ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

சீர் செய்ய முடியாத அளவிற்கு ஆகிவிட்டதா காஷ்மீர்?

அனுராதா பாஸின் ஜாம்வால் (anusaba@gmail.com), நிர்வாக ஆசிரியர், காஷ்மீர் டைம்ஸ் 

புது டெல்லியின் கடினமான நிலைபாடு பேச்சுவார்த்தைக்கான எல்லா வாய்ப்புகளையும் மூடுகிறது.

அனுராதா பாஸின் ஜாம்வால் எழுதுகிறார்:

மே 9ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சர் மெக்பூபா முப்தி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் ரம்ஜானை ஒட்டி போர்நிறுத்தம் அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வது என்று எடுக்கப்பட்ட முடிவு நம்பிக்கை தருவதை விட சந்தேகத்தையே அதிகம் எழுப்புகிறது. அப்படி போர்நிறுத்தம் அறிவிக்கப்படுவதாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு எத்தகைய எதிர்வினை இருக்கும் என்று கணிப்பது கடினம். ஏனெனில் இன்று அங்குள்ள இளைஞர்களின் புது வகை கிளர்ச்சியானது துப்பாக்கி மூலமும் வீதிப் போராட்டங்களின் மூலமும் வெளிப்படுத்தப்படுகிறது. இனியும் அதை ஒடுக்குதலுக்கு எதிரான ‘‘அந்நியமாதல்’’ என்றோ ‘‘கோபம்’’ என்றோ அழைக்க முடியாது. வீதிகளில் வெளிப்படும் அந்தக் கடுங் கோபத்தில் பாதுகாப்பு படைகளின் துப்பாக்கி குண்டுகளை பற்றிய எந்த அச்சமும் வெளிப்படவில்லை; எந்த சோர்வும் தென்படவில்லை. அந்தப் போராட்டம் இந்தியாவின் பாதுகாப்புப்படை வீரர்களை கொல்வது அல்லது சோர்வடையச் செய்வது என்ற உத்தியால் உந்தப்படும் குருட்டுத்தனமான உறுதியான நம்பிக்கையால் வழிநடத்தப்படுகிறதோ அல்லது தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்படுவதற்கு பதிலாக மீறி நடப்பது மேல் என்ற எண்ணத்தால் உந்தப்படுகிறதோ, எதுவாக இருந்தாலும் சரி அது செய் அல்லது செத்துமடி என்கிற போராட்டமாக இருக்கிறது. காஷ்மீருக்கும் புது டெல்லிக்கும் இடையில் நிலவும் ஆழ்ந்த நம்பிக்கையின்மை, அமைதியான முறையிலான போராட்டத்தில் இருக்கும் நம்பிக்கையை வேகமாக அழித்துக்கொண்டிருக்கிறது. அமைதியான வழிகளில் எதிர்ப்பு தெரிவிப்பதை பற்றியும் தாராளவாத கருத்துக்களையும் தனது மாணவர்களுக்கு போதித்துவந்த காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் தான் சுட்டுக் கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னர் போராளிகளுடன் சேர்ந்துள்ளார். அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்த இடமில்லாது போய்விட்ட பிரச்னை அல்ல இது. அமைதியான தீர்வில் அல்லது எதிர்ப்பில் நம்பிக்கை இல்லாது போய்விட்டதை இந்த அதிர்ச்சிகரமான சமீபத்திய உதாரணம் காட்டுகிறது.

ஆனால் இதை விட பெரிய கேள்வி என்னவெனில் எல்லா கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து கேட்டுக்கொண்டால் காஷ்மீர் பற்றி மத்திய அரசாங்கம் ஏதாவது வித்தியாசமாக சிந்திக்குமா என்பதுதான். வன்முறையை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று முப்தி பல முறை கேட்டுக்கொண்டும் இது வரையில் மத்திய அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. தனக்கு முன்பிருந்த மத்திய அரசாங்கங்களை விட தீவிரமான போர்க்குணம் மிகுந்த கொள்கையை கடைபிடிக்கிறது இந்த அரசாங்கம். தனக்கு முன்பிருந்த அரசாங்கங்களைப் போல் ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றுவது போலவும் பரஸ்பர நம்பிக்கையை உருவாக்க முயல்வது போலவும் காட்டிக்கொண்டே கொடூரமான பலப்பிரயோகத்தை செய்யும் நடைமுறையை இந்த அரசாங்கம் பின்பற்றவில்லை. ராஷ்டீரிய சுயம்சேவக் சங்கத்தால் (ஆர்எஸ்எஸ்) உத்வேகம் பெறும் பாஜக இத்தகைய பாவனையை மேற்கொள்வதில்லை. காஷ்மீரை கொடூரமாக ஒடுக்குவது மட்டுமல்ல பாஜகவின் சித்தாந்தம், அது இந்தியா என்கிற கருத்தாக்கத்தையே மாற்றுவதுடன் ஜனநாயகத்தையும் சேதப்படுத்துகிறது. காஷ்மீர் மாநிலத்தின் மக்கள்தொகை பரவலை (டெமோகிராபி) மாற்றுவதும் முஸ்லிம் மக்களை ஒடுக்கி   தனது பெரும் இலக்கான இந்தியாவை இந்து ராஷ்டிரமாக ஆக்குவது என்பது பாஜகவின் நீண்ட நாள் நோக்கம். குழப்பமான, வன்முறை மிகுந்த, தீவிரமயமாகிவிட்ட, நிலையற்ற காஷ்மீர் அந்த நோக்கத்திற்கு உதவுகிறது.

காஷ்மீர் மக்களின் ரத்தம் சிந்தப்படுவது பற்றி கவலைப்படாவிட்டாலும் கணிசமான எண்ணிக்கையிலான போர்வீரர்களின் உயிரிழப்பை பற்றியாவது அரசாங்கம் கவலைப்பட வேண்டும். ஆனால் கவலைப்படவில்லை. 2018ல் 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றால் 24 போர்வீரர்கள் உயிரிழந்தனர். 2:1 விகிதத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ராணுவத்திற்கு ஏற்படுத்தும் மத்திய அரசாங்கத்தின் இந்த ராணுவ ஞானம் கேள்விக்குரியது. மேலும் ஒரு சுற்றுலா பயணி உட்பட சாதாரண மக்கள் 37 பேர் உயிரை இந்த வன்முறை மோதல் குடித்திருக்கிறது, நூற்றுக்கணக்கானவர்கள் துப்பாக்கி குண்டுகள் மற்றும் சிறு குண்டுகளால் காயமடைந்துள்ளனர். இத்தகைய பெரும் சேதத்தாலும் தீவிரவாதத்தை ஒழிக்கவோ குறைக்கவோ முடியவில்லை. காயம் ஆறாத காஷ்மீர் மனங்களுக்கு தீவிரவாதிகள் மற்றும் சாதாரண மக்களின் ரத்தம் என்பது உரமாக பயன்பட்டு தீவிரவாதிகளை பெரும் எண்ணிக்கையில் புத்துயிர் பெற வைக்கிறது.

ஆகவே எந்த வகையில் பார்த்தாலும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு புது டெல்லியிடம் மாற்றதையும் ஏற்படுத்தாது. இத்தகைய சூழலில் மோதலை தணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முப்திக்கு வாய்ப்பு அநேகமாக இல்லை. ஓரளவிற்கு நிலைமையை மேம்படுத்தக்கூடிய வகையில் அவர் தனக்கிருக்கும் அதிகாரத்தில் எடுக்கக் கூடிய ஒரே நடவடிக்கை கல்லெறிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை நிறுத்துவதுதான். தொடர்ச்சியான கைதுகள், முதல் தகவல் அறிக்கைகள், காவல்துறையின் தொடர்ச்சியான தொல்லைகள் என்ற வலையில் சிக்கிக்கொள்ளும் இவர்கள் கல்லெறிவதிலிருந்து துப்பாக்கி தூக்கும் நிலைக்கு கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். இந்த அதிகாரத்தை முப்தி பயன்படுத்துவது என்பது ஒரு மேற்பூச்சு மட்டுமே. மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) பாஜகவும் கூட்டணி அமைத்து ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைத்தவுடன் காலஞ்சென்ற முன்னாள் முதலமைச்சர் முப்தி முகமத் சயீத்தால் விடுதலை செய்யப்பட்ட பிரிவினைவாதி மஸரத் ஆலத்தை மத்திய அரசாங்கம் தந்த அழுத்தத்தால் மீண்டும் கைது செய்ய வேண்டியதாயிற்று என்பது நிலைமை என்ன என்பதை விளக்குகிறது.

பாரம்பரியமான அதிகார கட்டமைப்பில் காஷ்மீர் விஷயத்தில் டெல்லியின் அதிகாரமானது முழுமுற்றானது, மாநில அரசாங்கத்தின் அதிகாரமும் ஆற்றலும் ஓர் எல்லைக்கு உட்பட்டது. இப்போது பிடிபி செய்யும் சமரச முயற்சிகளும் அல்லது வேறெந்த திட்டங்களும் டெல்லியால் தீவிரமான நிராகரிக்கப்படுகின்றன. கதுவா பாலியல் வன்புணர்ச்சி மற்றும் கொலை வழக்கில் பாஜகவின் கடும் எதிர்ப்பையும் மீறி முப்தி உறுதியான நிலை எடுத்தது ஒரு விதிவிலக்காக இருக்கலாம். இந்த வழக்கில் நீதி கிடைப்பதை தடுப்பதல்ல மாறாக ஜம்முவில் மதப் பிளவை ஆழப்படுத்துவதே பாஜகவின் நோக்கம் எனில் அது வெற்றிகரமாக செய்யப்பட்டுவிட்டது என்பதால் முப்தியால் இந்த நடவடிக்கை எடுப்பது சாத்தியமாகியிருக்கலாம்.

பேச்சுவார்த்தைக்கான பிடிபியின் முயற்சி தோல்வியுறலாம். ஆனால் அது விஷமாகிவிட்ட இளைஞர் ஆற்றலை ஆக்கபூர்வமாக மாற்றுவதில் நேர்மறையான பங்கை ஆற்ற முடியும். ஒவ்வொரு முறையும் ஏதாவது நடக்கும்போது பள்ளிகளையும் கல்லூரிகளையும் மூடுவதை விடுத்து கல்வி நிறுவனங்களை சிந்தனைகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திர வெளியாக ஆக்கலாம். எதிர்ப்பை தடுத்து நிறுத்த அரசாங்கத்தால் முடியவே முடியாது. புதிய தலைமுறையின் மனங்களிலும் இதயங்களிலும் எதிர்ப்புணர்வு ஆழமாக வேரோடிவிட்டது. பேச்சுவார்த்தையை சாத்தியமாக்கக் கூடிய அமைதியான, பொருள்பொதிந்த எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான சுதந்திர வெளியை அனுமதிப்பதுதான் அரசாங்கம் செய்ய முடிந்த ஒரே விஷயம்.

 

Updated On : 17th May, 2018

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top