உண்மையிலேயே சுதந்திரமாக இருக்கும் ஓர் பொது ஒலி/ஒளிபரப்புத்துறையின் மிக மோசமான நகலாகக் கூட பிரசார் பாரதி இல்லை.
நரேந்திர மோடியின் அரசாங்கமோ அல்லது இதற்கு முன்னமிருந்த அரசாங்கங்களோ சுதந்திரமான, தன்னாட்சி கொண்ட பொதுத் தொலைக்காட்சி மற்றும் வானொலி (பஃப்ளிக் பிராட்கேஸ்டர்) நிறுவனம் இருப்பதை விரும்பியிருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனாலும் இந்தியாவின் பொதுத் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனமான பிரசார் பாரதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே மிக மெல்லிய கருத்து வேறுபாடு எழுந்தாலும் கூட பிரசார் பாரதியின் தன்னாட்சி பிரச்னை எழுப்பப்பட்டு விவாதிக்கப்படும். உதாரணமாக சமீபத்தில் பிரசார் பாரதி வாரியத்திற்கும் தகவல் மற்றும் ஒலி/ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திற்கும் இடையே தொழில் ரீதியான நியமனங்களை வாரியம் நிராகரித்தது மற்றும் வேறு விஷயங்களின் காரணமாக மோதல் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் தனது உரிமையை உறுதிபடுத்தியுள்ள வாரியம் தனது அதிகார எல்லை என்ன என்பதை நிலைநாட்டியிருக்கிறது. தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியின் பணியாளர்களுக்கான சம்பளத்தை தராது அமைச்சகம் நிறுத்திவைத்ததை பதிலடி நடவடிக்கை என வாரியம் குற்றம்சாட்டியிருக்கிறது. இது குடும்பத் தகராறு போன்ற விஷயம் என்பதால் எதிர்பார்த்ததைப் போலவே பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது.
இந்திரா காந்தியால் 1975-77 அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையின் போது தூர்தர்ஷனும் அகில இந்திய வானொலியும் அரசாங்கத்தின் பிரச்சார வாகனங்களாக மிக அப்பட்டமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்குப் பிறகே தன்னாட்சி கொண்ட பொது ஒலி/ஒளிபரப்பு நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து உருவானது. 1977ல் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி இதை எவ்வாறு செய்வது என்பதை ஆராய மூத்த பத்திரிகையாளர் பி ஜி வர்கீஸ் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. தி பிரிட்டிஷ் பிராட்கேஸ்டிங் கார்ப்போரேஷன் (பிபிசி) இந்தியாவிற்கான மாதிரி வடிவமாக கொள்ளப்பட்டது. வர்கீஸ் குழு அளித்த பரிந்துரைகளின் பேரில் பிரசார் பாரதி (பிராட்கேஸ்டிங் கார்ப்போரேஷன் ஆஃப் இந்தியா) சட்டம் வகுக்கப்பட்டு 1990ல் நிறைவேற்றப்பட்டது. பிரசார் பாரதி அமைக்கப்பட அடுத்து ஏழு ஆண்டுகள் ஆயின.