளில் 138ஆவது இடத்திற்கு இந்தியா சரிந்திருக்கிறது) குறிக்கிறது. இதன் முதல் பாகத்தில் ரகசிய கேமராவை பயன்படுத்தி 17 ஊடக நிறுவனங்களில் ரகசிய புலனாய்வு நடத்தப்பட்டது. ‘‘ஆச்சார்யா அடல்’’ என்ற பெயரில் தன்னை காட்டிக்கொண்ட பத்திரிகையாளர் ஒருவர் ஸ்ரீமத் பகவத் கீதா பிரசார் சமிதி என்ற போலியான நிறுவனத்தைச் சேர்ந்தவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு இந்த ஊடக நிறுவனங்களின் மார்க்கெட்டிங் மற்று விளம்பரப் பிரிவைச் சேர்ந்தவர்களை சந்தித்தார். முதலில் மென்மையான இந்துத்துவாவை மத ரீதியான தகவல்கள் மூலம் பரப்பவும், பின்னர் எதிர்க்கட்சி தலைவர்களைப் பற்றி விமர்சனபூர்வமான, கேலியான தகவல்களையும், பின்னர் இந்துத்துவாவிற்கு ஆதரவான வலுவான தகவல்களை சங் பரிவாரத்தைச் சேர்ந்த மக்களை பிளவுபடுத்தும் தலைவர்கள் மூலமும் பரப்புவதற்காக பெரும் தொகையை அளிப்பதாக சொன்னார். எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை, ஆனால் இத்தகைய ஓர் உரையாடலுக்கு ஊடக நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் தயாராக இருக்கிறார் என்பதே நிலைமை எவ்வளவு மோசம் என்பதை காட்ட போதுமானது.

ஆப்ரேஷன் 136ன் பாகம் 1 ஊடகங்களாலும் பொதுமக்களாலும் கவனிக்கப்படாமல் போய்விட்டது. இரண்டாம் பாகத்தின் ஒளிப்பதிவு நாடாக்களை வெளியிடுவதாக மே 25ஆம் தேதி டெல்லியில் கோப்ராபோஸ்ட் அறிவித்தபோதுதான் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. மிக அதிகமாக விற்பனையாகும் இந்தி நாளிதழ்களுள் ஒன்றான டைனிக் ஜாக்ரன் நீதிமன்றம் சென்று இந்த நாடாக்கள் வெளியிடப்படுவதற்கு தடை பெற்றது. இந்த நாளிதழ் இடம்பெறும் நாடாக்களை தவிர்த்து பிற அனைத்தையும் கோப்ராபோஸ்ட் இணையத்தில் வெளியிட்டது. இரண்டாம் பாகத்தில் மிகப் பெரும் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளின், ஓர் ஊடக நிறுவனத்தின் உரிமையாளரும் மேலாண்மை இயக்குனரும் இவர்களுள் அடக்கம், உடையாடல்கள் இருந்தன. இந்தத் திட்டத்தை எப்படி அமல்படுத்த முடியும் என்பதிலிருந்து எவ்வளவு பணம் தரப்படும் என்பது வரை இந்த உரையாடல்களில் பேசப்பட்டன.

இந்த முறையும் ஓரிரு செய்தித்தாள்களை தவிர்த்து பெரும்பாலான மையநீரோட்ட ஊடகங்கள் இந்த அம்பலப்படுத்தலையும் புறக்கணித்தன. இந்த நாடாக்கள் மேலும் பரவுவதை தடுக்கும் பொருட்டு சில ஊடக நிறுவனங்கள் நீதிமன்றம் சென்று தடை வாங்கின, கோப்ராபோஸ்டிற்கு சட்ட அறிவிப்புகளை (லீகல் நோட்டீஸ்) அனுப்பியுள்ளன. கடந்த காலத்தில் பல அவதூறான செய்திகளை இந்தச் செய்தியாளர் பரப்பியிருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. அத்துடன் இந்த ஒளிப்பதிவு நாடாக்களின் நம்பகத்தன்மை பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இத்தகைய ரகசிய கேமரா புலனாய்வுகளை (ஸ்டிங் ஆப்ரேஷன்ஸ்) நடத்துவது ஒழுக்கவியல் ரீதியாக சரியா, கோப்ராபோஸ்ட் நாடாக்கள் உண்மையானவையா அல்லது எடிட்டிங் செய்யும்போது திருத்தப்பட்டவையா போன்ற விஷயங்கள் நிச்சயம் விவாதத்திற்குரியவை. ஆனால் இந்த ரகசிய புலனாய்வின் முக்கிய நோக்கமே ஊடக நிறுவனங்களின் மார்க்கெட்டிங் பிரதிநிதிகள் மட்டுமல்ல தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட அரசியல் திட்டங்களை பரப்புவதற்காக பணம் பெற்றுக்கொள்ளும் பேச்சுக்களில் ஈடுபடுவார்கள் என்பதை அம்பலப்படுத்துவதுதான். ஒரு சில விதிவிலக்குகளை தவிர்த்து ஊடகங்கள் அதிகபட்ச பணம் தரும் கார்ப்போரேட் கம்பெனிக்கோ, அரசியல் கட்சிக்கோ, கார்ப்போரேட் கம்பெனியால் நிதியளிக்கப்படும் அரசியல் அமைப்பிற்கோ விற்கப்படுகின்றன என்பது யாருக்குமே இது கோபத்தை ஏற்படுத்தவில்லை. நிலைமை என்ன என்பதை இது உறுதிபடுத்துகிறது. இதுவே மிக வலுவான குற்றச்சாட்டாகும்.

இந்திய ஊடகங்களின் நம்பகத்தன்மை குறைந்துவருவது என்பது கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துவருகிறது. 1970களில் நெருக்கடிநிலையின் போது பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் சமரசங்கள் ஏற்படுத்திக்கொண்டதை விட்டுவிடுவோம். ஊடகங்களை வாங்குவதும் விற்பதும் தாராளமயமாக்கல் வந்த பிறகே தொடங்கின. அப்போதுதான் ஊடகங்களின் வர்த்தகப் பிரிவிற்கும் ஆசிரியர் பிரிவிற்கும் இடையிலான சுவர் கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கப்பட்டு இறுதியில் காணாமல் போனது. உற்பத்திப்பொருளை விற்கும் எதுவும் செய்தியே என்று செய்தி மறுவரையறை செய்யப்பட்டது. இதன் இயல்பான துணைவிளைவு என்னவெனில் செய்திகளுக்கான இடமானது குறிப்பிட்ட விலைக்கு விற்கப்பட்டது. இதையடுத்து விளம்பரப் பகுதிகளுக்கு பணம் தரும் வர்த்தக நிறுவனங்களுடன் தனிப்பட்ட ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும் முறை வந்தது, ஊடக நிறுவனத்திற்கு பங்குகள் தருவதன் மூலம் இது செய்யப்பட்டது. இரு தரப்பினருமே இதனால் பலனடைந்தனர். ஆனால் ஊடகங்களின் நம்பகத்தன்மை வீழ்ச்சியடைந்தது.

பணத்திற்காக செய்தியை கட்டமைப்பதற்கு ஊடகங்கள் தயாராக இருந்ததால் வர்த்தக நிறுவனங்கள் மட்டுமல்ல அரசியல் கட்சிகளும் பலனடைந்தன. 2004 பொதுத் தேர்தலின் போது அரசியல்வாதிகளுக்கு சாதகமான செய்திகள் வெளியிட அவர்களிடமிருந்து ஊடக நிறுவனங்கள் பணம் பெற்றதாக இந்திய பத்திரிகை கவுன்சிலிடம் ஆந்திர பிரதேச உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் புகார் செய்த போதுதான் ‘‘பணமளிக்கப்பட்ட செய்திகள்’’ முதன்முதலாக அம்பலமானது. இந்த விவகாரத்தில் ஊடக நிறுவனங்கள் அரசியல் கட்சிகளை அணுகி அவற்றிற்கு சாதகமான செய்திகளை பணம் பெற்றுக்கொண்டு வெளியிடுவதாக உறுதியளித்தன. இதே போக்கு 2009 பொதுத் தேர்தலின் போதும் மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, மற்றும் பிற மாநிலங்களில் காணப்பட்டது. பணம் கொடுப்பதும் வாங்குவதும் ரகசியமாக நடப்பதால் ஆதாரங்கள் நேரடியானதாக இல்லை என்பதாலும் ‘‘பணமளிக்கப்பட்ட செய்திகள்’’ உண்மையான செய்திகள் என்ற வடிவில் வருவதாலும் தேர்தல் செலவிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை மீற இது பயன்படுத்திக் கொள்ளப்பட்டது என்பது தெள்ளத்தெளிவு. இவ்வாறு அம்பலமான விஷயங்களால் பணமளிக்கப்பட்ட செய்திகள் பற்றி விசாரணை நடத்துமாறு இந்திய பத்திரிகை கவுன்சிலை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. துரதிருஷ்டவசமாக, ‘‘பணமளிக்கப்பட்ட செய்திகள்: இந்திய ஊடகங்களில் நிலவும் ஊழல் எவ்வாறு ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது’’ என்று தலைப்பிடப்பட்ட 71 பக்க அறிக்கை இந்திய பத்திரிகை கவுன்சில் உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படாததால் அப்படியே புதைக்கப்பட்டது. 

Back to Top