ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846
Reader Mode

இந்தியாவின் இயற்கை வளங்கள் விற்கப்படுகின்றன

இந்திய அரசாங்கம் காடுகளைப் பற்றி படும் கவலையை விட காட்டை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகளைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

இந்திய அரசாங்கம் கார்ப்போரேட்டுகளிடம் ஒப்படைக்க விரும்புவது ஒரு சில வரலாற்று நினைவுச்சின்னங்களை மட்டுமல்ல. காடுகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள  நிலங்கள் போதுமான அளவிற்கு ‘‘ஆக்கபூர்வமாக’’ இல்லை என்ற காரணத்திற்காக அவற்றை கார்ப்போரேட்டுகளிடம் ஒப்படைக்க எண்ணியுள்ளது.  செங்கோட்டை போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நினைவுச்சின்னங்களை ‘‘தத்து’’ எடுக்க கார்ப்போரேட் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவது பற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகையில் முக்கியமான இயற்கை வளங்களான காடுகள் போன்றவற்றை தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பது பற்றி யாரும் கவனிக்கவில்லை.

மார்ச் மாதம் வெளியிடப்பட்ட 2018ஆம் ஆண்டு தேசிய வனக் கொள்கை (தேவகொ) வரைவிற்கான ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளை இப்போது சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் 1988ல் அமல்படுத்தப்பட்டு இப்போதும் நடப்பில் இருக்கும் கொள்கைக்கு பதிலாக இந்த தேவகொ அமலுக்கு வரும். பருவநிலை மாறுபாட்டிற்கு உலகம் ஆளாகியுள்ள நிலையில் புதிய தகவல்களின் வெளிச்சத்தில் ஒரு கொள்கையைப் பற்றி மறுசிந்தனை செய்வதில் எந்தத் தவறும் இல்லை. பசுமைக்குடில் வாயுக்களுள் முக்கியமான ஒன்றான கார்பன் டைஆக்சைட் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதில் காடுகள் முக்கிய பங்காற்றுகின்றன. கார்பன் டைஆக்சைடை உறிஞ்சிக்கொள்ளும் ஆற்றல் காடுகளுக்கு உள்ளதே இதற்குக் காரணம். பருவநிலை பற்றிய அக்கறைகளை இந்த வரைவு தெரிவித்த போதிலும் அதன் உண்மையான நோக்கம் பல சுற்றுச்சுழலாளர்களை, குடிமைச் சமூக குழுக்களை எச்சரிக்கையடைய வைத்துள்ளது.

1952ஆம் ஆண்டு தேவகொ, காலனி ஆட்சியின் அதே அணுகுமுறையைக் கொண்டிருந்தது. அது இயற்கைக் காடுகளை பொருளாதார வளமாக பார்த்தது. அதற்குப் பதிலாக 1988ல் கொண்டுவரப்பட்ட தேவகொ இயற்கைக் காடுகளை ஒரு நாட்டின் சுற்றுச்சுழலுக்கும் சூழலியலுக்கும் தேவையான அடிப்படையான விஷயமாக பார்க்கும் பார்வையை கொண்டிருந்தது. காடு என்பது அதிலுள்ள மரங்களின் கூட்டுத்தொகை அல்ல மாறாக அது பல்லுயிரிகளின் இருப்பிடம், மண்ணின் மேற்பரப்பை, நீர் வளத்தை காக்கும் அரண் என்பதுடன் காட்டு வாழ் மக்களுக்குத் தேவையான வாழ்வாதாரப் பொருட்கள் உற்பத்தியாகும் இடம் என்பதை 1988ஆம் ஆண்டு தேவகொ புரிந்துகொண்டிருந்தது. காடுகளின் வளத்தை காடுகள் தொடர்பற்ற விஷயங்களுக்கு திருப்பிவிடப்படுவது கண்டிப்புடன் கண்காணிக்கப்பட வேண்டிய விஷயம் என்று கூறியது. அக் கொள்கையை அமல்படுத்துவதில் தவறுகள் இருந்தன. இந்தியாவின் காடுகளை பாதுகாப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஆனாலும் 1988ஆம் ஆண்டு தேவகொ கடந்த காலத்திலிருந்த கொள்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்று. காடுகள் பற்றிய கொள்கையில் ஏற்பட்ட இந்த மாற்றம் காட்டுவாழ் மக்களின் உரிமைகள் ஏற்கப்படுவதற்கும், காடுகளை பாதுகாப்பதில் அவர்கள் முக்கிய பங்காற்ற வழிவகுக்கவும் செய்தது. அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற காட்டு வாழ் மக்கள் (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டம், 2006, இந்த உரிமைகளை உறுதிபடுத்தியது. இதன் விளைவாகத்தான் ஒடிசாவின் நியாம்கிரி மலைகளில் வாழும் பழங்குடியினர் தங்கள் காடுகளில் பாக்சைட் தாது தோண்டி எடுப்பதற்கு எதிராக வாக்களிக்க முடிந்தது.

2018ஆம் ஆண்டு தேவபொ மேற்பார்வைக்கு ஆபத்தற்றதாகத் தோன்றினாலும் அதை ஊன்றிப் படிக்கிற போது அம்பலப்பட்டுப் போகிறது. இதற்கு முன்னர் இருந்த பல அரசாங்கங்கள் போலவே இதுவும் இயற்கைக் காடுகளின் அடிப்படை பங்கை உதட்டளவில் பேசுகிறது. ஆனால் உடனே காடுகளை பொருளாதார வளமாக பார்க்கும் பார்வைக்கு சென்றுவிடுகிறது. காடுகளில் உற்பத்தியாகும் பொருட்களுக்கான ‘‘கிளைமேட்-ஸ்மார்ட் வேல்யூ செயின்’’ பற்றி இது பேசுகிறது, காடுகளின் உற்பத்தித் திறன் குறைவாக இருப்பது பற்றி கவலை கொள்கிறது. இதை சரிசெய்ய அரசு-தனியார் கூட்டு அமைப்புகளை ஏற்படுத்தி 40% மரங்கள் கூட இல்லாத ‘‘தரம் குறைந்துவிட்ட’’ காடுகளுக்கு புத்துயிர் அளிக்கப்போவது பற்றியும் இது பேசுகிறது. இத்தகைய கூட்டுகள் (அரசு-தனியார்) பெரும்பாலும் ஒரே வகையான மரங்களை நடுதலில், குறிப்பாக உள்ளூர் மரங்களுக்கு பதிலாக வேகமாக வளரும் வெளிநாட்டு மரங்களை நடுதலில் முடியும் என்பதையும், இது இயற்கைக் காடுகளை அல்ல மாறாக தொழிற்துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் காடுகளை வளர்ப்பதில் முடியும் என்பதை நமது கடந்த கால அனுபவங்கள் காட்டுகின்றன. மேலும் இந்த பொது வளங்களின் மீது உரிமை கொண்ட காட்டுவாழ் மக்கள், நாடோடி சமூகங்கள் ஆகியோரை இது விரட்டியடித்துவிடும். இந்தியாவிலுள்ள மரங்களை வெட்டி அது தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இப்போது வெளிநாடுகளிலிருந்து மரங்களை இறக்குமதி செய்ய வேண்டிய நெருக்கடியிலிருப்பதே இந்த ஆலோசனைக்குக் காரணம்.

மேலும், காடுகள் அழிவதற்கான பிற காரணங்களையும் இந்தக் கொள்கை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. உதாரணமாக, பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பிற திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுகின்றன. அணைகள், சுரங்கங்கள், சாலைகள் அமைத்தல் போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்காக தினமும் 135 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுவதாக 2013ஆம் ஆண்டு ரித்விக் தத்தா மற்றும் ராகுல் சவுத்ரி என்ற இரண்டு சுற்றுச்சூழல் வழக்கறிஞர்கள் தகவல் உரிமை சட்டத்தின்படி செய்திருந்த மனுவில் தெரிய வந்தது. இந்த புதிய தேவகொ விவாதிக்கப்பட்டுவரும் வேளையில், சிக்மங்களூரூவையும் தட்சின கன்னடாவையும் இணைப்பதற்கான 65 கிமீ நீள சாலை அமைக்க கர்நாடாகாவிலுள்ள மேற்குதொடர்ச்சி மலை காடுகளில் உள்ள 30,000 மரங்கள் வெட்டப்படுவது குறித்து அறிவிப்பு வந்துள்ளது. அத்துடன் நிலக்கரி சுரங்கங்களுக்காக காடுகள் அழிக்கப்படும் பிரச்னை தீர்க்கப்படாமல் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

காட்டு வளங்கள் இவ்வாறு பயன்படுத்தப்படுவதால் காடுகள் துண்டாடப்படுகின்றன. இதைப் பற்றி எந்த விவாதமும் இல்லை. வனக் கொள்கைகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் எனில் தொடர்ச்சியாக இருக்கும் காடுகள் காப்பாற்றப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. காடுகள் சிறு சிறு துண்டுகளாக ஆக்கப்படுகின்ற போது அவற்றை ஆக்ரமிப்பதும் அழிப்பதும் எளிதாகிறது. இதை குறிப்பாக நகர்ப்புறங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.

இயற்கைக் காடுகளை, அழிந்துவரும் நிலையிலிருந்தாலும் சரி அல்லது வேறு நிலையிலிருந்தாலும் சரி, அவற்றை தனியார் வசம் ஒப்படைப்பதிலுள்ள ஆபத்துகளை 1988ஆம் தேவகொ உணர்ந்திருந்தது. ஆனால் இப்போதைய தேவகொ வரைவு அதைத்தான் செய்ய முயற்சிக்கிறது. இதை ஏற்றுக்கொண்டால் ஏறக்குறைய 40% இயற்கைக் காடுகள் தனியார் துறையை சேர்ந்த மரம் வெட்டும் தொழிற்சாலைகளுக்கு இரையாகிவிடும். இத்தகைய பிற்போக்கான நடவடிக்கையால் சுற்றுச்சூழலோ அல்லது காடுகளை நம்பியிருக்கும் 30 கோடி மக்களோ எந்தப் பலனையும் பெற மாட்டார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக, நிலம், காடுகள், தண்ணீர் என எந்த இயற்கை வளத்திலிருந்தும் அதிகபட்ச வருவாய் ஈட்டுவதில் விருப்பமாய் இருக்கும் ஓர் அரசாங்கத்திற்கு இந்தக் கொள்கை சரியானதாகவே தோன்றும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top