ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

இந்திய அரசியல் மீண்டும் நிலபிரபுத்துவமயமாகிறது

என்ன விலை கொடுத்தேனும் வெற்றியடைவது என்ற பாஜகவின் ஆசையை கர்நாடகாவின் தேர்தல் பிரச்சாரம் அம்பலப்படுத்துகிறது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

கர்நாடகாவின் தேர்தல் முடிவுகளை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்க முடியும். காங்கிரசும் சரி ஜனதா தளமும் (மதச்சார்பின்மை) {ஜேடி (யு)} சரி இரண்டுக்குமே திடமான அரசியல் நம்பிக்கைகள் ஏதுமில்லை என்பதை இந்தத் தேர்தல் காட்டியிருக்கிறது என்றும் பார்க்க முடியும். தேர்தலுக்கு முன்னமே இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்திருந்தால் தேர்தலுக்குப் பிறகு பாதுகாப்பான நிலையில் இரண்டு கட்சிகளும் இருந்திருக்கும். சந்தேகமில்லாமல் கர்நாடகா மக்களுக்கு இந்தத் தேர்தல் முக்கியமானது, ஆனால் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) வேறு மாதிரியாக பார்க்கிறது. இந்தியாவை அரசியல் ரீதியாக வெல்வதற்கான தனது அரசியல் திட்டத்தில் இந்தத் தேர்தல் மிக முக்கியமானது என்று அது கருதுகிறது. ‘‘இந்தியாவின் 80% தேர்தல் களத்தை பாஜக இப்போது கைப்பற்றியிருக்கிறது’’ என்று சில பாஜக தலைவர்கள் கூறியிருப்பதிலிருந்து இதை உணர முடியும். இந்தக் கூற்றை இந்தியாவின் வரைபடத்தை வெளியிட்டு விளக்கிக் காட்டியதன் மூலம் அச்சு ஊடகங்களும் இதை அங்கீகரித்தன. இந்துத்வா அரசியல் சிந்தையில் தேர்தல் வெற்றி என்பது சமத்துவம் குறித்த தனது பார்வையின் நெறிசார்ந்த விரிவாக்கம் என்பதாக இல்லாமல் நிலப்பரப்பை கட்டுப்படுத்துவது என்பதாகவே இருக்கிறது.

ஒரு ஜனநாயக அமைப்பில் முறையான அதிகாரத்தை கைப்பற்றுவது என்ற பாஜகவின் அரசியல் லட்சியத்தை சட்டப்பூர்வமானது என்றே கருதக்கூடிய அதே நேரத்தில் அதை விட முக்கியமான விஷயம் என்னவெனில் பண்பட்ட மொழியை பயன்படுத்தி வாக்காளர்களை திரட்டும் ஒழுக்கம் வேண்டும் என்பதுதான். ஏனெனில் இது கட்சித் தொண்டர்களின் மீதும் பெரும்பாலான வாக்காளர்கள் மீதும் தார்மீகரீதியான ஒழுங்கை ஏற்படுத்த மிகவும் அவசியமானது. உதாரணமாக, வாக்காளர்களை திரட்டுவதில் ஒழுக்கம் என்பது என்னவெனில், 2014 மக்களவை தேர்தலில் பிரச்சாரத்தின் போதும் தேர்தல் அறிக்கையிலும் பாஜக கொடுத்த வாக்குறுதிகள் விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்களை வாக்காளர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் இதைச் செய்வதற்கு பதிலாக தனது வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றியது என்பதற்கு தொடர்பில்லாத விஷயங்களைப் பற்றிய பாஜக பேசியது. தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது போனதற்கான காரணங்களை சொல்ல இயலாத நிலை பாஜகவை எதிர்க்கட்சியினருக்கு எதிராக நாகரீமற்ற மொழியை பயன்படுத்தும்படி ஆக்கியது.

எதிராளிகளின், போட்டியாளர்களின் வார்த்தைகளானது ஒரு அரசியல் கட்சித் தலைவரை மென்மையான/பண்பட்ட மொழியை பயன்படுத்தச் செய்ய வேண்டும். பாஜகவின் ‘‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’’ அல்லது காங்கிரசை அரசியல் அழித்தொழிப்பு செய்வது என்ற திட்டத்திற்கும் இத்தகைய மொழிக்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்ற காரணத்தால் தனது அரசியல் எதிர்ப்பாளர்களைப் பற்றி எதிரி பிம்பத்தை உருவாக்க வேண்டியிருக்கிறது. இந்த பிம்பமே அதன் தலைவர்களை ஆண்மையான, ராணுவத்தன்மை கொண்ட மொழியை பயன்படுத்த வைக்கிறது. சமீபத்தில் நடந்துமுடிந்த கர்நாடகா தேர்தலில் முக்கியமான சில பாஜக தலைவர்கள் இரண்டு விதமான மொழியை பயன்படுத்தினார்கள்: ஒன்று, பண்பற்றது, மற்றொன்று ஆண்மைத்தன்மை மற்றும் ராணுவத்தன்மை கொண்டது. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக, குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக தனிமனித தாக்குதலில் ஈடுபட பண்பற்ற மொழி பயன்படுத்தப்பட்டது. தனது முக்கியமான எதிரியை, அதாவது காங்கிரசை அரசியல் ரீதியாக அழித்தொழிப்பு செய்யும் நோக்கத்தை வெளிப்படுத்த ராணுவத்தன்மை கொண்ட மொழி பயன்படுத்தப்பட்டது. இதை காங்கிரசுக்கு எதிராக அமித் ஷா பயன்படுத்தினார். உண்மையைச் சொன்னால் எந்த எதிர்ப்புமே இல்லாமல் ஆளும் கட்சியாக ஆவதுதான் பாஜகவை உந்தும் ஆசையாக இருக்கிறது. துரதிருஷ்டவசமாக ஜனநாயகத்தின் தர்க்கமும், இத்தகைய நோக்கத்திற்கு எதிராக அரசியல் ரீதியாக சரியான முடிவை எடுக்கும் தார்மீக ஆற்றல் கொண்ட வாக்காளர்களும் பாஜகவின் இத்தகைய தலைவர்களுக்கும் அவர்களது கட்சிக்கும் ஆட்சி உரிமை முழுமையாக கிடைப்பதை கடினமாக்குகின்றனர். வட கிழக்கில் மேகாலயாவிலும் மணிப்பூரிலும், மேற்கில் கோவாவிலும், தென்னிந்தியாவில் கர்நாடகாவிலும் இது தெளிவாகத் தெரிகிறது.

மத்தியிலும் மாநிலங்களிலும் முறைப்படியான அரசியல் அதிகாரத்தை வெல்லுவது என்ற பாஜகவின் லட்சியம் அதை தார்மீக அடிப்படையில் நியாயப்படுத்த முடியாத பாதையை தெரிவு செய்யும் கட்டாயத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. இந்த மாநிலங்களில் தனிப்பெரும் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோருவதை அனுமதிக்கும் ஜனநாயக நெறியை பாஜக மீறியிருக்கிறது. அருவெறுக்கத்தக்கதாக இல்லாவிட்டாலும் அதிர்ச்சியளிக்கும் வேகத்தில் வெறும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு மேகாலயாவில் ஆட்சியமைத்தது, கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மைக்கு குறைவாக 104 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்த நிலையில் ஆட்சியமைக்க உரிமை கோரியது.

எல்லாவற்றையும் வெற்றிகொள்ள நினைக்கும் அதன் லட்சியம் அதன் தலைவர்களை வெற்றியின் இரு பக்கங்களிலும் நிற்க வைக்கிறது. பாஜகவிற்கு ஒழுக்க நெறிகள் முக்கியமற்றவை, பதவி என்ற இறுதி இலக்குதான் முக்கியம். ஆனால் நாகரீகமான ஜனநாயகத்தின் எதிர்காலம் தேர்தலின் இறுதி வெளிப்பாடு என்ன என்பதில் இல்லை. மாறாக, மக்களை திரட்டும் செயல்முறையில் பண்பற்ற மொழியையும் ஜனநாயகத்தை மறுதலிக்கும் தீய நோக்கங்களையும் தவிர்ப்பதில் இருக்கிறது. நாகரீமான ஜனநாயகத்தின் வேர்களை ஆழமாக்க உறுதி கொண்டிருக்கும் கட்சியின் தொண்டர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் நெறிசார்ந்த விஷயங்களை உள்ளீடு செய்ய வேண்டியவர்களாவர். ஆனால் கடந்த காலத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வான படிநிலை அமைப்பை மீண்டும் வாழ்ந்துபார்க்கும் விருப்பம் நாகரீக ஜனநாயகம் பற்றிய கருத்து உருக்கொள்வதையே தடுக்கிறது.

இத்தகைய வெற்றிகொள்ளல் லட்சியத்தின் அடியில் உள்ள கருத்து என்னவெனில் கடந்த காலத்தில் இருந்ததைப் போல் ஒரு குறிப்பிட்ட சாதியின் ஆதிக்கத்தை குறிக்கும் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவதாகும். நாகரீகமான ஜனநாயகத்தை பாதுகாப்பதில் கூட்டாக ஆதாயம் கொண்டுள்ள மக்களாகிய நாம், இந்த முறையான ஜனநாயக சட்டகத்தைக் கொண்டே படிநிலை அமைப்பிலான சமூக ஆதிக்கத்தை நீடிக்கச்செய்ய முயலும் கட்சியையோ அல்லது ஆட்சியில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தை நீடிக்க முயலும் கட்சியையோ இரண்டில் ஒன்றை எப்படி தேர்ந்தெடுக்க முடியும். ‘‘நான் ஆள்வேன், ஆளப்படுவேன்’’ என்ற அடிப்படையான தார்மீக விதியை இந்த நிலப்பிரபுத்துவ குறிக்கோள் தீவிரமாக பலவீனப்படுத்துகிறது என்றால் வென்றுவிட வேண்டும் என்ற குறிக்கோள் ‘‘நான் ஆள்வேன், தொடர்ந்து ஆள்வேன் அநேகமாக எப்போதைக்குமாக’’ என்பதை காட்டுகிறது.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top