ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

கார்ல் மார்க்ஸ்: இருக்கக்கூடிய அனைத்தைப் பற்றியும் ஈவிரக்கமற்ற விமர்சனம்

மார்க்ஸ் பிறந்து இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு மூலதனம் மற்றும் முதலாளித்துவத்தை உலக அமைப்பு என்ற ரீதியில் பகுப்பாய்வு செய்கிறார் பெர்னார்ட் டிமெல்லோ

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

‘‘ஈவிரக்கமற்ற விமர்சனம்’’ என்பது கார்ல் மார்க்ஸ் ஏற்றுக்கொண்ட விதிகளுள் ஒன்று. மூலதனம் மற்றும் முதலாளித்துவம் குறித்த தனது விமர்சனபூர்வமான பகுப்பாய்வில் இந்த விதியை மிகுந்த வலிமையுடன் பயன்படுத்தினார். அவர் பிறந்து 200 ஆண்டுகள் ஆகின்ற இந்த தருணத்திலும் வரலாற்றில் மாபெரும் செல்வாக்கு கொண்ட மேதைகளுள் ஒருவராக, விஞ்ச முடியாதவராக இருக்கிறார். ஈவிரக்கமற்ற விமர்சனம் என்ற விதியை தனது சொந்த கருத்துக்கள் விஷயத்திலும் பிரயோகித்தார். தான் எழுதியவற்றில் எது சரி எது தவறு என்பது பற்றி தொடர்ந்து ஆராய்ந்து கொண்டேயிருந்தார். உதாரணமாக, 1853ல் பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களின் நூல்களை, ஆவணங்களை சார்ந்து மார்க்ஸ் எழுதிய போது பிரிட்டிஷ் காலனி ஆட்சி இந்தியாவில் பொருளாதார மாற்றத்தை கொண்டுவருவதற்கான ‘‘வரலாற்றின் கருவியாக தன்னையுமறியாமல்’’ செயல்படுகிறது என்று எழுதினார். பின்னர் 1881ல் இந்தியா தொடர்பான ஆதாரங்கள் அதிகம் கிடைத்த பிறகு இந்தியாவிலிருந்து ‘‘தான் எடுத்துக்கொள்ளும் எதற்கும்’’ ‘‘இணையான ஒன்றை தராமலிருப்பது’’ ‘‘பழியுணர்வுடன் இரத்தத்தை எடுக்கும் செயல்’’ என்று எழுதினார். அவதானிப்பதன் மூலம் கிடைக்கு அறிவின் (எம்பிரிக்கல் நாலெட்ஜ்) மூலம் கிடைக்கும் ஆதாரங்கள் (எம்பிரிக்கல் எவிடென்ஸ்) விஷயத்தில் மார்க்ஸ் எப்போதும் திறந்த மனதுடன் இருந்தார். அவரது கருத்தாக்கங்களும் வரையறைகளும் ஓர் எல்லைக்குள் அடைபட்டவையாக இல்லை, அவை புதிய, மாறும் வரலாற்றுச் சூழல்களுக்கேற்ப தங்களை தகவமைத்துக்கொள்ளக் கூடியவையாக இருக்கின்றன.

கற்பனாவாத இலட்சியவாதியாக தொடங்கிய மார்க்ஸ், பிரடெரிக் ஹெகலையும் லூத்விக் பாயர்பாக்கையும், பிற தத்துவவியலாளர்களையும் அலசி ஆராய்ந்தார். தன்னைச் சுற்றியுள்ள மக்களுடைய வாழ்வின் மிக மோசமான பொருளாதார நிலையைப் பற்றி கவலை கொண்ட அவர் தனது சொந்த இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாத தத்துவங்களை வளர்த்தெடுத்தார். அதற்குப் பின்னர் அவரது அறிவாராய்ச்சி முறையில் கூர்மையான அறுபடல் எதுவும் இல்லாத தொடர்ச்சி இருந்தது. ‘‘இளம் மார்க்ஸுக்கும்’’ ‘‘முதிய மார்க்ஸுக்கும்’’ இடையே ஓர் உயிர்ப்புள்ள உறவை ஒருவர்  உய்த்தறிய முடியும். அவர் மீது ஜெர்மன் தத்துவம், பிரஞ்சு பொதுவுடைமை, பிரிட்டிஷ் அரசியல் பொருளாதாரம் ஆகிய மூன்றின் தாக்கம் முக்கியமானவை. பிற்காலத்தில் ரஷ்யப் பரப்பியமும் (ரஷ்யன் பாப்புலிசம்) இதில் சேர்ந்துகொண்டது.                                                                    

தனது மூலதனம் நூலில் மார்க்ஸ் அருவ-உய்த்தறிதல் முறையை (அப்ஸ்ட்ரேக்ட் டிடக்டிவு மெத்தட்) பயன்படுத்தினார். பின்னர் இது ‘‘சக்சஸிவ் அப்ராக்சிமேஷன்’’ முறை என்றழைக்கப்பட்டது. இந்த முறையில் பகுப்பாய்வானது படிப்படியாக, அருவமான ஆய்விலிருந்து ஸ்தூலமான நிலைக்கு முன்னேறுகிறது. இந்த முறையின் ஒவ்வொரு படியிலும் எளிதாக்கப்பட்ட முன்யூகங்கள் (சிம்பிளிபையிங் அஸம்ப்ஷன்ஸ்) கைவிடப்படுகின்றன. ஆக இந்தப் பகுப்பாய்வானது அடுத்தடுத்த படிகளில் பரந்துவிரிந்த யதார்த்த புலப்பாடுகளை விளக்குகிறது. இந்த முறை புற உலகின் முக்கியமான அம்சங்களை  ஆழமான ஆய்விற்கு உட்படுத்துகிறது. உதாரணமாக, மூலதனம் நூலின் முதல் பாகத்தில் மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான உறவை ஆராயும் விதம். இந்த ஆய்வு முறையின் கீழ் நிலைகளில் யதார்த்த உலகின் பல்வேறு அம்சங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த அம்சங்கள் இந்த முறையின் உயர் நிலையில் உய்த்தறியப்படும் விஷயங்களை மாற்றியமைக்கக் கூடும். முக்கியமாக மார்க்ஸின் ஆய்வு முறையானது சாராம்சத்தில் வரலாற்று ரீதியானது. ஒரு குறிப்பிட்ட சமூக உறவுகளின் அமைப்பில் உள்ளார்ந்திருக்கும் மாற்றம் என்ற செயல்முறையானது மனித செயல்பாடுகளின் விளைவாகும். சமூகம் மாறுகிறது. ‘‘யதார்த்தத்தில் நிலவும் சூழல்கள் மற்றும் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு கடத்தப்பட்டவைகளைக் கொண்டு’’ ஓர் எல்லைக்குட்பட்ட அளவில் சமூகம் மாறுகிறது. வரலாற்றுரீதியாக அல்லாத முதலாளித்துவம் ஏதுமில்லை. மேற்கு ஐரோப்பாவின் முதலாளித்துவம் பற்றிய அவரது பகுப்பாய்வு அது எப்படி வந்தது, எப்படி செயல்படுகிறது, அதன் அடுத்த கட்டம் என்ன என்பன பற்றி ஆராய்கிறது.

மாற்றத்தைக் கொண்டுவர முயலும் வரலாற்று சக்திகளுக்கும், தற்போது இருக்கின்ற நிலையை அப்படியே வைத்திருக்க முயலும் சக்திகளுக்கும் இடையே எப்போதுமே ஒரு பதற்றமான உறவு இருந்தபடி இருக்கிறது. இந்தப் போராட்டமானது ஒருங்கிணைவுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அமைப்பை உடைத்து முக்கியமான மாற்றத்தை கொண்டுவருகிறது. ஆகவே, 1860களில் இருந்த பொருளாதார, சமூகச் சூழல்கள் பெருமளவில் மாறிவிட்ட போதிலும் மூலதனம் மற்றும் முதலாளித்துவம் பற்றிய மார்க்ஸின் பகுப்பாய்வு தவிர்க்க முடியாத வகையில் இன்னமும் புரட்சிகரமான ஒன்றாக நீடிக்கிறது. மார்க்ஸ் தனது ஆய்வு முறையை தொடர்ந்து செழுமைபடுத்தியபடி செய்த ஆராய்ச்சியை நாம் தொடர்வது அவசியம். அவரது கோட்பாடு ஓர் எல்லைக்குள் கட்டுப்பட்டதல்ல. அவரது கோட்பாடு மேலும் செழுமைபடுத்தப்படும் பொருட்டு நம்மால் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும், அதிலும் குறிப்பாக மார்க்சீய நோக்கிலிருந்து பகுப்பாய்வு செய்யப்பட வேண்டுமென அவர் நிச்சயம் எதிர்பார்த்திருப்பார்.

மூலதனம் முதல் தொகுதி வெளியிடப்பட்டு 150 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் உலகில் நடந்துள்ள மாற்றங்களுக்கேற்ப மார்க்ஸின் கோட்பாடுளில் முக்கியமான மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இப்போது முதலாளித்துவம் முழுக்க முழுக்க உலகளாவிய அளவில் மட்டுமே செயல்படுகிறது. உலக முதலாளித்துவத்தில் விளிம்புநிலை மற்றும் அரை விளிம்புநிலைப் பகுதியானது பொருளாதார, அரசியல் மற்றும் ராணுவ ரீதியாக முதலாளித்துவத்தின் மையத்திற்கு அடிபணிந்திருக்கிறது. விளிம்புநிலை மற்றும் அரை விளிம்புநிலைப் பகுதிகளில் சுரண்டல் விகிதம் மிக அதிகம். மையத்தில் உள்ள ஆளும் வர்க்கங்களும், தொழில்நுட்ப வர்க்கமும் லாபத்தின் பெரும் பகுதியை எடுத்துக்கொள்வதாகவே இப்போதைய சுரண்டல் அமைப்பு முறை இருக்கிறது. மையத்தில் தேக்கநிலை (மந்தமான பொருளாதார வளர்ச்சி, அதிக அளவிலான வேலையின்மை, தனது சக்திக்கு குறைவான உற்பத்தி) நிலவுகிறது, உலக அளவில் பன்னாட்டு கார்ப்போரேட் நிறுவனங்கள் எண்ணிக்கையில் அதிகரித்திருக்கின்றன, ‘‘மூலதனத் திரட்டு நிதிமயமாகி’’ உலகப் பொருளாதாரத்தின் ‘‘உண்மையான’’ பகுதி மற்றும் அதன் தேசிய அலகுகள் மீது சுதந்திரமான நிதி மேற்கட்டுமானம் எழுந்துள்ளது. உலகின் ‘‘உண்மையான’’ பெரும் பொருளாதாரங்கள் மற்றும் கார்ப்போரேட் நிறுவனங்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டின் மீது இந்த நிதி மேற்கட்டுமானங்கள் பெரும் செல்வாக்கு செலுத்துவதுடன் கார்ப்போரேட் நிறுவனங்களின் நிர்வாகத்தையும் நிதி ஊகங்களில் ஈடுபடவைக்கிறது. தாங்கள் மீத்தி வைத்திருக்கும் வருமானம் லாபகரமானதாக இல்லாததால் நிதி ஊக வணிகத்தில் அது திருப்பிவிடப்படுகிறது.

இதற்கிடையில், ‘‘உண்மையான’’ உலகப் பொருளாதாரத்தில் விளிம்புநிலை/அரை விளிம்புநிலைப் பகுதிகளிலிருந்து தொழிலாளர்கள் மையப் பகுதிகளுக்கு குடியேறுவதில் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கையில் பன்னாட்டு மூலதனமானது விளிம்புநிலை/அரை விளைம்புநிலைப் பகுதிகளில், சுரண்டலில் கிடைக்கும் லாப விகிதம் மிக அதிகமாய் இருப்பதால், இந்தப் பகுதிகளில் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படும் மதிப்பின் பெரும் பகுதியை எடுத்துக்கொள்கின்றன. இத்தகைய பன்னாட்டு அங்காடி நிறுவனங்கள் விவசாயிகள் வரை வந்துவிட்டன. சந்தை சக்தி இல்லாததால் விவசாயிகள் இந் நிறுவனங்கள் சொல்லும் விலை ஏற்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள், மூலதனத்திற்கு அடிபணிந்து அதிக சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். தங்கள் பயிர் செய்யும் நிலத்தை இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாடகை விடும் கட்டாயத்திற்கு ஆளாகும் விவசாயிகள் தங்களது ‘‘கூலிகளின்’’ ஒரு பகுதியையும் இழக்கிறார்கள்.

மூலதனம் நூல் இன்றைக்கு எழுதப்படுமெனில், அது தொகுதி 1, 2 அல்லது 3 என எந்தத் தொகுதியாக இருந்தாலும் மூலதனம் மற்றும் முதலாளித்துவம் பற்றிய அதன் பகுப்பாய்வு மூல நூலிலிருந்து மிகவும் வேறுபட்டு இருக்கும். என்னென்ன வகையில் வேறுபட்டிருக்கும் என்பதற்கு கட்டுரையின் இடமின்மை கருதி ஒரு சில உதாரணங்கள் மட்டும் தருகிறேன்: உலக அளவில் வர்க்க பகுப்பாய்வு; உழைப்பு சக்தியின் மதிப்பு மற்றும் முதலாளித்துவ மையங்களில், விளிம்புப் பகுதிகள் மற்றும் அரை விளிம்புப் பகுதிகளில் அதன் விலை பெரிதும் வேறுபட்டிருப்பது; பெரிய அளவிலான சுரண்டல் மற்றும் சமமற்ற பரிவர்த்தனையாக மதிப்புப் கோட்பாடு; மூலதனத்தால் வறிய விவசாயிகளும் சிறு பண்ட உற்பத்தியாளர்களும் சுரண்டப்படுவது; பண்ட உழைப்பு சக்தியை மறு உற்பத்தி செய்யும் கூலி தரப்படாத வீட்டுவேலை; பெரும்பாலான மக்களை எந்த அதிகாரமும் இல்லாதவர்களாக்குவது; இயற்கை வளங்களை கைப்பற்றுவது, தொழிற்சாலைகளின் உற்பத்திக்காக நிலத்தை பயன்படுத்திக் கொள்வது; வளம் முற்றிலும் வற்றிப்போகும் வகையில் ‘‘இயற்கை’’யிலிருந்து அபகரிப்பது, உற்பத்தி செய்யப்படுவனவற்றில் மீதமாகும் ‘‘கழிவு’’களை ‘‘இயற்கை’’யின் மீது கொட்டி நிரப்புவது; சூழியியல் ஏகாதிபத்தியம்; நிலையின்மை மற்றும் நெருக்கடிகள்; நிதிமயமாதல், நிதி மேற்கட்டுமானம் மற்றும் ‘‘உண்மை’’யான பொருளாதாரத்துடன் அதற்குள்ள உறவு; ஏகபோக நிதி மூலதனம்; மூலதனத்தின் அரசியல் அதிகார அமைப்பாக அரசு இருப்பது; விற்பனை முயற்சி; குடிமைச்சமூக அரசாங்கம்; ராணுவமயம் மற்றும் ஏகாதிபத்தியம்; மைய முரண்பாடுகள் மற்றும் முதன்மையான முரண்பாடு; மற்றும் பொதுவுடமை சமூகப் புரட்சி.

மார்க்ஸ் பிறந்து இருநூறு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் மார்க்ஸின் சிந்தனை முறை மற்றும் ஆய்வு முறையை - வரலாற்றுப் பொருள்முதல்வாதம் மற்றும் இயங்கியல் பொருள்முதல்வாதம்- பயன்படுத்தி உலகை மறு விளக்கம் செய்வதும், அவ்வாறு செய்கையில் பழைய விளக்கங்களை விமர்சனத்திற்குள்ளாக்குவதும் நம் முன்னுள்ள சவாலாகும். குறிப்பாக, மார்க்சீயம் ஒரு பொருளாதார நிர்ணயவாதம் என்ற நமக்குள்ள இயந்திரகதியிலான பார்வையை, மனித இனத்தின் மொத்த வாழ்நாளிற்கும் இது பொருத்தமுடையது என்ற எண்ணத்தை கைவிட்டாக வேண்டும்.

உலகை மறுவிளக்கம் செய்வதும், அதை பொதுவுடைமைப் புரட்சியின் மூலம் மாற்றுவதும் உடனடியாக செய்யப்பட வேண்டியவை. மூலதனமும் முதலாளித்துவமும் தொடருமெனில் மனித சமூகம் அடுத்த 200 ஆண்டுகள் இருக்குமா என்பதே சந்தேகமே.

Back to Top