ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

‘‘சம்பளப் பதிவேடு’’ தரவுகளை புரிந்துகொள்ளல்

வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிய, அநேகமாக தவறாக இருக்கக்கூடிய,  சோதித்துப்பார்க்கப்படாத மதிப்பீடுகளை மோடி அரசாங்கம் பரப்புகிறது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

வேலைவாய்ப்பு பற்றி கிடைக்கும் ஆதாரப்பூர்வமான தரவுகள் சொல்வதற்கு நேர்மாறாக சொல்லக்கூடிய ஒரு புதிய, சோதிக்கப்படாத ஆய்வுமுறையின் மூலம் முறைசார்ந்த துறையின் வேலைவாய்ப்பை கணக்கெடுக்கும் முறையை தனது சொந்த நலன்களை முன்னெடுத்துச்செல்ல செய்கிறது இந்த அரசாங்கம். பணியாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் (ஈபிஎஃப்ஓ), பணியாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (ஈஎஸ்ஐசி), மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குறுத்து மற்றும் வளர்ச்சி ஆணையம் (பிஎஃப்ஆர்டிஎ), ஏப்ரல் 25, 2018 அன்று ‘‘சம்பளப் பதிவேடு’ அறிக்கை அடிப்படையில் முறைசார் வேலைவாய்ப்பு பற்றிய தரவுகளை வெளியிட்டன. கர்நாடகா சட்டமன்ற தேர்தல்கள் நடப்பதற்கு இரண்டு வாரங்கள் இருக்கையில் இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டன. ஜனவரியில் இதே போன்றதொரு அறிக்கை மத்திய அரசின் பட்ஜெட் சமர்பிக்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியானது. ஈபிஎஃப்ஓ, ஈஎஸ்ஐசி, மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (என்பிஎஸ்) நிர்வாக ஆவணங்களை இந்த ஆய்வு பயன்படுத்தியது. 2017-18ல் எழுபது லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருப்பதாக தாங்கள் சொல்வதை நிரூபிக்கவும் பொருளாதார வளர்ச்சி அதிகரித்திருப்பதாக கூறிய போதிலும் போதுமான அளவிற்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை என்ற உண்மையிலிருந்து கவனத்தை திசைதிருப்பவும் இந்த மதிப்பீடுகளை பிரதமரும் நிதியமைச்சரும் பயன்படுத்திக்கொண்டனர்.

சமூக பாதுகாப்பு நிதி ஒதுக்கீடுகளை பணியாளர்கள் எந்த அளவிற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை மட்டுமே இந்த மதிப்பீடுகள் கணக்கிடுகின்றன. இவற்றில் சில, ஈஎஸ்ஐசி போன்றவை, பணியாளர்கள் விரும்பினால் தெரிவுசெய்யலாம், ஈபிஎஃப்ஓ போன்றவை கட்டாயம். மத்திய அரசாங்கப் பணியாளர்களுக்கு என்பிஎஸ் கட்டாயம், ஆனால் மாநில அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்களுக்கு அவர்கள் விரும்பினால் மட்டும் தெரிவு செய்யக்கூடியது. ஈபிஎஃப்ஓ பதிவு செய்வது கூட சில குறிப்பிட்ட தகுதிகளைக் பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே கட்டாயமானது.

2017 செப்டம்பருக்கும் 2018 பிப்ரவரிக்கும் இடையில் ஈபிஎஃப்ஓ-வில் மொத்த புதிய கணக்குகளின் எண்ணிக்கை 37.2 லட்சம், என்பிஎஸ்-ல் 4.2 லட்சம். இவற்றில் 25 வயதிற்கு கீழுள்ளவர்களின் புதிய கணக்குகள் ஈபிஎஃப்ஓ-வில் 20.05 லட்சம், என்பிஎஸ்-ல் அரசாங்கப் பணியாளர்கள் 84,659. 2017 செப்டம்பரில் 2.9 கோடியாக இருந்த ஈஎஸ்ஐசி கணக்குகள் 2018 பிப்ரவரியில் 2.7 கோடியாக குறைந்திருப்பதை ஈஎஸ்ஐசி தரவுகள் காட்டுகின்றன. பணியாளர்கள் விரும்பினால் தெரிவுசெய்வது ஈஎஸ்ஐசி என்பதாலும் ஒவ்வொரு மாதமும் அதன் எண்ணிக்கையில் ஒழுங்கற்ற மாறுதல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருப்பதால் ஈஎஸ்ஐசி தரவுகளை விளக்குவது என்பது கடினமானது. நிறுவனத்தின் இயல்பில் மாற்றம் ஏற்படுவதால் உழைப்புச்சந்தையில் புதிதாக சேர்கிறவர்களின் கணக்குகளை முறையாக்கம் செய்யப்படுகிறவர்களின் கணக்குகளிலிருந்து வேறுபடுத்துவது என்பது ஈபிஎஃப்ஓ விஷயத்திலும் கடினமாகிறது. ஈபிஎஃப்ஓ மற்றும் என்பிஎஸ்-ன் புதிய கணக்குகளின் மொத்த எண்ணிக்கையை ஒருவர் ஒப்புக்கொண்டாலும் முறைசார் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை ஆறு மாதங்களில் 21 லட்சம், ஓராண்டில் 42 லட்சம் மட்டுமே. இது 70 லட்சம் என்று சொல்லப்படுவதை விட மிகக் குறைவு.

மேலும், நாட்டின் பொருளாதாரத்தில் மொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் முறைசார் துறை தொழிலாளர்கள் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவு. இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரம் உருவாக்கியிருக்கும் மொத்த வேலைவாய்ப்பை மதிப்பிடுவது என்பது மீதமுள்ள 90% உழைப்புசக்தி அப்படியே தேங்கியிருக்கிறது அல்லது அதிகரித்திருக்கிறது என்று யூகித்துக்கொள்வதாகும். இன்றைய தேதியில் கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் இந்த யூகங்கள் எதுவுமே உண்மையல்ல. 2014-05க்கும் 2011-12க்கும் இடையில் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) நடத்திய வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை கணக்கெடுப்பில் விவசாயத்தில் மட்டும் ஆண்டுக்கு ஐம்பது லட்சம் வேலைவாய்ப்புகள் வீழ்ச்சியடைந்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பளப் பதிவேட்டு தரவுகளின்படி கணக்கிட்டு புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை விட இது அதிகம். வேலைவாய்ப்பு பற்றிய தொழிலாளர் செயலகத்தின் சமீபத்திய ஆண்டு கணக்கெடுப்பின்படி விவசாயத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவது என்பது அதே வேகத்தில் நடந்துவருகிறது அல்லது நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் கீழ் இன்னும் மோசமாகியிருக்கிறது. பணமதிப்புநீக்கமும் மற்றும் அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியும் முறைசாரா துறையில் வேலைவாய்ப்புகளை மோசமாக பாதித்துவிட்டது.

உண்மையில் செய்யப்பட வேண்டியது என்னவெனில் ஆண்டுதோறும் முறையாக வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இது பல முறை வலியுறுத்தப்பட்டுவிட்டது. 2004-11 காலகட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்து ஆண்டுக்கு ஆறு கணக்கெடுப்புகளை என்எஸ்எஸ்ஓ நடத்தியிருக்கிறது. இவற்றில் நான்கு கணக்கெடுப்புகள் பெரிய அளவில் செய்யப்பட்டவை, 60ஆவது சுற்று அரையாண்டு கணக்கெடுப்பாகும். இது ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு பற்றிய மதிப்பீடுகளை அளிக்கிறது. துரதிருஷ்டவசமாக 2011-12க்குப் பிறகு இந்த கணக்கெடுப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன. வீடு வீடாகச் சென்று நடத்தப்படும் மற்றொரு கணக்கெடுப்பு தொழிலாளர் செயலகம் நடத்து வருடாந்திர வேலைவாய்ப்பு கணக்கெடுப்பாகும். இது கடைசியாக 2015-16ல் நடந்தது. 2014 மார்ச் மாதத்திற்கும் 2015 ஜூலை மாதத்திற்கும் இடையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1.6 கோடி குறைந்திருப்பதை இது காட்டிய பிறகு இந்தக் கணக்கெடுப்பும் நிறுத்தப்பட்டுவிட்டது. முந்தைய அரசாங்கத்தை விட இந்த அரசாங்கத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் குறைவான வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதை தொழிலாளர் செயலகத்தின் காலாண்டு தொழிலாளர் கணக்கெடுப்பு, மற்றும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவுகள் உறுதிபடுத்துகின்றன. நீண்ட காலதாமதத்திற்குப் பிறகு நகர்ப்புறத்திற்கான காலாண்டு மற்றும் கிராமப்புறத்திற்கான வருடாந்திர கணக்கெடுப்பை என்எஸ்எஸ்ஓ தொடங்கியிருக்கிறது. ஆனால் இதன் முடிவுகள் 2019 பொதுத் தேர்தலுக்கு முன்னர் அநேகமாக வெளியிடப்படாது.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக 7%த்திற்கும் அதிகமாக பொருளாதார வளர்ச்சி இருந்தபோதிலும் போதுமான அளவிற்கு வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை என்ற பெரிய பின்னணியில் சம்பளப் பதிவேடு தரவுகள் பற்றிய விவாதத்தை பார்க்க வேண்டும். வேலைவாய்ப்புகள் இல்லாதது குறித்து கிராமம் மற்றும் நகர்ப்புறத்தைச் சேர்ந்த மிகப் பெரும்பான்மையான இளைஞர்கள், உதாரணமாக ஜாட்டுகள், மராத்தாக்கள், பட்டேல்கள் போன்ற விவசாய சமூகங்களைச் சேர்ந்தவர்கள், வீதிக்கு வந்து போராடும் சூழல் உருவாகிவிட்டது. இந்த இளைஞர்களைப் பொறுத்தவரை சம்பளப் பதிவேடு தரவுகளின் அடிப்படையில் அரசாங்கம் சொல்லிக்கொள்ளும் வேலைவாய்ப்புகளும் யதார்த்தமும் வேறுவேறானவை. புள்ளிவிவர செப்பிடு வித்தையும் திசைதிருப்பலும் குறுகிய கால தேர்தல் வாய்வீச்சிற்கு உதவக்கூடும் ஆனால் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான சிறந்த கொள்கைதிட்டங்களை வகுப்பதில் எந்த பங்களிப்பும் செய்யாது.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top