குழந்தைகளுக்கு பாதுகாப்பு தேவை
குழந்தை பாதுகாப்பு சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் நிகழ்வுகள் அம்பலப்படுத்தியுள்ளன.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
2017 செப்டம்பர் 8ஆம் தேதி குருகிராமில் உள்ள ரேயான் இன்டர்நேஷல் ஸ்கூல் என்ற பணக்கார பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த ஏழு வயதான சிறுவன் பள்ளிக் கழிவறையில் கொல்லப்பட்டிருந்தான். இதையடுத்து பள்ளிப் பேருந்தின் நடத்துனர் கைது செய்யப்பட்டார். பாலியல் வன்முறைக்கு குழந்தையை ஆட்படுத்த நடத்துனர் முயன்ற போது குழந்தை எதிர்த்ததால் கொன்றதாக சொல்லப்படுகிறது. பள்ளிக்கூட வளாகத்தில் பல பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததும் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளாததும், குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அரசமைப்பு கூறுவதை நடைமுறைப்படுத்த மாநில அரசு தவறியதும் நடந்துகொண்டிருக்கும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நகர்ப்புற பள்ளிகளில் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு தொடர்ந்து ஆளாகிவரும் நிகழ்வுகளில் மிக சமீபத்தியது குருகிராம் நிகழ்வு. இவ்வாறு குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாவது என்பது சிறுமிகள், சிறுவர்கள் இருவருக்குமே ஏற்படுகிறது என்பது முக்கியமான விஷயம். குழந்தைகளை பாலின ரீதியாக பாகுபடுத்தி காவல் காப்பதை விட அமைப்புரீதியாக இந்தப் பிரச்னைகளை அணுக வேண்டும். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 2014ல் 8904ஆக இருந்தது 2015ல் 14,913ஆக அதிகரித்தது. மூன்றில் இரண்டு குழந்தைகள் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்றும், 53.22% குழந்தைகள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களிலான பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் பற்றிய 2007ஆம் ஆண்டு ஆய்வு கூறுகிறது. 12,000 குழந்தைகளில் 50% தங்களது பள்ளிகளில்தான் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றும் 13 மாநிலங்களில் உடல்ரீதியாக வன்முறைக்கு ஆளான குழந்தைகள் 69%, இவர்களில் 54.68% பேர் சிறுவர்கள். பெரும்பாலான குழந்தைகள் இவற்றை யாரிடமும் சொல்வதில்லை என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. 2015 ஜூலை மாதம் ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான நிதி அறிக்கை இந்த மிக மோசமான நிலையை சுட்டிக்காட்டியிருக்கிறது.