ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தூத்துக்குடி பொங்கியெழுந்ததன் காரணம்

ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்ததை அடுத்து பல கேள்விகள் பதிலளிக்கப்படாமல் இருக்கின்றன.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் மே 22ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறையால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பல காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது. தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட காணொளிகளில் நாம் பார்த்ததைப் போல் காவல்துறையானது கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான முறைகள் எதையும் பயன்படுத்தாமல் குறிபார்த்து சுடுகிறவர்களை பணியில் அமர்த்தி மக்களை சுட்டுத்தள்ளியது இந்த பல காரணங்களுள் முதன்மையானது, வெளிப்படையானது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும் கடந்த காலங்களில் நடந்த இத்தகைய விசாரணைகளைப் போலவே இந்த விசாரணையும் மக்களின் கோபத்தையோ உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் வேதனையையோ குறைக்கப்போவதில்லை.

மக்களின் ஆரோக்கியத்திற்கும் சுற்றுசூழலுக்கும் கெடுதல் வராத வகையில் தொழில்மயத்தை உறுதிபடுத்தும் விஷயத்தில் இந்தியா தொடர்ந்து தோல்வியடைந்துகொண்டிருப்பது பெரிய சவாலாகும். சட்டங்களும் சர்வதேச ஒப்பந்தங்களும் இருந்தபோதும் அவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு தொழிற்துறையின் நலன்களுக்காக தவறு செய்வது என்பது இந்தியாவில் நுண் கலையின் துல்லியத்தை அடைந்திருக்கிறது. தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் இது ஆக அதிகபட்ச தெளிவாகத் தெரிகிறது. பொதுமக்களின் ஞாபகம் மிகக் குறைவான காலமே நீடிக்கக் கூடியது. பெருந்திரளான கூட்டங்கள், பொது சொத்தை எரிப்பது உட்பட பல வன்முறை நிகழ்வுகள், மற்றும் காவல்துறையின் கொடூரமான பதிலடி தொடர்பான படங்கள் ஊடகங்களில் வெளியான போதுதான், மே 22ஆம் தேதி அன்றுதான், தாமிரம் உருக்குவதற்கு எதிரான போராட்டம் பற்றி மீதமுள்ள இந்தியா தெரிந்துகொண்டது. கோவா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ளூர் மக்களால் ஏறக்குறைய விரட்டியடிக்கப்பட்ட நிலையில் 1994ல் தமிழ்நாட்டிற்கு வந்தது ஸ்டெர்லைட் ஆலை. மகாராஷ்டிராவின் ரத்தினகிரியில் உள்ள ஆயிரக்கணக்கான தோட்டப்பயிர் விவசாயிகள் இந்த ஆலையிலிருந்து வரும் நச்சு மாசுக்களால் தங்களது வாழ்வாதரத்திற்கான மூலாதாரமே அழிக்கப்பட்டுவிடும் என்ற நியாயமான காரணத்தால் அது அமையவிருந்த இடத்தை எதிர்த்தனர். மக்களின் போராட்டத்திற்கு ஆதரவான நிலை எடுக்கும் கட்டாயத்திற்கு ஆளான மாநில அரசாங்கம் ஸ்டெர்லைட் ஆலையை வேறு இடத்திற்கு மாற்றச் சொன்னது.

தமிழ்நாட்டில் கொஞ்சம் வேறு மாதிரியாக நடந்தது. தொடக்கத்திலிருந்தே உள்ளூர் குழுக்கள் மாசுபடுதலின் பாதிப்பு பற்றி அச்சங்களை தெரிவித்தபோதிலும் இந்த ஆலை தொழில்மயமாக்கலுக்கும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அவசியம் என்று கூறிய மாநில அரசாங்கம் ஸ்டெர்லைட் ஆலை அமைய வசதிகளை செய்துதந்தது. ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை மற்றும் கழிவுகள் அந்தப் பகுதியிலுள்ள காற்று, நீர், நிலம் ஆகியவற்றை நாசமாக்கியிருப்பது பற்றி ஆய்வுகள் நிரூபித்திருந்தும் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக ஸ்டெர்லைட் தனது உற்பத்தியை தொடர்ந்து செய்துவருகிறது. 100 கோடி ரூபாய் அபராம் விதித்த உச்ச நீதிமன்றத்தின் கண்டனங்கள் கூட அதன் உற்பத்தியை நிறுத்தவில்லை என்பதுடன் அது தொழிற்சாலையை மேலும் விரிபடுத்த நம்பிக்கையுடன் திட்டமிட்டது.

தூத்துக்குடி போராட்டமானது திடீரென உருவான ஒன்றல்ல என்ற விஷயம் முழுமையாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது மற்றொரு அம்சம். பல ஆண்டுகளாக போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்திய கட்டமாக நடந்த போராட்டத்தின் 100ஆவது நாள்தான் மே 22. இந்தப் பகுதிக்கு வெளியே இருக்கும் சுற்றுச்சூழலாளர்களும் பிறரும் வந்து உள்ளூர் மக்களுக்கு போராட்டத்தில் உதவியிருந்தாலும், இது ஏதோ குற்றம் போல் சொல்லப்படுகிறது, மாசுபடுதலால் ஏற்படும் இழப்பு பற்றி மக்கள் புரிந்துகொள்வதற்கான தகவல்கள் போதுமான அளவிற்கு பொதுவெளியில் இருக்கின்றன என்பதை அங்கீகரிப்பது மிகவும் அத்யாவசியமாகும். தாங்கள் சுவாசிக்கும் காற்றின் தரத்திலிருந்து, நோயுறுவது அதிகரிப்பதிலிருந்து என்ன நடக்கிறது என்பதை அவர்கள் தெரிந்துகொள்கிற போது, சுற்றுச்சூழல் நெறி மீறல்களில் தொழிற்சாலை ஈடுபடுவதை அறிகிறபோது மக்கள் கேள்வி கேட்பார்கள். அவர்களது கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்காத போது தூத்துக்குடியில் நடந்ததைப்போல் அவர்கள் வீதிக்கு வருகிறார்கள். 2011ல் ஜப்பானிலுள்ள புகுஷிமாவில் அணு உலை சுனாமியால் பாதிக்கப்பட்டு அழிவிற்கு உள்ளானதை அறிந்த தமிழகத்தின் கூடங்குளத்திலுள்ள மீனவர்கள் அங்குள்ள அணு உலைக்கு எதிராக போராடத் தொடங்கினார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தூத்துக்குடியில் நடப்பதைப் போலவே அப்போதும் மத்திய, மாநில அரசுகள் இந்தக் கவலைகள் பற்றி அக்கறை கொள்ளாது தமிழ்நாட்டின் ஆற்றல் தேவையை காரணம் காட்டி அணு உலை அமைந்துள்ள இடத்தை நியாப்படுத்தின.

சுற்றுச்சூழல் பேரிடர்கள் பற்றி மக்கள் இப்போது அறிந்திருப்பது என்பது உண்மையில் ஒரு நேர்மறையான அம்சம். இதன் அடிப்படையில் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் தொழிற்சாலைக்கான இடங்கள் தெரிவு செய்யப்படும் கொள்கையை வகுக்க முடியும். ஆனால், 1984 போபால் விஷவாயுக் கசிவு பேரிடர் நடந்த பிறகும், போபாலில் மக்கள்நெருக்கம் மிகுந்த பகுதியில் யூனியன் கார்பைட் தொழிற்சாலை அமைந்திருந்ததால் அந்த விபத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்ததுடன் ஏராளமானவர்கள் காயமுற்றனர், ஆபத்தான தொழிற்சாலைக்கான இடங்கள் விஷயத்தில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை. பிரச்னை ஏற்படலாம் என்ற எச்சரிக்கை இருந்தும் யூனியன் கார்பைட் தொழிற்சாலையை சுற்றிலும் வாழ்ந்த மக்களுக்கு அது பற்றி 1984ல் போதுமான அளவிற்கு விழிப்புணர்வு இல்லை. இன்று மக்கள் விஷயம் அறிந்தவர்களாக இருக்கிறார்கள், எதிர்க்கிறார்கள். ஆகவே தொழிற்சாலை அமைய வேண்டிய இடம் குறித்து அடிப்படை நெறிகளை பின்பற்றுவதும் உள்ளூர் மக்களின் கவலைகளை கணக்கில் எடுத்துக்கொள்வதும் மத்திய, மாநில அரசுளின் அடிப்படையான கடமை. என்ன இழப்பு ஏற்பட்டாலும் தொழில்மயமாக்கலை முன்னெடுத்துச் செல்வது என்பது இந்த காலகட்டத்தில் ஏற்க முடியாதது.

ஸ்டெர்லைட் ஆலையின் உற்பத்தியை தற்போதைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிறுத்திவைத்திருக்கிறது. இது நெருக்கடியான சூழலை சற்று தளர்த்தக்கூடும். ஆனால் நீண்ட கால பிரச்னைகள் தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கின்றன. ஏற்கனவே அமலில் இருக்கும் சுற்றுச்சூழல் நெறிகளையும் சட்டங்களையும் தவிர்ப்பதற்கான வழிகள் அதிகாரம் மிக்க வர்த்தக நிறுவனங்களுக்கு தொடர்ந்து எவ்வாறு கிடைக்கின்றன? இத்தகைய மீறல்களில் எந்த அளவிற்கு அரசு கைகோர்த்து செயல்படுகிறது? சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் ஓரிடத்தில் அமைகிற போது அங்குள்ள மக்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற சட்டம் போபால் பேரிடர் நடந்த பிறகு கொண்டுவரப்பட்டது. அப்படியெனில் உள்ளூர் மக்களின் கவலைகள், அச்சங்கள் ஏன் கேட்கப்படவில்லை? 

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top