தேசத்தை தெரிவுசெய்வது
கேட்டலோனியா நெருக்கடி பிற தேசிய அரசுகளுக்கு முக்கியமான பாடங்களைத் தருகிறது.
‘‘தேசியப் பிரச்னை’’ என்பது ஐரோப்பாவில் தீர்க்கப்பட்டுவிட்ட விஷயம் என்றே பெரும்பாலும் கருதப்பட்டது. ஐரோப்பாவிற்கு வெளியே, அதிலும் குறிப்பாக ஐரோப்பாவின் முன்னாள் காலனி மற்றும் அரை காலனிய நாடுகளில் இது தீவிரமான மோதலுக்கும் வன்முறைக்கும் உரிய பிரச்னையாக இருக்கும் உண்மை அந்த நாடுகளின் பிற்படுத்தப்பட்ட தன்மையை காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் சொல்லிவந்தன. ஸ்பெயின் நாட்டின் வடகிழக்குப் பகுதியான கேட்டலோனியாவில் சமீபத்தில் நடக்கும் நிகழ்வுகள் ஐரோப்பாவின் இந்த கற்பனையை நொறுக்கியிருக்கிறது.
கேட்டலோனியா மக்கள் தனி நாடு அடைய விரும்புகிறார்களா என்பதை அறிய 2017 அக்டோபர் 1ஆம் தேதி ஸ்பெயினின் அரசமைப்பு நீதிமன்றத்தையும் மத்திய அரசாங்கத்தையும் வெளிப்படையாக மீறி கேட்டலோனியா வாக்கெடுப்பு நடத்தியது. இதனால் அரசு உடனடியாக வன்முறையில் இறங்கியது. இதற்குப் பிறகும் ஏராளமான மக்கள் வாக்களிக்க வந்ததால் ஸ்பானிஷ் காவல்துறை அமைதியா நடந்துகொண்ட மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். 42.3% மக்கள் வாக்களித்ததில் சுதந்திரத்திற்கு ஆதரவாக 90.9% வாக்குகள் கிடைத்தன. கேட்டலோனியாவில் சுதந்திரத்தை எதிர்க்கும் மக்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் ஸ்பெயின் அரசாங்கத்தின் வன்முறை அம்பலப்பட்ட நிலையில் இது கேட்டலோனியா தேசியத்திற்கு கிடைத்த தார்மீக வெற்றி. அரசாங்கத்தை அவமானத்திற்கு உள்ளாக்குவது என்பதே குடிமைசமூகம் நடத்தும் கீழ்படியாமை இயக்கத்தின் பின்னால் உள்ள தர்க்கம். இதை கடந்த காலத்தில் காலனியாதிக்கத்திற்கு எதிரான தேசியப் போராட்டங்கள் நடத்தியுள்ளன. தங்களது சொந்த ஏகாதிபத்திய மறைவைப் பற்றிய அறிவை ஐரோப்பிய அரசுகள் மேம்படுத்திக்கொள்வது நல்லது.