மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய தேர்வுகளில் 10ஆம் வகுப்பிற்கான கணித கேள்வித்தாளும் 12ஆம் வகுப்பிற்கான பொருளாதார கேள்வித்தாளும் கசிந்ததானது மிகவும் கவலை தருகிறது. பல லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பதினரை இத்தகைய நிகழ்வுகள் பெரிதும் பாதிக்கும். இந்த அமைப்பில் எந்த அளவிற்கு ஊழலும் தவறான நடத்தைகளும் மலிந்துவிட்டுள்ளன என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது. சிபிஎஸ்இ அமைப்பானது தன்னுடன் இணைந்துள்ள இந்தியாவெங்கிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேசிய அளவிலான பொதுத் தேர்வுகளை நடத்தி மாணவர்கள் பெற்றுள்ள அறிவிற்கான சான்றிதழை வழங்குகிறது. கேள்வித்தாள்கள் பாதுகாப்பாக தேர்வு தினத்தன்று மாணவர்களை சென்றடைவதை உறுதி செய்வது இந்த அமைப்பின் பொறுப்பு, ஆனால் தேர்வு தினத்திற்கு முன்னரே கேள்வித்தாள் கசிந்ததன் காரணமாக இந்த அமைப்பானது கடந்த சில வாரங்களாகவே கண்காணிப்பின் கீழ் இருக்கிறது.
இந்தத் தேர்வுகள் மரபான முறையில், பிரம்மாண்டமான, மிகைப்படுத்தப்பட்ட முக்கியத்துவத்துடன் நடத்தப்படுபவை. உயர் கல்வியில் ஒருவர் விரும்பும் துறை அல்லது கல்லூரியில் சேர முடிவதை இந்தத் தேர்வுகள் நிர்ணயிக்கின்றன என்பதால் ஒருவரின் வாழ்க்கையில் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் யதார்த்தத்தில் இந்த மதிப்பெண்கள் ஒருவரது திறன், செயலாற்றல், இயல்பு ஆகியவற்றப் பற்றி எதையும் தெரிவிப்பதில்லை என்பது வேறு விஷயம். ஆனால் ஒருவது திறனை (பெர்மார்மன்ஸ்) கணித்து, மதிப்பிட்டு, மிக முக்கியமாக சான்றிதழ் அளிக்கப்படும் காரணத்தால் இந்த சடங்கு பொதுமக்களின் பார்வையில் பெரிய முக்கியத்துவத்தை பெறுகிறது. தங்களது பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றி மிகத் தீவிரமாக இருக்கும் மாணவர்கள், தங்களது குழந்தைகளைப் பற்றியும் தங்களது சுயமதிப்பு பற்றியும் பெற்றோர்கள் கொண்டுள்ள கவலை, தங்களது பதில் சொல்லும் பொறுப்பு பற்றி ஆசிரியர்கள் கவலைகொள்வது, பள்ளிகள் அதிக மாணவர்களை தங்கள் பள்ளிகளுக்கும் கவரும் பொருட்டு நல்ல தேர்ச்சி விகிதத்தை காட்ட முயல்வது ஆகியவற்றால் இந்தத் தேர்வுகள் அசாதாரண முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இந்தத் தேர்வுகளை பீடித்திருக்கும் பித்தானது ஒரு தொழிற்துறைக்கே எரிபொருளாக இருக்கிறது. சிபிஎஸ்இ அமைப்பின் அதிகாரிகள், பள்ளிகள், பயிற்சி மையங்கள் ஆகியவற்றிற்கிடையே இருக்கும் தீய உறவை இந்தக் கசிவின் விளைவுகள் வெளிப்படுத்தியுள்ளன.