2014, டிசம்பர் 1ஆம் தேதியன்று நீதிபதி பி எச் லோயா இறந்துபோனது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை 2018 ஏப்ரல் 19ஆம் தேதி வழங்கியது. குற்றவியல் அமர்வு நீதிபதி (செஷன்ஸ் ஜட்ஜ்) லோயாவின் மரணம் இயற்கையான காரணங்களால் ஏற்பட்டது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவரது திடீர் மரணத்தைப் பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகள் உட்பட பலராலும் எழுப்பப்பட்ட சந்தேகங்கள், குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை கருத்தில்கொள்கிறபோது இந்தத் தீர்ப்பு அதிக கேள்விகளை எழுப்புகிறது.
நீதிபதி லோயாவின் வழக்கு தலைமை நீதிபதியின் முன் முதன் முறையாக குறிப்பிடப்பட்ட 2018, ஜனவரி 12ஆம் தேதி அன்றுதான் அது வரை நடந்திராத வகையில்ஔச்ச நீதிமன்றத்தின் முதல் நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து தலைமை நீதிபதி வழக்குகளை பிற நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் முறை பற்றி கேள்வி எழுப்பினர். நீதிபதி லோயாவின் வழக்குதான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கான தூண்டுதலா என்று குறிப்பிட்டு கேட்கப்பட்ட கேள்விக்கு நீதிபதி கோகாய் (நான்கு பேரில் ஒருவர்) ஆம் என்று பதிலளித்தார்.