ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

இட்டுகட்டப்பட்ட சர்ச்சை

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை தாக்கியிருப்பதற்கான உண்மையான காரணம் ஜின்னாவின் உருவப்படம் அல்ல.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

பல்கலைக்கழக வளாகங்களில் இந்துத்துவ குண்டர்களின் வன்முறையைத் தூண்டிவிட பாரதீய ஜனதா கட்சி மற்றொரு வாய்ப்பை கண்டுபிடித்திருக்கிறது. இந்த முறை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (அமுப) அதன் இலக்கு. இந்த முறை சர்ச்சை உருவாக்கப்பட்டிருப்பது 1938ஆம் ஆண்டிலிருந்து பல்கலைகழகத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் முகமது அலி ஜின்னாவின் உருவப்படம் தொடர்பானது. சங் பரிவாரத்தின் அங்கங்களான இந்து யுவ வாஹினி மற்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினர்கள் 2018 மே 2ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்து அந்தப் படம் அகற்றப்பட வேண்டுமென கோரினர். பிரச்னையை உண்டாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விடுத்து புகார் கொடுக்கப்போன அமுப மாணவர்கள் மீது காவல்துறை தடியடி மற்றும் கண்ணீபுகை பிரயோகித்துள்ளது.

ஜின்னாவின் படம் தொடர்பாக இட்டுகட்டி உருவாக்கப்பட்டுள்ள இந்த சர்ச்சையானது பிரிட்டிஷ் இந்தியா பிரிவினைக்குள்ளானதில் ஜின்னாவின் குற்றம் மற்றும் பங்கு பற்றிய பழைய, பயனற்ற கேள்வியை மீண்டும் பொது விவாதத்திற்கு கொண்டுவந்திருக்கிறது. வரலாற்று அறிஞர்கள் இந்தக் கேள்வியைப் பற்றி இப்போதெல்லாம் பெரிதாக அக்கறை கொள்வதில்லை. நாடு பிரிவினையானது மிகவும் சிக்கலான விஷயம், இதற்கு ஒரு தனிப்பட்ட நபரை மட்டும் பொறுப்பாக்க முடியாது. ஆனாலும் ‘‘மாபெரும் மனிதர்கள்’’ பற்றிய ஆர்வங்கள் அவ்வளவு எளிதில் மறைந்துபோவதில்லை. பாகிஸ்தான் தனது தேசத்தை கொண்டாடவும், இந்தியா தனது தேசத்தின் தீமைகளுக்கு காரணம் காட்டவும் ஜின்னாவை பயன்படுத்துகின்றன.

அமுப விவகாரத்தில் பாஜக தலைவர்கள் எதிர்வினையாற்றிய விதத்திலிருந்தே இந்திய துணைக்கண்டம் பிரிவினைக்கு ஆளாதில் ஜின்னாவின் குற்றம் மற்றும் பங்கு பற்றிய குழப்பம் இன்னமும் நீடிக்கிறது என்பது தெரிகிறது. பெரும்பாலான பாஜக தலைவர்கள், உத்திர பிரதேசத்தின் (உபி) முதல்வர் யோகி ஆதித்யாநாத் உட்பட, விஷமிகளின் ‘‘அக்கறை’’ குறித்த நியாயத்தை ஆதரித்தபோது உபியின் தொழிலாளர் அமைச்சரான சுவாமி பிரசாத் மௌரியா இந்தத் தாக்குதலை கண்டித்ததுடன் ஜின்னாவை மாபெரும் மனிதர் என்று வர்ணித்தார். இது அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளது. இதே நிலைபாடுதான் பாஜகவின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கிற்கு 2009ல் ஏற்பட்டது, 2005ல் பாஜக தலைவர் பதவியை அத்வானியிடமிருந்தும் பறித்தது. இத்தகைய அவமானகரமான சறுக்கல்கள் மீண்டும் மீண்டும் நடப்பதானது தனது கடந்த கால வரலாற்றின் சங்கடமான அத்தியாயங்களை, குறிப்பாக சித்தாந்த ரீதியாக முஸ்லிம் லீகிற்கும் தனது முன்னோடியான இந்து மகாசபாவிற்கும் இருந்த நேச உறவை பாஜகவால் வெற்றிகரமாக மறைக்க முடியவில்லை என்பதையே காட்டுகின்றன.

சொல்லப்போனால், எந்த இரு-நாடு கோட்பாட்டின் அடிப்படையில் பாகிஸ்தான் கோரிக்கையை லீக் வைத்ததோ அந்தக் கோட்பாட்டை உருவாக்கியவர்கள் இந்திய முஸ்லிம்கள் அல்ல. 1923ல், இந்து மகாசபா தலைவரான விநாயக் தாமோதர் சாவர்க்கரால் முதன் முதலில் இந்தக் கோட்பாடு முன்மொழியப்பட்டது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசுடன் லீக், மகாசபா இரண்டுமே ஒத்துழைத்துடன், வங்கம் போன்ற மாநிலங்களில் இருவரும் கூட்டணி ஆட்சியும் அமைத்தனர். தனது சித்தாந்த குருநாதர்களின் சிந்தனையைத் திருடி அதை அதன் தர்க்கரீதியான முடிவிற்கு கொண்டுசென்று முஸ்லிம்களுக்கு தனி நாட்டை பெற்றுவிட்டார்கள் என்பதால் லீக் மீது பாஜகவிற்கு வெறுப்பு இருக்கக் கூடும். மகாசபாவின் உண்மையான வாரிசான பாஜக இந்தியாவை இந்து நாடாக மாற்ற தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.

நாட்டு பிரிவினை என்ற குற்றத்திற்கான முழுப் பொறுப்பாளி ஜின்னா மட்டுமே என்ற அரசியல் கதையாடலுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது என்பதுடன் அது இந்துத்துவாதிகளுடன் மட்டும் நிற்கவில்லை. இந்திய பல்கலைக்கழகங்களில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்திவந்த காங்கிரஸ் சார்பான வரலாற்றாசிரியர்கள் உட்பட, காங்கிரஸ் சித்தந்தவாதிகள் ஜின்னாவை ஒரு வில்லனாக சித்தரித்து அந்த பிம்பத்தை நிலைநிறுத்தினர். இந்த விதமான வர்ணனையுடன் பல கோணங்களைக் கொண்ட வரலாற்று ஆவணங்கள் ஒத்துப் போகவில்லை. உதாரணமாக, ஜின்னா தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்ககாலத்தின் பெரும் பகுதியை தீவிரமான காங்கிரஸ்காரராக கழித்தார். தாதாபாய் நௌரோஜியால் உருவாக்கப்பட்டார்; தனது வாழ்நாள் முழுவதும் கோபால் கிருஷ்ண கோகலேவை பெரிதும் போற்றியவர் ஜின்னா; பால கங்காதர திலருக்கு எதிரான தேசத்துரோக வழக்கில் திலகருக்காக வாதடியவர், காங்கிரசையும் லீகையும் நெருக்கமாக கொண்டுவந்த 1916ஆம் ஆண்டு லக்னோ ஒப்பந்தம் ஏற்பட திலகருடன் சேர்ந்து பணி செய்தவர். 1906ல் லீக் உருவாக்கப்பட்ட பிறகு பல ஆண்டுகள் அதில் சேராமல் இருந்தார் ஜின்னா. 1913ல்தான் அதில் உறுப்பினராக சேர்ந்தார், மூன்று ஆண்டுகள் கழித்து அதன் தலைவரானார்.

ஒன்றுபட்ட இந்தியாவில் அதிகாரமானது இந்துக்களாலும் முஸ்லிம்களாலும் பகிர்ந்துகொள்ளப்படுவதாக இருக்க வேண்டும் என்பதற்காக கடைசி வரை ஜின்னா வாதாடினார் என்பதற்கான வலுவான வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன. ஜின்னாவின் தலைமையின் கீழான லீக் 1940ல்தான் பாகிஸ்தானை அடைவதை தனது இறுதி குறிக்கோளாக அறிவித்தது. அப்போதும் கூட, அந்த கோரிக்கையானது இறையாண்மை கொண்ட முஸ்லிம் அரசுக்கானதா என்பது பற்றி சந்தேகம் உள்ளது. 1946ல் காபினட் மிஷன் திட்டம் வகுத்தளித்தபடி இந்திய கூட்டமைப்பில் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிகாரத்தை பங்கிட்டுக்கொள்ளும் ஏற்பாட்டை ஜின்னா ஏற்றுக்கொண்டார். காங்கிரசுதான் இந்த ஏற்பாட்டை நிராகரித்து மொத்த பேச்சுவார்த்தையையும் நிர்மூலமாக்கியது. இறுதியில், பிரிட்டிஷ் இந்தியா பிரிவினை செய்யப்படுவது தவிர்க்க முடியாதது என்ற நிலை வந்தபோது காங்கிரசும் மகாசபாவும் கைகோர்த்து வேலை செய்து பஞ்சாபும் வங்கமும் பிரிவினை செய்யப்படுவதை உறுதி செய்தன. ஒன்றுபட்ட இந்தியாவில் இந்துக்களுடன் முஸ்லிம்கள் சேர்ந்து வாழ முடியாது என்றால் அதே கொள்கையின் அடிப்படையில் வங்கத்தில் இந்துக்களும், பஞ்சாபில் இந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லிம்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்று காங்கிரசும் மகாசபாவும் வாதிட்டதானது இரு-நாடு கோட்பாட்டை இந்த இரு அமைப்புகளும் யதார்த்தமாக ஏற்றுக்கொண்டதை காட்டுகிறது. காங்கிரசை தாக்கும் ‘‘நவீன ஏகாதிபத்திய’’ வரலாற்றியல் (historiography) என்று வர்ணித்து இத்தகைய வரலாற்று விவரங்களை இந்திய தேசிய வரலாற்றாசிரியர்கள் நீண்ட காலமாகவே புறந்தள்ளிவந்தனர், இதை தீமையான போக்கு என்றும் சித்தரித்துவந்தனர். இந்த விஷயங்களை பொது விவாதத்திற்கு கொண்டுவருவதற்கான நேரமிது.

அதே நேரத்தில், கடந்த வாரம் அமுப-வில் வன்முறைக்கு வழிவகுத்த விஷயம் வரலாற்றை மறுவிளக்கங்களுக்கு உட்படுத்துவது குறித்த சர்ச்சை அல்ல. உள்ளதை உள்ளபடியே நாம் பார்க்க வேண்டும்: விமர்சனபூர்வமான  சிந்தனை (கிரிட்டிகல் தாட்) மையங்களை அழித்தொழிக்கும் பாஜகவின் முயற்சிகளின் தொடர்ச்சியே இது. அமுப இன்னமும் தனது பெயரில் ‘‘முஸ்லிம்’’ என்பதை தக்கவைத்துக் கொண்டிருக்கும் துணிவின் காரணமாக அது மோடியின் இந்தியாவில், ஆதித்யநாத்தின் உபி-யில் தாக்குதலுக்கான இலக்காக இருப்பதில் ஆச்சர்யமில்லை. அமுப-வின் மீதான தாக்குதல் நடத்தப்படுவது இந்த அரசாங்கத்தின் இறுதி கட்டத்திற்காக ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அப்போதுதான் அதன் பாதிப்பு 2019 தேர்தலில் இருக்கும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top