ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

ஒரு ‘‘வரலாற்றுத் தவறு’’க்கு வயது 70

தான் தோன்றும் போது இருந்ததைப் போலவே இன்றும் பாலஸ்தீனர்களுடனும் அண்டை நாடுகளுடனும் இஸ்ரேல் தொடர்ந்து போரிட்டு வருகிறது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

தனது வாழ்க்கையை தொடங்கிய போது போரில் இருந்ததைப் போலவே தனது 70ஆம் ஆண்டு விழாவை நெருங்குகிற போதும் இஸ்ரேல் போரிலேயே இருக்கிறது. பல ஆண்டுகளாக அது செய்துவரும் மறைவான செயல்பாடுகளும் அரபு உலகத்தில் நடந்துகொண்டிருக்கும் மோதல்களில் ஏதேனும் ஒரு பக்கம் ரகசிய கூட்டு வைப்பதும் ஏறக்குறைய ஈரான் மீது போரையே அறிவித்திருக்கிறது. இப்போது அந்தப் போர் சிரியாவின் நிலப்பரப்பில் நடக்கிறது. மே மாத தொடக்கத்தில் அது ஆபத்தான அளவிற்கு அதிகரித்ததானது பெரும் மோதல் நடக்கப்போவது வெகு தொலைவில் இல்லை என்பதை எச்சரிக்கிறது.

நிறவெறியர்களுடனும் செமிட்டிக் மக்களுக்கு (அராபியர்கள் மற்றும் யூதர்கள்) எதிரானவர்களுடனும் மிக நெருக்கமாக இருக்கும் அமெரிக்க குடியரசுத்தலைவர் டொனால்ட் டிரம்ப், யூத அரசின் நெடுநாள் கோரிக்கைக்கு செவிசாய்த்த போது இந்த ஆபத்து இந்த அளவிற்கு அதிகரிப்பதற்கான பச்சை கொடி வாஷிங்டன்னிலிருந்து காட்டப்பட்டுவிட்டது. ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சித் திட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை திரும்பப்பெறுவதாக தனது வழக்கமான விலைபோகும்தன்மையுடன், வீண் கர்வத்துடன் டிரம்ப் அறிவித்தார்.

ஈரான், அமெரிக்கா மற்றும் ஐந்து நாடுகளுக்கிடையே நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 2015ல் இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. நடைமுறைபடுத்தப்படக்கூடிய அளவிற்கான நம்பகமான இயங்குமுறைகளை இந்த ஒப்பந்தம் கொண்டிருப்பதாக நிபுணர்களின் கருத்துக்கள் தெரிவிக்கின்றன. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் சில கடமைகளை மீறிய குற்றச்சாட்டிற்கு ஆளான ஈரான் தான் தனிமைபடுத்தப்பட்டிருப்பதிலிருந்து வெளிவந்துவிடக் கூடிய வாய்ப்பை தனது இருத்தலுக்கான ஆபத்தாக இஸ்ரேல் பார்க்கிறது.

ஒட்டுமொத்த மக்களின் வரலாற்றிற்கும் அடையாளத்திற்கும் எதிரான தனது அடுத்த கட்ட போரை இஸ்ரேல் தொடர்ந்தது. அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தை ஜெருசலத்திற்கு மாற்றப்போவதாக டிரம்ப் அறிவித்தபோது எல்லா தடைகளும் அகற்றப்பட்டுவிட்டன. தூதரக மாற்றத்திற்கான நாள் மே 14 என குறிக்கப்பட்டது. அது இஸ்ரேல் தனது நிறுவன நாளகவும் பாலஸ்தீனர்கள் ‘‘நக்பா’’ அல்லது பேரழிவு நாளாகவும் அவதானிக்கின்றனர். அதிகாரப்பூர்வமாக இஸ்ரேல் ஆக்ரமித்த நிலத்தையும் காஸா என்கிற பெரும் திறந்தவெளி சிறையையும் பிரிக்கும் பலத்த பாதுகாப்பு வேலியை நோக்கி அணிவகுப்புகளை நடத்த பாலஸ்தீனர்கள் மார்ச் மாத மத்தியிலிருந்தே திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

காஸாவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினர் அகதிகள். இவர்களில் ஒரு பகுதி, சாவிற்கும் பேரழிவிற்கும் மத்தியில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களின் காரணமாக பல முறை இடப்பெயர்விற்கு ஆளானவர்கள். எல்லை வேலியை நோக்கிய ‘‘நில அணிவகுப்பு’’ இழந்துபோன தங்களது தாய்மண்ணை மீட்பதற்கான பாலஸ்தீனர்களின்  உரிமையை காட்டுவதற்கானதாகும். வெள்ளிக்கிழமை தொழுகைகளைத் தொடர்ந்து நடந்த ஆறு வார போராட்டத்தில் காஸா மக்கள் 51 பேர் இஸ்ரேலால் குறி வைத்து கொல்லப்பட்டுள்ளனர். ‘‘சட்டத்திற்கு புறம்பான’’ செயல் இது என மனித உரிமைகள் கண்காணிப்பு (ஹியுமன் ரைட்ஸ் வாட்ச்) கூறியுள்ளதானது இதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் புலனாய்வு செய்யப்பட வேண்டிய தகுதியைத் தருகிறது.

அமெரிக்காவின் அலட்சியமான மனப்பான்மைக்கு நேரெதிராக இருக்கிறது நிபுணர்களின் மதிப்பீடு. காஸாவில் நடந்த கொலைகளையும் சிரியாவில் மோதல் தீவிரமடைவதையும் பற்றி பேசுகிற போது இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக்கொள்ள எல்லா உரிமைகளும் இருக்கிறது என்று அமெரிக்கா கூறியது. இஸ்ரேல் தனது 70ஆம் ஆண்டை நெருங்குகிற இந்த தருணத்தில் எந்த உலக அமைப்பின் கீழ் இஸ்ரேல் இயங்குகிறதோ அந்த உலக அமைப்பு எந்த அளவிற்கு சட்டபூர்வமாக இயங்குகிறது என்பதைப் பற்றி துல்லியமாக அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். தன்னுடைய சுய பாதுகாப்பிற்காக என்று சொல்லி ஆயுதங்கள் ஏதுமற்ற போராட்டக்காரர்களை, தாங்கள் இழந்துபோனதை மீட்பதற்காக போராடுகிறவர்களை, இத்தகைய போராட்டம் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று, கொல்லும் உரிமை தனக்கிருப்பதாக நடந்துகொள்ளும் ஓர் அரசின் இயல்பு எத்தகையதாக இருக்க முடியும்?

இதற்கான பதில் இஸ்ரேலிய அரசியலில் இருக்கிறது. இஸ்ரேல் தீண்டத்தகாத நாடாக மாறும் நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று கடந்த ஆண்டின் மத்தியில் எச்சரிக்கை செய்தார் அரசியலிலிருந்து கொஞ்ச காலம் விலகியிருந்த இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எட் பாரக். அவரது எச்சரிக்கை தவறானதல்ல. இஸ்ரேல் தீண்டத்தகாத நாடு என்பது எதிர்காலத்தில் நடப்பதற்கான வாய்ப்புள்ள விஷயமல்ல, அது ஏற்கனவே யதார்த்தமாகிவிட்ட உண்மை என இஸ்ரேல் அரசியலின் மேட்டுக்குடிகளான அஸ்கநோஸி கால்வழி மரபில் வந்தவரும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகருமான அவ்ரகம் பர்க் 2003லேயே கூறினார்.

‘‘மக்கள்தொகை பரவல் பிரச்னை’’ என்று இஸ்ரேலிய அரசியலில் அழைக்கப்படும் விஷயம் யூத அரசு அமைக்கப்பட்டதிலிருந்தே தொடர்ச்சியாக தீவிரத்துடன் அது கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம். பெரிய அளவில் யூதர்களை குடியேற்றம் செய்ய வைத்து நிலத்தை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்வது என்பது இஸ்ரேல் தொடர்ந்து பின்பற்றிவரும் உத்தி. ஒரு கட்டத்திற்கு பின் அது சாத்தியமில்லை என்றான பின்னர் ஒருதலைபட்சமான பிரிவினை பற்றி யோசிக்கத் தொடங்கியது. 2000ஆம் ஆண்டில் பாரக் அளித்த போலி சமாதானம் ‘‘இரு நாடு தீர்வு’’ என்ற சாத்தியத்திற்கான எல்லா வாய்ப்புகளையும் மூடிவிட்டது. ஆனால் இந்த மக்கள்தொகை பரவல் என்ற சங்கடமான சூழலிலிருந்து வெளிவரும் பொருட்டு சில சமயங்களில் ‘‘இரு நாடு தீர்வு’’ பற்றி பேசப்படுகிறது.

சமாதான நடவடிக்கையை மீண்டும் தொடங்கும் முயற்சியில் 2008ல் அமெரிக்க குடியரசுத்தலைவர் ஜார்ஜ் புஷ் அன்னாபோலிஸ் நகரில் இரு தரப்பையும் அழைத்து பேச வைத்தார். தனது நீண்ட கால வலதுசாரி தீவிரவாத ஆதிக்கத்திலிருந்து இஸ்ரேல் மீண்டு கொண்டிருப்பதாக கருதப்பட்ட காலம் அது. இஸ்ரேலின் இருப்பை நிரந்தரமாக, ஒரு யூத அரசாக பாலஸ்தீனர்கள் அங்கீகரித்தால் மட்டுமே பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முடியும் என்ற நிபந்தனையை அன்றைய இஸ்ரேலின் வெளியுறத்துறை அமைச்சராக இருந்தவர் வைத்தார். இது அகதிகள் திரும்பிவருவதற்கான உரிமையை இல்லாது ஆக்கிவிடும் என்பதுடன் இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர்களின் குடியுரிமைத் தகுதியை நிச்சயமற்றதாக்கிவிடும். பாலஸ்தீனர்களை பொறுத்தவரை இது கூட்டு தற்கொலைக்கு சமம். ‘‘இஸ்ரேல் அரசின் இனத் தூய்மைவாதம்’’ அன்றைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலீஸா ரைஸை கோபப்பட வைத்தது. அதுவொரு கண நேர பலவீனம் மட்டுமே. ‘‘முதலில் இஸ்ரேல்’’ என்ற அமெரிக்காவின் அறிவிக்கபடாத வெளியுறவு-ராணுவக் கொள்கையின் அடிப்படையில் ஊசலாட்டமற்ற விசுவாசம் என்ற பாதைக்கு ரைஸ் திரும்பினார்.

ஒபாமா நிர்வாகத்தின் கீழ் வறட்டு கோட்பாட்டை மீறி நடைமுறைவாதமானது (பிராக்மேட்டிஸம்) ஓரளவிற்கு முன்னுக்கு வந்தது. ஆனால், நேர்மையற்ற இனவெறி அரசுக்கு அளவிற்கு அதிகமான செல்லம் கொடுக்கும் பழைய கொள்கைக்கே திரும்பிப்போக டிரம்ப் அனுமதியளித்துவிட்டார். இப்போது இஸ்ரேல் மீண்டும் வெடிக்கு நிலையில் இருக்கும் அண்டை நாடுகளின் அரசியலை பற்ற வைக்கும் வேலையை தொடங்கிவிட்டது. இதனால் ஏற்படக்கூடிய ஆபத்தான பின்விளைவுகளை உலகம் கருத்தில்கொள்ள வேண்டும். பெரும் விருதுகளைப் பெற்ற நாடக ஆசிரியரும் திரைக்கதை ஆசிரியருமான டோனி குஷன் இஸ்ரேலை பற்றி செய்த மதிப்பீடு இன்று ஆழ்ந்த பொருளுடன் ஒலிக்கிறது. இஸ்ரேலை அவர் ‘‘வரலாற்றுத் தவறு’’ என்று அழைத்தார்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top