ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

பசிக்கும் குழந்தைகளுக்கு உணவூட்டுதல்

ஊட்டச்சத்துக்குறைவால் வாடும் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு உள்ளூர் சார்ந்த பல்வேறு வகையான உணவுகளை அளிப்பதே சிறந்த மாற்று.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

நிதி ஆயோக்கிற்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான மேனகா காந்திக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கன்வாடி மையங்களில் சிறு குழந்தைகளுக்கு என்ன நிரப்ப ஊட்டச்சத்து (சப்ளிமென்ட்ரி நியூட்ரிஷியன்) தருவது என்பது மீண்டும் ஆய்வுப்பொருளாகியுள்ளது. குழந்தைகளுக்கு அளிக்கப்படும் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் உணவுப்பொருட்களுக்கு (டேக் ஹோம் ரேஷன்ஸ்) பதிலாக ‘‘ஆற்றல் மிகுந்த, தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து பொட்டலங்கள்’’ அளிக்கப்படுவதை அமல்படுத்த அமைச்சர் முயல்வதாக கடந்த வார செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் இவருக்கு முந்தைய அமைச்சரும் நிரப்பு ஊட்டச்சத்துக்களை பெரிய அளவில் ஓரிடத்தில் தயாரித்து பொட்டலங்களாக விநியோகிப்பதையே ஆதரித்தார். இவ்வாறு செய்வது உணவின் தரத்தையும் சுகாதாரத்தையும் மேம்படுத்தும் என்பதன் அடிப்படையில் இது நியாயப்படுத்தப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவின் ஊட்டச்சத்து சவால்கள் பற்றிய தேசிய கவுன்சில் கூட்டத்தில் இந்த முன்மொழிவை நிதி ஆயோக் நிராகரித்துவிட்டதன் காரணமாக இந்த சர்ச்சை இப்போதைக்கு ஓய்ந்திருக்கிறது. இதற்குப் பதிலாக 2013ஆம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை (தேஉபச) மற்றும் 2017ஆம் ஆண்டின் நிரப்பு ஊட்டச்சத்து {(ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தை வளர்ச்சி சேவைகள் திட்டத்தின் (ஐசிடிஎஸ்) கீழ்}, விதிகளை பின்பற்ற வேண்டிய தேவையை வலியுறுத்தியிருப்பதுடன் உணவை தயாரிப்பதில் தாய்மார்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டமானது ஆறு மாதம் முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கும் கர்ப்பமாக உள்ள, குழந்தைகளுக்கு பாலூட்டிக்கொண்டிருக்கிற தாய்மார்களுக்கும் அங்கன்வாடி மையங்கள் வழியே நாள் ஒன்றுக்கு ஒரு வேலை உணவை இலவசமாக வழங்க வேண்டுமென்று கூறுகிறது. இது பயனாளர் யார் என்பதைப் பொறுத்து வீட்டிற்கு எடுத்துச்செல்லும் உணவுப்பொருட்களாகவோ அல்லது சமைக்கப்பட்ட சூடான உணவாகவோ இருக்கலாம். நிரப்பு ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் சுய உதவி குழுக்களின் மூலம் ஊட்டச்சத்து உணவை விநியோகிப்பதை தேஉபாச-வின் கீழ் ஐசிடிஎஸ்-க்கான விதிகள் குறிப்பிடுகின்றன.

ஐசிடிஎஸ் கீழ் வீட்டிற்கு எடுத்துச்செலும் ரேஷன்களை பல மாநிலங்களில் நீண்ட காலமாகவே தனியார் ஒப்பந்ததாரர்கள் விநியோகித்து வருகிறார்கள். இந்த முறையில் ஏராளமான ஊழலும், கசிவுகளும் நடக்கின்றன. இதை உணர்ந்த உச்ச நீதிமன்றம் ஐசிடிஎஸ்-க்காக தனியார் ஒப்பந்ததாரர்கள் விநியோகம் செய்வதை தடை செய்ததுடன் கிராமங்களில் உள்ள உள்ளூர் அமைப்புகள் மூலம் அல்லது சுய உதவி குழுக்கள் மூலம் இதை செய்யும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்குப் பின்னரும் சட்டத்திலுள்ள பல ஓட்டைகளை பயன்படுத்தி பல மாநிலங்கள் இன்னமும் தனியார் ஒப்பந்ததாரர்களை பயன்படுத்துகின்றன. இந்த ஒப்பந்ததாரர்கள் ‘‘உண்மையான உற்பத்தியாளர்கள்’’ என்ற பெயரிலும் கிராம அமைப்புகள் என்ற பெயரிலும் கூட செயல்படுகிறார்கள். உணவு உரிமை சட்டம் தொடர்பான தனது உத்தரவுகள் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க உச்ச நீதிமன்ற நியமித்த ஆணையர்கள் வீட்டிற்கு எடுத்துச்செல்லும் ரேஷன்கள் விஷயத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், விநியோகஸ்தர்கள் ஆகியோரிடையே நிலவும் பிணைப்பு பற்றி வலுவான அறிக்கையை சமர்ப்பித்தனர். மகாராஷ்டிராவில் ஐசிடிஎஸ்-ன் கீழ் நிரப்பு ஊட்டச்சத்து விநியோகிக்கும் கிராம அமைப்புகள் போலி என்றும், இவை முன்னாள் ஒப்பந்ததாரர்கள் உருவாக்கியிருக்கும் போலி அமைப்புகள் என்றும் இது குறித்து தீவிர புலனாய்வு செய்யப்பட வேண்டுமென்றும் அவர்கள் கூறியுள்ளனர். மகாராஷ்டிரா அரசாங்கமானது சிறிய அளவில் செயல்படும் உள்ளூர் கிராம அமைப்புகளை ஈடுபடுத்துவதை பரவலாக்கியது. இந்த முயற்சி தொடங்கிய நாளிலிருந்தே பழைய விநியோகஸ்தர்களை மீண்டும் கொண்டுவர பல அரசாங்கங்களும் தொடர்ந்து முயற்சி செய்வதன் காரணமாக கிராம அமைப்புகளை பயன்படுத்துவது என்பது ஆபத்திலுள்ளது. இது குறித்து பல வழக்குகள் இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில் மத்திய பிரதேச அரசாங்கம் நிரப்பு ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து உணவு ஒப்பந்ததாரர்கள் மூலம் விநியோகிக்கப்படுவதை ரத்து செய்து விநியோகத்தை பரவலாக்க செய்த முயற்சிகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஐசிடிஎஸ் கீழ் ஆண்டுதோறும் நிரப்பு ஊட்டச்சத்துக்காக, மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து 15000 கோடி செலவிடுகின்றன. இது பிரம்மாண்டமான தொகை என்பதால் எல்லாவிதமான வர்த்தக நிறுவனங்களும் இதில் லாபம் பார்க்க விழைகின்றனர். ஆனால் விநியோகத்தை பரவலாக்குவதன் மூலமாக இந்தப் பணத்தை சிறப்பாக செலவிட முடியும். இதன் விளைவாக உள்ளூர் பயிர்களுக்கான தேவை அதிகரிப்பதுடன், சமைப்பது, உணவு தயாரிப்பது போன்ற வேலைகளை செய்யக் கூடிய பெண்களுக்கு வேலைவாய்ப்புகளும் உருவாகும். மேலும் இதன் விளைவாக உள்ளூர் உணவுகளை, பல வகைப்பட்ட உணவுகளை அங்கன்வாடி மூலம் அளிப்பதற்கு மக்களிடையே ஏற்புத்தன்மை அதிகமிருக்கும், சிறு குழந்தைகளுக்கு மற்றும் கைக்குழந்தைகளுக்கு ஊட்டப்படும் செயல்முறை மேம்படும். கடைசியாக வெளியான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி இரண்டு வயதிற்குட்பட்டவர்களில் வெறும் 9.6% குழந்தைகளுக்கு மட்டுமே தேவையான அளவிற்கு உணவு கிடைக்கிறது. தரமான உணவுகளை கிடைக்கச் செய்வது, குழந்தைகளுக்கு ஊட்டுவது பற்றிய அறிவை, விழிப்புணர்ச்சியை அதிகப்படுத்துவது, கர்ப்ப காலத்திலும், குழந்தைகளை வளர்க்கவும் தேவைப்படுவனவற்றை அளிப்பது ஆகியவற்றிற்கான தேவை இருக்கிறது என்பது இந்த கணக்கெடுப்பிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

பொட்டலமாக கட்டப்பட்ட உணவுகளா அல்லது புத்தம் புதிதாக சமைக்கப்பட்ட உணவுகளா என்ற விவாதத்தை இத்துடன் நிறுத்துவிட்டு உள்ளூர் உணவுகளின் அடிப்படையில் பல்வேறு வகையான உணவுகள் கிடைக்க வழிசெய்ய வேண்டும். பரவலாக்கலானது (டீசென்ட்ரலைசேஷன்) நடப்பதை உள்ளூர் சமூகத்தினர் கண்காணிப்பதை அதிகரிக்கச் செய்யும், தரப்படும் உணவின் தரத்தை தாய்மாரிகளின் குழு கண்காணிக்க வழிவகுக்கும். உள்ளூர் சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வண்ணமும், சிறு குழந்தைகளுக்கு போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும்படியும் தேஉபாச முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.

ஐடிசிஎஸ் கீழ் நிரப்பு ஊட்டச்சத்து திட்டத்தில் ஊட்டச்சத்து உணவு அளிக்கப்படுவதை ஒழித்துக்கட்ட முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது. நிரப்பு ஊட்டச்சத்து திட்டத்தை முழுக்க முழுக்க வர்த்தக நிறுவனங்கள் கைப்பற்ற பார்த்ததை தடுத்த பாராட்டிற்குரிய வேலையை செய்த நிதி ஆயோக், உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கு பதிலாக பணமாக தந்துவிட விரும்புகிறது. வீட்டிற்கு ரேஷன்களை எடுத்துச்செல்வதற்கு பதிலாக பணத்தை வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிடுவது என்ற திட்டம் 10 மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு சமீபத்தில் நடந்த ஊட்டச்சத்து கவுன்சின் கூட்டம் அனுமதி தந்துள்ளது. வங்கிக் கணக்கு இல்லாதது, உணவு எந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறதோ அதை பணம் செய்யாது என்பது உட்பட இத்தகைய திட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் பற்றி கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எந்த வகையில் பார்த்தாலும் பணமாகத் தரும் முறையானது தேஉபா சட்டத்திற்கு எதிரானது. ஏனெனில் இந்தச் சட்டத்தின்படி தரப்படுவது உணவாகத்தான் இருக்க வேண்டும். அப்படி வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தும் முறையை இவ்வளவு அவசராக அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமெனில் தனக்கேயுரிய பலன்களைக் கொண்டுள்ள ஊட்டச்சத்து அளிக்கும் முறையை ஒழிக்காமல் கர்ப்பிணிகளுக்குத் தர வேண்டிய 6000ஐ அனைவருக்குமானதாக ஆக்கட்டும். ஏனெனில் அது தேஉபா சட்டத்தில் இருக்கிறது, பிரதமரும் ஓராண்டிற்கு முன்னர் அதை அறிவித்தார்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top