நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு
மனித மற்றும் நிறுவன கண்ணியம் என்ற வில்லைகளின் ஊடாகவே நாம் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியை மதிப்பிட வேண்டும்.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
எந்தவொரு கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சியையும் மதிப்பிடுவது என்பது மனித கண்ணியத்தையும், நிறுவனங்களின் கண்ணியத்தையும் உள்ளடக்கிய நெறிகளின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும். பாரதீய ஜனதா கட்சி (பாஜக) பற்றி அல்லது எந்தவொரு கட்சி பற்றி செய்யப்படும் நடைமுறைப்பூர்வமான மதிப்பீடானது அந்தந்த கட்சிகளிடமே விடப்பட வேண்டும். இந்த மதிப்பீடு ஆட்சியின் கடைசி ஆண்டில் செய்யப்படும் வழக்கமான ஒன்று. ஆகவே இப்போதைய அரசாங்கத்தின் செயல்பாடு பற்றி விழுமியங்களின் அடிப்படையிலான நெறிசார்ந்த மதிபீடானது ஐந்து ஆண்டு ஆட்சியுடன் நிற்கக் கூடாது. மாறாக, நீண்ட காலத்திற்கு, மனித கண்ணியத்தையும் அரசு என்ற நிறுவனத்தின் கண்ணியத்தையும் நிலைப்படுத்த அரசு என்ற நிறுவனம் நமக்குத் எவ்வளவு காலத்திற்கு தேவைப்படுமோ அவ்வளவு காலத்திற்கு நீட்டிக்கப்பட வேண்டும். அரசோ அல்லது அதன் நிறுவனங்களோ தார்மீக சிறப்பை அடைவது அல்லது மக்களின் கண்ணியத்தை நிலைநாட்டுவது என்பது சாத்தியமே அல்ல என்ற அரசின்மை சித்தாந்த நிலைபாட்டை நாம் நிச்சயமாக எடுக்க முடியாது.
குறிப்பாக ஓர் அரசாங்கம் ஒரு முறை ஆட்சியிலிருப்பதன் பின்னணியில் அரசின் கண்ணியம் குறித்த கேள்வியை எழுப்ப வேண்டிய வரலாற்றுத் தேவை என்ன? கடந்த நான்கு ஆண்டு கால பாஜக ஆட்சியின் போது அரசின் கண்ணியமானது நமது கண்காணிப்பிற்கு கீழ் வந்திருப்பதற்குக் காரணம் கவ் ரக்ஷாஸ் (பசு பாதுகாவலர்கள்), சமூக ஊடக குண்டர்கள், ஒழுக்க மற்றும் கலாச்சார காவல் போன்ற இணை அதிகாரத்தால் இந்திய சமூகத்தின் சில பிரிவினர் அச்சுறுத்தப்படுவதால்தான்.
மக்களின் தார்மீக நலனுக்காகவோ அல்லது அவர்களின் கண்ணியத்திற்காவோ தனது முழுமுற்றான அதிகாரத்தை பயன்படுத்துவதில் அதற்கிருக்கும் நம்பத்தன்மையை பொறுத்தே அரசின் கண்ணியமானது அமைகிறது. இந்த விழுமியங்களை சாத்தியமாக்குவதற்கு ஆபத்தாக இருக்கும் சமூக சக்திகளை கட்டுப்படுத்த அரசு அதிகாரத்தை திரட்டுவதன் மூலம் இதை செய்ய முடியும். ஆகவே கடந்த நான்கு ஆண்டுகளில் இணை அதிகார மையங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வளர்ந்திருப்பது பற்றி பாஜக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளரை நாம் கேள்விகேட்டாக வேண்டும். இந்தியா இது வரை உருவாக்கிய பிரதமர்களிலேயே அதிகபட்ச வலிமையான பிரதமர் தங்களது தலைவர்தான் என்று பாஜகவின் செயல்வீரர்கள் சொல்லும் நிலையில் இந்தக் கேள்வி மேலும் அதிக முக்கியத்துவம் கொண்டதாகிறது.
இந்த இணை அதிகார மையங்கள் தலித்துகளை மிக வெளிப்படையாக அவமானப்படுத்துகின்றன, உதாரணமாக குஜராத்தில் உனாவில் நடந்த நிகழ்வு. தங்களது கலாச்சார சுதந்திரத்தை பயன்படுத்துவதன் காரணமாக மட்டுமல்லாமல் தங்களுக்கு கிடைக்கக்கூடிய, தங்களால் வாங்க முடிந்த உணவை உண்பதற்கான உரிமையின் காரணமாகவும் சில பிரிவு மக்களை தாழ்வானவர்களாகவும் இந்த அதிகார மையங்கள் உணரவைக்கின்றன. இருத்தலுக்கான சுதந்திரம் இல்லாதது கண்ணியம் இழக்கப்படுவதற்கு சமம். இது சைவ உணவை பரப்புபவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் திணித்திருக்கும் அரஜாகத்தின் விளைவு இது. இந்த சக்திகளை கட்டுப்படுத்துவதில் பாஜக அரசாங்கம் இயலாமையில் இருப்பதாக உணர்கிறதா? அப்படியாயின் இந்திய அரசமைப்பு அதற்கு வழங்கியிருக்கும் கண்ணியத்தை அது இழந்துவிடவில்லையா? வெட்டிக்கொல்வது, சமூக ஊடகங்களில் அராஜகமாக நடந்துகொள்வது, ஜம்முவிலுள்ள கதுவாவில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் நடந்ததைப்போல் குற்றவியல் வழக்குகளை நடக்கவிடாது தடுப்பது போன்ற விஷயங்களை செய்துவரும் அரசமைப்பிற்கு அப்பாற்பட்ட சமூக அதிகாரங்கள் இருக்கின்றன என்றும், அவற்றை அரசால் கட்டுப்படுத்த இயலவில்லை என்றும் வாதிடுவது மிகைப்படுத்தப்பட்ட விஷயமல்ல.
தாராளவாத ஜனநாயகத்தின் நிறுவனங்கள் மக்களின் சுயமரியாதையை உறுதிபடுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. விளிம்புநிலைக்கு தள்ளப்பட்ட மக்கள் அறிவை உருவாக்குவதில் பங்கேற்பதன் மூலம் சுயமரியாதையை பெற முடியும். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் அந்த உயர்ந்த நோக்கத்திலிருந்து விலகிச்செல்வதாக தோன்றுவதுடன் அவை சமத்துவம் மற்றும் சமூக நீதி கருத்தாக்கங்கள் மீது வெறுப்பை உண்டாக்கும் மையங்களாக ஆகியிருப்பதாக தோன்றுகிறது. உயர் கல்வி நிறுவனங்களின் தார்மீக சரிவை காட்டும் சோகமான ஓர் உதாரணம் ரோகித் வெமுலா.
இறுதியாக, பரவலாக இருக்கும் நம்பிக்கையின்மை, விரக்தி, விவசாயிகளின் தற்கொலைகளுக்கு வழிவகுத்த சரிசெய்ய முடியாத கண்ணிய இழப்பு போன்ற உண்மைகளை அறிந்துகொள்வதில், எதிர்கொள்வதில் உள்ள தார்மீக ஆற்றலில்தான் ஓர் அரசாங்கத்தின் கண்ணியம் இருக்கிறது. இந்த உண்மையை எதிர்கொள்வதில்லை என்று பாஜக முடிவு செய்துவிட்டது. இந்தப் பிரச்னைகளை தான் தீர்க்க முயல்வது போன்ற பிரமையை உருவாக்கும் வண்ணம் அளவுக்கு மீறிய வாக்குறுதிகளை பாஜக அளிக்கிறது. ‘‘அச்சே தீன்’’ போன்ற முழக்கங்களின் வழியாக வெளிப்படும் பஜகவின் நம்பிக்கை மொழியானது சாத்தியமாகக் கூடிய உண்மைகளை கொண்டிருக்கவில்லை. உதாரணமாக, 100 பேருக்கும் அதிகமானவர்களின் உயிரைக் குடித்தது, கோடிக்கணக்கானவர்களின் பொருளாதார வாழ்வை சீரழித்தது என்பது பணமதிப்புநீக்கத்தின் உள்ளார்ந்த பண்பு.
சமீபத்திய இடைத்தேர்தல்களில் பாஜக தொடர்ந்து தோல்வியடைந்துவருவது, மிகையான வாக்குறுதிகள் மூலம் இந்திய வாக்காளரின் அரசியல் அறிவு மீது அது ஏற்படுத்திய பிரமையின் ஆற்றல் அதன் சக்தியை இழந்துவருவதை காட்டுகிறது. இந்த இறுக்கமான சூழ்நிலையின் பின்னணியில் தனது தலைவர்களின் தனிப்பட்ட தியாகங்களை பற்றிய கதையாடலை பயன்படுத்தப் பார்க்கிறது பாஜக. மனிதாபிமானம் மிக்க ஒரு திட்டத்திற்காக மக்களை திரட்ட பயன்படுத்தும் நிலையில் இத்தகைய தனிப்பட்ட தியாகங்களைப் பற்றிய கதையாடல்கள் விலைமதிப்பற்ற மூலாதாரம், தார்மீக ரீதியாக முக்கியத்துவம் கொண்டவை. ஆனால் மனிதத்தன்மைக்கு எதிரான திட்டங்களுக்கு தனிப்பட்ட தியாகம் பயன்படுத்தப்படுமெனில் அத்தகைய கதையாடலை மிகுந்த சந்தேகத்துடன்தான் பார்க்க வேண்டும்.